இந்து டாக்கீஸ்

சினிமா எடுத்துப் பார் 96: என்றும் சினிமா

எஸ்.பி.முத்துராமன்

அடுத்து நாங்கள் எடுத்த குறும் படம், சென்னை மயிலாப்பூரில் உள்ள சில்ரன் கார்டன் பள்ளியின் வரலாற்றைக் கூறும் படம். அதன் நிறு வனர் வி.என்.சர்மா. இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எலன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கான நர்சரி பள்ளியாக அதைத் தொடங்கினர். 1937-ல் வெறும் 7 பேருடன் ஆரம்பித்த பள்ளியில் இன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். கல்வி யோடு சேர்ந்து தமிழ் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கத்தை விதைக்கும் பணியையும் செய்துவருகின்றனர்.

வகுப்புக்குள் யாரும் காலணி அணிந்துகொண்டு போகமாட்டார்கள். வகுப்பறை சரஸ்வதி வாழ்கிற இடம் என்று காலணிகளை வெளியில் வரிசை யாக அடுக்கி வைத்துவிட்டு உள்ளே போவார்கள். மாணவர்களின் ஒழுக்கம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதைப் பாருங்கள். இந்தப் பள்ளியில் பணி யாற்றும் ஆசிரியர்களின் குழந்தை களுக்காக காப்பகம் அமைத்தனர். மாண வர்களின் பற்களைப் பரிசோதிப்பதற்காக பல் மருத்துவமனை. அதற்கு மருத்துவ ராக பிரபல பல் மருத்துவர் ஜே.ஜே.கண்ணப்பன். அவருக்குத் துணையாக வாசுகி கண்ணப்பன். பல் மருத்துவத்தை பள்ளிக்கு கொண்டுவந்த முதல் பள்ளி சில்ரன் கார்டன் பள்ளி.


‘என்றும் சினிமா’ குறும்படத்துக்கான பேட்டியில் கருணாநிதி, சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோருடன் எஸ்பி.முத்துராமன்

நாங்கள் நடத்தும் கவியரசர் கண்ணதாசன் போட்டிக்கான தேர்வுகளை முனைவர் விஜய லட்சுமி ராமசாமியும், முனைவர் வாசுகி கண்ணப்பனும் இப்பள்ளியில்தான் நடத்துகின்றனர். ‘இடம்’ தரும் அவர்களுக்கு எங்கள் மனதில் எப்போதுமே ‘இடம்’ உண்டு!

அப்பள்ளி நிறுவனர் வி.என்.சர்மா - எலன் சர்மா தம்பதிக்கு கீதா, ருக்மணி பப்பு, சகுந்தலா சர்மா என 3 மகள்கள். அதில் கீதா, சகுந்தலா திருமணம் செய்துகொள்ளவில்லை. சகுந்தலா தற்போது தாளாளராக இருந்து சில்ரன் கார்டன் பள்ளியை நிர்வகிக்கிறார். ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகி ருக்மணி. அந்தப் பள்ளியில் படித்து பட்டை தீட்டப்பட்ட பலரும் இன்று பெரும்புள்ளிகள்.

ஏவி.எம் நிறுவனத்தின் 60 ஆண்டு காலப் பணியை மையமாக வைத்து ஒரு குறும்படம் எடுத்தோம். இதில் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் சிறு வயது முதல் சினிமா வாழ்க்கைப் பயணம் வரை பதிவு செய்தோம். காரைக்குடியில் உள்ள அவரது வீடு, அவரது அப்பா, அம்மா, ஏவி.எம் அண்ட் சன்ஸ் என்ற பல்பொருள் அங்காடி, தேவகோட்டையில் ஏவி.எம் ஸ்டுடியோ இயங்கிய வரலாறு, சென்னையில் உள்ள ஏவி.எம் ஸ்டுடியோ, அங்கு எடுக்கப்பட்ட படங்கள் ஆகிய பல விஷயங்களை காட்சிப்படுத்தினோம். இதை ரேவதி சங்கரன் செட்டிநாட்டு மொழியில் தொகுத்து வழங்கினார். அவர் ‘சகலகலா வல்லி’. இந்தக் குறும்படத்தின் சாரத்தை புத்தகமாகவும் வெளியிட்டோம். அந்தப் புத்தகத்தில் ஒரு குறுந்தகட்டையும் இணைத்துக் கொடுத்தோம். படிப்பதோடு, பார்க்கவும் முடிந்ததால் மக்களை இது நன்கு சென்றடைந்தது.

அதேபோல, ஏவி.மெய்யப்ப செட்டி யார் குறித்து 200 பிரபலங்களிடம் நேர் காணல் எடுத்து, குறும்படமாக்கினோம். தமிழகத்தின் 5 முதல்வர்கள் பணியாற்றிய நிறுவனம் ஏவி.எம் ஸ்டுடியோ. அதை நிறுவிய ஏவி.எம் பற்றிய குறும்படப் பதிவு என்றதும் பல பிரபலங்களும் தாமாக முன்வந்து நேர்காணல் கொடுத்தனர். அவர்கள் வழங்கிய கருத்துகள், ஏவி.எம்மின் பெருமைக்குப் பெருமை சேர்த்தன. இது பொதிகை தொலைக்காட்சியில் ‘என்றும் சினிமா’ என்ற பெயரில் 26 வாரம் தொடராக ஒளிபரப்பானது. இந்தக் குறும்படம் ஏவி.எம்முக்கு ஒரு ‘களஞ்சியம்’. இந்த இரு குறும்படங்களையும் எடுப்பதற்கு சரவணன் சார், குகன் ஆகிய இருவரும் எனக்கு வாய்ப்பு கொடுத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். இது என் தாய் வீட்டுக்கு நான் தந்த சீதனம்!

எல்லா படங்களையும் ஒரு குழுவாக இணைந்துதான் இயக்கினேன். படத் துக்கு என்னை ஒப்பந்தம் செய்யும்போதே என் குழுவையும் சேர்த்துதான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறிவிடுவேன். அதனால் நான் இயக்கிய 70 படங் களுக்கும் இந்தக் குழுவினர்தான் என் னுடன் பணியாற்றினர். நான் பெற்ற வெற்றிகளுக்கு இவர்கள்தான் பலம். ‘வெட்டி வா என்றால், கட்டிக்கொண்டு வருகிற திறமைசாலிகள்!’ அந்தந்தத் துறையில் அவர்கள் சிறந்த கலைஞர் களாக இருந்தார்கள். சுமார் 20 ஆண்டு காலம் என்னோடு இரவு, பகலாக கடுமையாக உழைத்தனர்.

சினிமா துறையில் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியமோ, ஊக்கத்தொகையோ, வருங்கால வைப்புநிதியோ தரப்படுவ தில்லை. அதனால் என் குழுவினருக்கு உரிய காலத்தில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதை ரஜினியிடம் கூறி, யூனிட்டுக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன். அவர் மகிழ்ச்சியோடு, ‘நிச்ச யம் செய்து கொடுக்கிறேன்’ என்று உறுதி கொடுத்தார். இதை சரவணன் சாரிடம் கூறி, ‘‘வியாபாரங்களை எல்லாம் நீங் களும், குகனும் பார்த்துக்கொள்ள வேண் டும்’’ என்று வேண்டினேன். அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.

ஏவி.எம். தயாரிக்கும் ‘எஜமான்’ படத் துக்கு ஆர்.வி.உதயகுமாரை இயக்குந ராக நியமிக்க முடிவானதும், சரவணன் சார் ரஜினியிடம், ‘‘முத்துராமனுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக் கிறீர்கள்? அதை செய்துகொடுத்தால் இந்த இயக்குநர் மாற்றத்தை முத்து ராமன் ஏற்றுக்கொள்வார்’’ என்று கூற அதன்படி ரஜினி எங்களுக்கு தேதி கொடுத்தார். அந்தப் படத்துக்காக கதையைத் தேடினோம்.

‘பாம்பே தாதா’ என்ற கன்னடப் படத்தை ரஜினி எங்களுக்கு போட்டுக் காட்டினார். ரஜினிக்கு பொருந்தக்கூடிய படம். ரஜினி என்னிடம், ‘‘இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரு மான பிரபாகரன் என் நண்பர். நான் அவரிடம் பேசி உரிமையை வாங்கித் தருகிறேன். அந்த வில்லன் ரோலுக்கு அவரையே நடிக்க வைக்கலாம்’’ என்று கூறி அந்த உரிமையை வாங்கித் தந்தார். அந்தப் படம்தான் ‘பாண்டியன்’. ஆக மொத்தம், அந்தப் படத்தில் ரஜினி நடிகராக மட்டுமல்லாமல் எங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாகவும் இருந்தார்.

கம்பெனிக்கு என்ன பெயர் வைப் பது என்று பேசும்போது, ‘‘உங்கள் தாயார் பெயர் என்ன?’’ என்று என்னிடம் கேட்டார் ரஜினி. ‘‘விசாலாட்சி’’ என்றேன். உடனே, ‘விசாலம் புரொடக்‌ஷன்ஸ்’ என்று பெயர் வைத்தார்.

‘பாண்டியன்’ படத்துக்கு திரைக் கதை, வசனம் எங்கள் பஞ்சு அருணா சலம். அவர், திரைக்கதை, வசனம் எழுதி முடித்ததும் 25.10.1992 ல் ‘பாண்டியன்’ படத்தின் தொடக்கவிழா. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக வந்திருந்து எங்களை வாழ்த்தியது. அந்தக் கூட்டத்தைப் பார்த்த ரஜினி, ‘‘நீங்கள் எவ்வளவு நண்பர்களைச் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று புரிந்துவிட்டது. இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு இத்தனை பேரும் வந்து வாழ்த்தணும். அதுதான் என் ஆசை!’’ என்றார். அந்தப் படத்தின் தொடக்க விழாவுக்குத்தான் என் தந்தையார் ராம.சுப்பையா உட்பட என் குடும்பமே முதன் முதலாக வந்து சிறப்பித்தது.

படத்துக்கு கதாநாயகி யார்? குஷ்புவை கதாநாயகியாக்க முடிவு செய்தோம். ‘‘இந்தப் படத்தில் நடிக்க எவ்வளவு பணம்?’’ என்று அவரிடம் கேட்டபோது சொல்ல மறுத்துவிட்டார். ஏன் மறுத்தார்?

- இன்னும் படம் பார்ப்போம்…

SCROLL FOR NEXT