இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: எங்கிட்ட மோதாதே

இந்து டாக்கீஸ் குழு

ரஜினி ரசிகனான ரவியும் (நட்ராஜ்), கமல் ரசிகனான நல்லபெருமாளும் (ராஜாஜி) நண்பர்கள். இருவரும் ரஜினி, கமல் நடித்த படங்கள் வெளியாகும்போது, கட்அவுட் வரைந்து பாராட்டுகளை அள்ளுகிறார்கள். ராஜாஜியின் தங்கை சஞ்சிதா ஷெட்டிக்கும், நட்ராஜுக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதலால் நண்பர்கள் இடையே மோதல் உருவாகிறது.

ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்போது தியேட்டரில் ரசிகர்களுக்குள் மோதல், அடிதடி எனப் பிரச்சினைகள் வெடிக்கின்றன. அந்தப் பகுதியில் திரையரங்கம் வைத்திருக்கும் ராதாரவியுடன் சேர்ந்து கட்டப் பஞ்சாயத்து அரசியல் செய்யும் விஜய்முருகனுக்கு இது பிடிக்காமல் ரசிகர்கள் இடையே பிரச்சினையை வளர்த்துவிடுகிறார். ஒரு கட் டத்தில் நடிகர்களின் கட்அவுட், ஓவியங்களை திரையரங்குகளில் வைப்பதற்குத் தடை உத்தரவும் பெற்றுவிடுகிறார்.

காதல் பிரச்சினை, தொழில் பிரச்சினை ஆகியவற்றுக்கு இடையே மாட்டிக்கொள் ளும் நட்ராஜ் என்ன செய்கிறார் என்பதே கதை.

1980-களில் திரைப்படங்கள் வெளியாகும் போது பிரதான தொழிலாக இருந்த கட்அவுட் கலாச்சாரத்தை நெல்லைப் பின்னணியில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராமு செல்லப்பா. படம் வெளியாகும்போது ரசிகர்கள் செய்யும் நற்பணிகள், நடிகர்கள் மீது ரசிகர்கள் கொண்டுள்ள பற்று போன்ற விஷயங்களைச் சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளார். ரசிகர்களின் உளவியலை மிகவும் நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார். அந்தக் காலத்தின் சூழலை துல்லியமாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

ஆனால், இவையெல்லாம் சேர்ந்து கதையாக உருப்பெறத் தவறுகின்றன. வெறும் பின்னணியாக மட்டுமே தங்கிவிடுகின்றன.

காதல் காட்சிகள் படத்தில் ஒட்டவில்லை. நண்பர்களின் மோதலைக் காட்டும் படம் அதைப் பின்தொடராமல், நாயகனுக்கும் அரசியல்வாதிக்கும் இடையிலான மோதலாக திசைமாறுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல், படம் ஒரே இடத்தைச் சுற்றி வருவதுபோல இருக்கிறது.

ராதாரவி, விஜய்முருகனின் செயல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. திரையரங்குக்குள் ராதாரவியை நட்ராஜ் எதிர்கொள்ளும் காட்சி பெரிதும் ரசிக்கும்படி இருக்கிறது.

அரசியலுக்காக ராதாரவி தன் நிலைப் பாட்டை மாற்றிக்கொள்ளும் இடமும், வசனங்களும் சிறப்பு. ரஜினி ரசிகனாக வரும் நட்ராஜ், ரஜினி போலவே நடிப்பதிலும், ஸ்டைலாக ஓவியம் வரைவதிலும் தனித்து நிற்கிறார். கமல் ரசிகனாக வரும் ராஜாஜி, நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயரின் பாத்திரங்களும், நடிப்பும் கதைக்கு துணை புரிவதாக இல்லை. நடராஜன் சங்கரனின் இசை, எம்.சி.கணேஷ் சந்த்ராவின் ஒளிப்பதிவு, அத்தியப்பன் சிவாவின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு உறுதுணை.

80-களின் சினிமா கலாச்சாரத்தை துல்லியமாகச் சித்தரிக்கும் இயக்குநர், அதை முழுமையான திரைப்படமாக வளர்த்தெடுக்கத் தவறிவிட்டார்.

SCROLL FOR NEXT