இந்து டாக்கீஸ்

மாயப்பெட்டி: மரியாதைக்குரிய போராட்டம்!

ஆபுத்திரன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் திரண்டிருந்த மாணவர்களில் ஒருவரிடம் புதிய தலைமுறை சேனல் கருத்துக் கேட்க, ஒரு மாணவர் “சுப்பிரமணியம் சுவாமி எங்களைப் பொறுக்கிகள் என்கிறார். அவர்தான் சரியான. . .’’ என்று தொடங்க, இடைமறித்த சேனல் பிரதிநிதி கார்த்திகைச் செல்வன், ‘’இளைஞர்கள் எதிர்ப்பு என்பது மரியாதைக்குரியதாகவே தொடர்கிறது. அது அப்படியே தொடர்வதுதான் கண்ணியம்’’ என்றபடி அடுத்தவரிடம் மைக்கைக் கொடுத்தார். போராட்டம் கலவரத்துடன் முடிந்த நாளன்றும் அவர் மாணவர்களிடமும் காவல் துறையினரிடமும் கேட்ட கேள்விகள் நயத்தகு நாகரிகமும் துணிச்சலும் கொண்டவை.

மேற்படி சேனல் களத்தில் அரசியல்வாதிகளின் கருத்தைக் கேட்டபோது அங்கிருந்த இயக்குநர் கரு.பழனியப்பன், “நான் ஒரு விதத்தில் பொன் ராதாகிருஷ்ணனை மதிக்கிறேன். ஜல்லிக்கட்டு கொண்டுவர முடியாததற்கு மன்னிப்பு கேட்டு விட்டார். பிற அரசியல்வாதிகள் யாரும் அப்படிக் கேட்கவில்லை. அரசியல்வாதிகளே, நீங்கள் பேசும்போதெல்லாம் மாணவர்களின் எதிர்ப்புக் குரல் எழும்புவதைக் கவனியுங்கள். பேச்சை நிறுத்துங்கள்’’ என்றார். அவர் பேசும்போதும் மாணவர்களின் கேள்விக் கணைகள் குறுக்கிட்டுக்கொண்டிருந்தன.

போதாத காலம்!

காவல் நிலையமோ, மருத்துவமனையோ கதைக்களனாக இல்லாத தமிழ் நெடுந்தொடர்களைப் பார்க்கவே முடியாது என்று தோன்றுகிறது. சன் டிவியில் ‘மரதக வீணை’ தொடரில் “என்ன சார் லம்ப்பா அவர்கிட்டேயிருந்து பணம் வாங்கிட்டீங்களா?” என்று இன்ஸ்பெக்டரைக் கேட்கிறார் ஒருவர். அடுத்து இடம்பெற்ற ‘அபூர்வ ராகங்கள்’ தொடரில் கதாநாயகி காவல் துறை அதிகாரியைப் பார்த்து “பாம்புக்கு பல்லுல விஷம், போலீஸ்காரனுக்கு உடம்பெல்லாம் விஷம்கிறதை நிரூபிச்சுட்டீங்க” என்கிறாள். நெடுந்தொடர்களிலும் காவல் துறைக்கு இது போதாத காலம்!

உங்களுக்குத் தெரியுமா?

விஜய் சூப்பரில் இளையராஜாவின் பேட்டி. நிறையத் தத்துவம் பேசினார். “மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் எனக்கு இரண்டு ருத்திராட்ச மாலைகளைக் கொடுத்தார். அவற்றில் ஒன்றை லதா மங்கேஷ்கருக்கு அளித்தேன். ‘அவர் உங்களுக்குக் கொடுத்ததை எனக்குக் கொடுக்கிறீர்களே’ என்று தயங்கினார். ‘அவர் உங்களுக்காக இதைக் கொடுக்கவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன்’’ என்பது ஓர் உதாரணம். பின்னொரு பதிலில் “கண்ணதாசன், வாலி ஆகியோரின் இடத்தை வேறு ஒருவராலும் நிரப்பவே முடியாது” என்று கூறுகையில் அது அந்த இருவர் பற்றிய இளையராஜாவின் கருத்தாக மட்டும் தோன்றவில்லை.

SCROLL FOR NEXT