வளரத் துடிக்கும் பாடலாசிரியர்களின் வேடந்தாங்கல் என்றால் அது அறிவுமதியின் அலுவலகமாக இருக்கிறது. அதேபோல உதவி இயக்குநர்களின் வேடந்தாங்கல் எது என்று கோடம்பாக்கத்தில் நின்று கேட்டால் ஒருமித்த குரலில் சொல்வது இணை இயக்குநர் வி.சி. விஜய்சங்கர் வீடு. வெற்றிப்பட இயக்குநர்களின் நம்பிக்கைக்குரிய முதன்மை இணை இயக்குநராக 15 படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கும் இவர் ‘ ஒரு கனவு போல’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
உங்களைப் பற்றி சிறு அறிமுகம்?
வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்றது கலவை என்ற ஊர். அதன் அருகேயுள்ள ‘வெள்ளந்தி’ என்ற கிராமம்தான் எனது சொந்த ஊர். சிறுவயது முதலே நான் எம்.ஜி.ஆர் படங்களின் ரசிகன். எனது இந்த முதல் படத்தை ‘என் திரைக்கலை அறிவை விரிவாக்கிய மானசீக ஆசானுக்கு’ என்று எம்.ஜி.ஆருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் மட்டுமல்ல; அவருக்குப் பிறகு பீம்சிங் தொடங்கி வாழ்வை நேசிக்கக் கற்றுத் தந்த இயக்குநர்களின் படங்கள் வழியே சினிமாவை நேசித்துச் சென்னைக்கு வந்தேன். ‘மறுமலர்ச்சி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாண்டவர் பூமி’, ‘அழகி’, ‘ஆட்டோகிராஃப்’, ‘23-ம் புலிகேசி’ ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என்று முதன்மை இயக்குநராக நான் வேலை செய்த படங்களைப் பெரிய பட்டியல் போடலாம்.
இந்தப் படங்களில் நான் வேலை செய்தேன் என்று சொல்வதே தவறு. என்னை நம்பி இயக்குநர்கள் பெரும் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் எனக்கு வேலை தெரியும் என்ற தொழில் சார்ந்த காரணத்தால் அல்ல, என் மீது வைத்த நம்பிக்கையால். அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்புடன் நான் கடமையாற்றிக்கொண்டே சென்றதில் காலம் பறந்தது. இடையில் பல வாய்ப்புகள் என்னைத் தேடிவந்தபோது ஏற்றுக்கொண்ட பணிக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்று மறுத்து வந்தேன். காரணம், சினிமாவில் நான் கஷ்டப்படவே இல்லை.
ஒரு இயக்குநருக்கான ஊதியத்தை எல்லோரும் எனக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து வந்த நிலையில் வாழ்க்கையை நடத்திச் செல்வதில் எனக்கு எந்த நெருக்கடியும் வந்ததில்லை. இந்தக் கலையை என் மானசீகக் காதலியாக எண்ணி அவளிடம் நான் கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் அன்பு, நட்பு, அறிவு ஆகியவைதான். கலைக்கும் காதலுக்கும் வைரமுத்து ஒரு உவமை சொல்வார். ‘ கலந்து போ… கரைந்து போ… காணாமல் போ…’ என்றார். நான் அப்படித்தான் சினிமா உலகில் கரைந்திருந்தேன். ஆனால் உன்னை இயக்குநர் ஆக்கியே தீருவோம் என்று அனைவருக்கும் பரிமாறிக்கொண்டிருக்கிற அன்பை காலமும் இந்தக் கலையும் எனக்குத் திரும்ப அளித்திருக்கின்றன.
சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் உங்கள் படத்தைப் பற்றி பேசாமல் ‘இன்றைய சமூகத்தில் நிலவும் அனைத்துச் சிக்கல்களுக்கும் சினிமாவே காரணம்’ என்று பேசியிருக்கிறீர்களே?
உண்மையைத்தானே பேச முடியும். இன்று நம் சமுகம் இத்தனை பாழ்பட்டுக் கிடப்பதற்குச் சினிமாதானே காரணம். சினிமா என்கிற ஊடகத்தைப் பொறுப்புடன் நாம் கையாளாத காரணத்தால்தான் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சுவாதி தொடங்கி பெண் பிள்ளைகள் பத்துபேரை நாம் இழந்திருக்கிறோம். சினிமா எப்போதேல்லாம் தரம் தாழ்ந்துவிடுகிறதோ அப்போதெல்லாம் சமூகம் அவலமாக மாறிவிடுகிறது. அரசியலும் அவலமாகிடும். பாம்பு ஒருவரைக் கடித்தால் பாதிப்பு அவருக்கு மட்டும்தான்.
சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உயிர்பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு மோசமான திரைப்படம் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது விஷத்தைக் கக்கிவிடும். அது மனித மனங்களில் நஞ்சாகக் கலந்துவிடும். அதனால்தான் திரைப்படத்தை நேர்மையாகக் கையாளுங்கள்; நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் அற்புதமான ஊடகம் அது என்பதை உணர்ந்து அதைப் பயன்படுத்துங்கள் என்று பேசினேன்.
‘ஒரு கனவு போல’ படத்தின் தலைப்பு கவிதையாக இருக்கிறது. படத்தின் கதையும் அப்படித்தானா?
வாழ்வியலும் உளவியலும் பின்னிப் பிணைந்த கதை. வாழ்க்கை என்பதே ஒரு கனவுதான். அந்தக் கனவுக்குள்தான் நாம் உண்மையை உணர்ந்து வாழ முன்வர வேண்டும் என்பதைக் கூறும் கதை. அதற்கு நட்பின் ஆழத்தையும் கற்பின் அர்த்தத்தையும் உணர்வுப்பூர்வமான களமாகக் கையாண்டிருக்கிறேன். மிக முக்கியமாகப் பெண்மையில் உள் உணர்வுகளை இதில் அதிகமாக அலசி இருக்கிறேன்.
மலையாளத்தின் விருது இயக்குநர் மதுபாலை அறிமுகப்படுத்துகிறீர்களே?
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் என். அழகப்பன், மலையாளப் படவுலகில் மோகன்லால், மம்முட்டி உட்பட 60 படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கும் மிகச் சிறந்த கலைஞர். ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்கு அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அப்போது என் மீது அன்புகொண்டு “விஜய்சங்கர் உனது முதல் படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவேன்” என்று உரிமையோடு சொன்னார். அவர்தான் இந்தக் கதையில் இடம்பெறும் கத்தோலிக்கப் பாதிரியார் கதாபாத்திரத்துக்கு மதுபாலை பரிந்துரைத்தார்.
அவர் விருது இயக்குநர் மட்டுமல்ல; அங்கே முக்கியமான நடிகரும் கூட. கதாநாயகியாக அறிமுகப்படுத்தி யிருக்கும் அமலாவும் அங்கிருந்தே வந்திருக்கிறார். ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் சமமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கி றார்கள். ஈ.எஸ்.ராம் மிகச்சிறந்த இசையை அளித்திருக்கிறார்.