இந்து டாக்கீஸ்

சேலத்துக்குப் பெருமை சேர்க்கும் குறும்படத் திருவிழா

செய்திப்பிரிவு

மலைகள் சூழ்ந்த எழில் நகர் சேலம். தமிழக வரலாற்றிலும் சினிமா வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள இவ்வூர் ‘மாங்கனி நகர்’ என்று அழைக்கப்படும் பெருமை கொண்டது. அப்படிப்பட்ட சேலம் நகராட்சியாக உருவான தனது 150-வது ஆண்டு விழாவை தற்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கொடி பறந்த இந்நகரில், தமிழ் மன்னர்களின் ஆட்சி மட்டுமின்றி, பல்லவரும் சாளுக்கியரும் ஹொய்சாலரும் ராஷ்டிரகூடரும் மொகலாயரும் நாயக்கர்களும் சேலத்து மண்ணில் தங்கள் கொடிகளைப் பறக்க விட்டுள்ளனர்.

தோற்றமும் மாற்றமும்

இத்தனை முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்த சேலத்தில்,1857-ம் ஆண்டு ‘சுகாதார சபை’ என்ற பெயரில் காலனியரசின் ஆட்சி முறை அமலுக்கு வந்தது. மக்களிடமே சில நிர்வாகப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 1866-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நகராட்சி நிர்வாகம் சேலம் நகரில் தோன்றியது. அந்த நாளே சேலம் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சேலம் நகர சபையாக உருவான பிறகு அதன் மீது தேசத்தின் கவனம் விழுந்தது.

காந்தி, நேரு உள்ளிட்ட தேசத் தலைவர்கள் பலர், சேலத்துக்கு அடிக்கடி வந்து ஆலோசனைகள் நடத்திப் பல அரசியல் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். சுதந்திர போராட்ட களத்தில் எண்ணற்ற சூழல்களை சந்தித்து தேசிய அரசியல் வலுவாக செழித்து வளர சேலம் பங்காற்றியிருக்கிறது.

எத்தனையோ தேச பக்தர்களை நாட்டுக்கு தந்திருக்கிறது சேலம். அவர்களில் அகில இந்திய அளவில் புகழ்பெற்றவர்களில் விஜயராகவாச்சாரியார், ராஜாஜி ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள். சிறந்த தலைவர்களைப் பெற்றதால் சேலம் சந்தித்த ஏற்றமும் மாற்றமும் எண்ணிலடங்காதவை.

சேலம் நகராட்சி சேர்மனாக 1917 முதல் 1919 வரை ராஜாஜி சேவை செய்துள்ளார். அதன்பின் மதறாஸ் மாகாண முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், வங்கதேச ஆளுநராகவும், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

அங்கவை, சங்கவை…

சேலத்தில் உள்ள உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோயில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலையும், கோயில் அருகே அவ்வையார் சிலையும் நிறுவப்பட்டுள்ளன.

காரைக்குடி அருகே உள்ள பிறான் மலையை ஆண்ட பாரி மன்னரின் மக்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் அவ்வையார் கரபுரநாதர் கோயிலுக்கு அழைத்து வந்து, பகையாளியாய் இருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே அமைதியை ஏற்படுத்தி, பாரியின் மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

இதற்கான ஆதாரங்களில் ஒன்றாக சேலத்திலுள்ள உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோயிலின் அர்த்த மண்டப கல்தூணில் வில், புலி, மீன் கொடி பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் மக்கள் வியந்து பார்த்துச் செல்கின்றனர்.

கலை வளர்ந்ததும் இங்கேதான்!

சமூக, அரசியல் வரலாற்றில் இத்தனை சிறப்பு பெற்ற சேலம் தமிழ் திரையுலகின் பொற்காலத்தையும் சிருஷ்டித்துக் காட்டியது. 1935-ம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் தொடங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்பட 9 மொழிகளில் 117-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்து தென்னியாவின் ஹாலிவுட்டாகத் திகழ்ந்திருக்கிறது.

இங்கே ‘சதி அகல்யா’ படத்தில் தொடங்கி, காமெடி, கிரைம், இலக்கியம், ஜேம்ஸ்பாண்ட் என அன்று பிரபலமாக இருந்த அனைத்து வகைமையிலும் படங்கள் தயாரிக்கப்பட்டு தென்னிந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்தியிருக்கின்றன.

தமிழின் முதல் வண்ணப் படம் (அலிபாபாவும் 40 திருடர்களும்), முதல் இரட்டை வேடப் படம் (உத்தம புத்திரன்) தயாரானதும் இங்கேதான். பாரதிதாசன், அண்ணா தொடங்கி, டி.எம்.சௌந்தரராஜன், மனோரமா, இளையராஜா என ஜாம்பவான்கள் பலரைத் திரைக்கு அறிமுகப்படுத்தியதும் இதே சேலம்தான்.

கதை, வசனகர்த்தாவாக கருணாநிதியும், கதாநாயகனாக எம்ஜிஆரும், நடிப்புத் துறையில் வி.என். ஜானகியும், கவியரசராக கண்ணதாசனும் முழு வடிவம் பெற்றது இங்குதான். இவர்களைத் தவிர ஜெயலலிதா, கலைவாணர், சிவாஜி, சவுகார் ஜானகி, ஜெய்சங்கர், சிஐடி சகுந்தலா என பலரும் சேலத்தில் கலைத்துறைக்கு பணியாற்றியுள்ளனர்.

சேலம் ரத்னா ஸ்டுடியோவில் சம்பூர்ண ராமாயணத்தில் நடித்த என்.டி.ராமாராவ், அதன்பின் அம்மாநில முதல்வராக ஆனார். ஆந்திர மக்களால் கடவுளாகவே போற்றப்பட்டார்.

‘முதலாளி’ என்ற படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன், தேவிகா நடிப்பில் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே!’ என்ற பிரபலப் பாடல் சேலத்தின் அழகை அப்படியே பிரதிபலிக்கும் திரை ஆவணம். சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியின் இயற்கை எழில், காட்சிக்கும் பாடலுக்கும் இணைந்ததாகப் பேசப்பட்டது.

குறும்படத் திருவிழா!

இத்தனை சிறப்புகளைத் தன்வசம் கொண்ட சேலம் நகரின் 150-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சேலம் குறும்படத் திருவிழா’ வரும் 12-ம் தேதி சேலத்தில் நடக்கிறது. ‘இந்திய தேசிய கலை கலச்சாராம் பண்பாட்டு பாதுகாப்பு அறக்கட்டளை’ (இண்டாக்), பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் ‘சேலம் 150 குழு’ ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.

திரைப்படத் துறையில் சேலம் கலைஞர்கள், மாடர்ன் தியேட்டர்ஸ், ரத்னா ஸ்டுடியோ ஆகியவற்றின் பங்களிப்புகள் குறித்து மலரும் நினைவாக இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது.

பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஊர்வசி மற்றும் பிரபல சினிமாத் துறையினர் பலர் இதில் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மற்றும் சினிமா, நாடகத் துறையினருக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

வரும் ஜூன் 12-ம் தேதி சேலம் சோனா கல்லூரி அரங்கில் நடைபெறும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துவருகின்றனர்.

SCROLL FOR NEXT