உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘கா பாடிஸ்கேப்ஸ்’ (Ka Bodyscape) என்ற மலையாளத் திரைப்படம் தணிக்கைக் குழுவின் பிடியில் சிக்கியிருக்கிறது.
இந்தப் படம், ஏப்ரல் மாதம் இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவுக்குச் சான்றிதழ் பெறுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டது. படத்தில் தன்பாலின உறவாளர்களைப் பற்றிய காட்சிகளும் பெண்களைப் பற்றி இழிவான வசனங்களும் இடம்பெற்றிருப்பதால் சான்றிதழ் அளிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது தணிக்கைக் குழு.
அதற்குப் பிறகு, ஜூலை 5-ம் தேதி மறுபரிசீலனைக் குழுவுக்கு இந்தப் படத்தைத் திரையிடப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், போதிய மொழி வல்லுநர்கள் தங்களிடம் இல்லையென்றுகூறி கடைசி நேரத்தில் திரையிடலை ரத்துசெய்திருக்கிறது தணிக்கைக் குழு. திரைப்படக் குழுவினர் நீதிமன்றத்தை நாடிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தத்திரையிடல் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஜெயன் செரியன்.
‘கா பாடிஸ்கேப்ஸ்’ திரைப்படம், தனிமனிதனின் பாலியல் தேர்வு உரிமைகள், மக்களின் குடியுரிமைகள், பெண்களுக்கு எதிரான சமூகப்போக்கு ஆகியவை பற்றிக் கேள்வியெழுப்பியிருக்கிறது. எகிப்திய புராணத்தில் ‘கா’ என்பது ஆன்மிக வாகனத்தைக் குறிக்கும் சொல். அதேமாதிரி, சமஸ்கிருதத்தில் ‘கா’ என்பது உடலின் ஒளியைக் குறிக்கும். அதனால் இந்தப் படத்துக்கு ‘கா பாடிஸ்கேப்ஸ்’ என்று பெயரிட்டதாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
எழும் கேள்விகள்
நியூ யார்க்கைச் சேர்ந்த ஜெயன் செரியன், தன்னுடைய முதல் படமான ‘பபிலியோ புத்தா’வை (Papilio Buddha) வெளியிடும்போதும் இதேமாதிரியான கசப்பான அனுபத்தைத்தான் இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவிடம் பெற்றிருந்தார். இப்போது, அவரது இரண்டாவது படமும் அதேமாதிரியான சிக்கலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பேஸ்புக்கில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டவுடன் படக் குழுவினர் இந்துத்துவவாதிகளிடமிருந்து மிரட்டலைச் சந்தித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் வலதுசாரி சக்திகள் இந்தியாவை வேகமாகப் பின்னோக்கி இழுத்துச்சென்றுகொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு போன்ற அரசின் அதிகார மையங்களும் தங்கள் முழு ஆதரவை வழங்கிவருகின்றன என்பதாகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
ஒரு படைப்பாளி சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை வீரியத்துடன் மக்களிடம் முன்வைப்பதை ஏன் தணிக்கைக் குழு தொடர்ந்து தடுக்க வேண்டும்? ‘உட்தா பஞ்சாப்’ பட வழக்கில் நீதிமன்றம், திரைப்படங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைக் கூறிய பிறகும், தணிக்கைக் குழு அதை அலட்சியம் செய்ய வேண்டிய காரணம் என்ன? ‘கா பாடிஸ்கேப்ஸ்’ படத்தைத் தணிக்கைக் குழு கையாளும் விதம் இப்படிப் பல கேள்விகளை எழுப்புகிறது.
படம் என்ன பேசுகிறது?
கேரளாவின் சமகாலப் பிரச்சினைகளைப் பின்னணியாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் செரியன். தன்பாலின உறவாளர்களான ஓவியர் ஹரிஷ், கபடி விளையாட்டு வீரர் விஷ்ணு, அவர்களுடைய சமூகச் செயல்பாட்டாளர் தோழி சியா என மூன்று பேரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்கிறது திரைக்கதை. தன்பாலின உறவாளர் என்பதற்காக இந்தியச் சமூகத்தில் தனிமனிதர்கள் எந்த மாதிரியான அடக்குமுறையைச் சந்திக்கிறார்கள் என்பதை ஹரிஷ், விஷ்ணு கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன.
சியாவின் கதாபாத்திரம், பெண்கள் குடும்ப அமைப்பிலும், பணியிடங்களிலும் சந்திக்கும் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. மாத விலக்கு குறித்துச் சமூகத்தில் நிலவும் ஒவ்வாமைகளைக் களைவதற்காகக் கேரளாவில் நடைபெற்ற ‘பிளடி நாப்கின் மூவ்மெண்ட்’ (Bloody Napkin Movement), இந்தியா முழுவதும் நடைபெற்ற ‘ஹேப்பி டு பிளிட்’ (Happy to Bleed) போன்ற பிரச்சார இயக்கங்களின் செயல்பாடுகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பணியிடத்தில் மாதவிடாயின்போது பெண்களை அவமானப்படுத்துவதை எதிர்த்து சியா ஒரு தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்கிறார். ஹரிஷின் ஓவியக் கண்காட்சி வலதுசாரிக் கும்பலால் தாக்கப்படுகிறது. இப்படிப் படத்தில் இடம்பெறும் காட்சிகளில் பலவும் சமகாலச் சம்பவங்களைப் பிரதிபலிக்கின்றன.
இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு என்பது நிலப்பிரபுத்துவ மனநிலையுடன், பெண்களுக்கு எதிரானதாகவும், தன்பாலின உறவாளர்கள் மீதான வெறுப்புடனும் செயல்படுவதாகச் சொல்கிறார் இயக்குநர் செரியன். தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த விழிப்புணர்வும் அவர்களது உரிமைகள் குறித்த புரிதலும் உலகம் முழுவதும் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் படத்துக்கு அனுமதி அளிப்பதில் இந்தியத் தணிக்கைக் குழு காட்டும் தயக்கம், அந்த அமைப்பு காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.