இந்து டாக்கீஸ்

குழிக்குள் பத்து மணி நேரம்

செய்திப்பிரிவு

இன்றைய தேதிக்கு ஹாலிவுட்டின் நம்பர் ஒன் கதாநாயகி சான்ட்ரா புல்லக்தான்.கொஞ்சம் பழைய திரைப்படத்தைச் சொன்னால்தான் நினைவுக்கு வரும் என்றால் ‘ஸ்பீடு’ (Speed) திரைப்படத்தில் ஆனி போர்டராக இவர் நடித்ததைக் கூறலாம். நிறுத்தினால் வெடித்துவிடும் எனும்படியான பேருந்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த கதாநாயகி.

தனி வாழ்க்கை, நடிப்பு ஆகிய இரண்டிலுமே அடிக்கடி செய்தியில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் சான்ட்ரா ஒரு வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளரும் கூட. ‘தி பிளைன்ட் சைட்’ என்ற திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றவர் சான்ட்ரா. அந்தப் படம் வசூலையும் குவித்தது. விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

விளையாட்டு வீரர் ஒருவரின் சுயசரிதையை ஒத்திருந்த கதை இது. அமெரிக்க இன்டீரியர் டிசைனராக சான்ட்ரா நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் லியனே ராபர்ட்ஸ்.

தடே டோனோவன் போன்ற நடிகர்களுடனும் ட்ராய் அயிக்மேன் எனும் கால்பந்து வீரருடனும் நிறைய டேட்டிங் செய்தாலும், மோட்டார் சைக்கிள் வீரரான ஜெசே ஜேம்ஸ் என்பவரைத்தான் இறுதியில் திருமணம் செய்து கொண்டார் சான்ட்ரா. அனாதை இல்லத்திலிருந்து எடுத்து வளர்த்த தனது பத்து வயது வளர்ப்பு மகனை ஜேம்ஸுக்கு கல்யாணப் பரிசாகக் கொடுத்தார். ஜேம்ஸுக்கு ஏற்கனவே ஒரு மனைவி உண்டு. அவர் நீலப்படநாயகி ஜானைன் லின்டேமூல்டெர்.

பின்னர் ஜேம்ஸுடன் பல பெண்களுக்கு தொடர்ப்பு இருப்பது தெரியவர மனம் உடைந்த சான்ட்ரா ‘பிளைண்ட் சைட்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளில்கூட கலந்து கொள்ளவில்லை. 2010ல் சான்ட்ராவிடம் பொது மன்னிப்பு கோரினார் ஜேம்ஸ். எனினும் அவரை விவாகரத்து செய்து விட்டார் சான்ட்ரா.

இவரது நடிப்பில் இப்போது வெளியாகி இருக்கும் கிராவிட்டி எனப்படும் முப்பரிமாண சயின்ஸ் திரைப்படத்தில் விண்வெளி வீராங்கனையாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பின்போது பல நாட்களுக்கு ஒரு பெரும் குழிக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அதற்குள் நுழையவே கணிசமான நேரம் தேவைப்பட்டதால் பத்து மணி நேரம் வரைகூட அதில் இருக்க சம்மதித்தாராம். ஹெட்செட் மூலமாகத்தான் பிறருடன் பேச்சு வார்த்தை.

ஹாலிவுட் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்காக சிறந்த நடிகையாக சான்ட்ரா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT