‘இறுதிச்சுற்று’ படத்துக்காக ஐஃபா விருது, தெலுங்கில் வெளியான ‘குரு’ படத்தைத் தொடர்ந்து தமிழில் ‘சிவலிங்கா’ வெளியீடு, ‘வணங்காமுடி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு என்று கடந்த சில வாரங்களாக சென்னை, ஹைதராபாத் என்று வட்டமடித்து வருகிறார் ரித்திகா சிங். ‘சிவலிங்கா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிடைத்த அவரிடம் உரையாடியதிலிருந்து...
தென்னிந்திய சினிமாவில் பிஸியாகிவிட்டீர்கள். இந்நேரம் சொந்த ஊர் மறந்துபோயிருக்குமே...
பிறந்து வளர்ந்த ஊர், பரிட்சயமான இடங்கள், சரளமா பேசுற மொழி, இப்படி மும்பையை விட்டு அவ்வளவு சீக்கிரம் எங்கேயும் போக மாட்டேன். ஆனா, இப்போ சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு வெளியூருக்கு வந்துவிட்டு அப்பப்போ திரும்பவும் சொந்த ஊருக்குப் போகிறேன். இது இன்னும் மும்பையை அழகா நேசிக்க வைக்கிறது. சொந்த ஊரை மறந்து இங்கேயே நிறைய வட இந்தியக் கதாநாயகிகள் செட்டில் ஆகிட்டாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்போ தமிழ்நாடு எவ்வளவு ஃபிரெண்ட்லி! ஐ லவ் தமிழ்நாடு.!
‘இறுதிச்சுற்று’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களுக்கு இப்போது வரைக்கும் பாராட்டுகள் வந்துகொண்டே இருக்கிறதே?
வெளியே செல்லும் இடங்களில் கிடைக்கிற அங்கீகாரமும் பாராட்டும் பெருமையா இருக்கு. இந்தப் படங்களில் நான் நல்லா நடிச்சிருக்கேன்னா அதுக்கு இயக்குநர்களோட ஒத்துழைப்பும் எனக்குக் கற்றுக்கொடுத்ததும் முக்கியமான காரணம். இந்தப் பாராட்டுல பாதி அவங்களைத்தான் போய் சேரவேண்டும். ஆனா ஒரு விஷயம், இந்த இரண்டு படங்களும் தொடர்ந்து நல்ல கதைகளை மட்டும் தான் தேர்வு செய்து நடிக்கணும்கிற உத்வேகத்தை கொடுத்திருக்கு. தமிழில் அமைந்த முதல் இரண்டு படங்களுமே நான் எதிர்பார்க்காமல் அமைந்ததுதான். எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளையும், அதுக்கான பாராட்டையும் எப்போதுமே மறக்க முடியாது. இதைக் காப்பாத்திகணும்.
‘சிவலிங்கா’ படத்தில் என்ன ரோல்?
அதிகம் சொல்ல முடியாது. இயல்பா வீட்டில் இருக்குற ஒரு பெண். இதுக்கு முந்தைய படங்களில் அதிகம் நடனம் ஆட வாய்ப்புகள் அமையவில்லை. இந்தப் படத்தில் அது தாராளம். ராகவா லாரன்ஸோடு சேர்ந்து சில இடங்கள்ல வேகமாக நடனம் ஆடியிருக்கிறேன். நடனக் காட்சி படப்பிடிப்பு முடிந்ததும் கடுமையான கால் வலி இருந்தது. அதெல்லாம் பொறுத்துக்கொண்டேன். படத்தின் இடைவேளைக் காட்சி திருப்பம் நன்றாக வந்திருக்கிறது. தமிழில் அடுத்தடுத்து வரும் படங்கள் ஒவ்வொரு விதமாக அமைவது என்னோட அதிர்ஷ்டம்தான்.
குத்துச் சண்டை வீராங்கனையாக இருந்த உங்களை இயக்குநர் சுதா நடிகையாக்கிவிட்டார். இப்போதெல்லாம் பாக்ஸிங் பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிகிறதா?
என் வாழ்க்கையை முழுமையாக மாற்றியவர் அவர். நான் இப்படி உங்கள் முன் பேட்டியெல்லாம் கொடுப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அதுதான் வாழ்க்கை. எப்போதுமே என்னால் ஒரு இடத்தில் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது. தினம் தினம் புதுமையான விஷயங்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படித்தான் பாக்ஸிங், நடிப்பு எல்லாவற்றையும் பார்க்கிறேன். அதனால் எதையும் மிஸ் பண்ண மாட்டேன். முக்கியமா நல்ல இயக்குநர்களை.
மற்ற நடிகர், நடிகைகள் நடித்த தமிழ்ப் படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகிறீர்களாமே?
தமிழ்ப் படங்கள் வழியாகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைவான நாட்கள்தான் இங்கே இருந்திருக்கிறேன். ஆனால், தமிழ் பேசுவதை புரிந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்தாச்சு. அடுத்துப் பேச வேண்டும். அதற்குத் தமிழ்ப்படங்கள் உதவியாக இருக்கின்றன. தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பும்கூட எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
பிடித்த ஹீரோக்கள்?
மாதவன், விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அடுத்தடுத்து சூர்யா, தனுஷ். இந்தப் பட்டியல் பெரியது.
உங்கள் முதல் இரண்டு பட நாயகர்கள் மாதவன், விஜய்சேதுபதி இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்களே?
இரண்டு பேருமே நல்ல நண்பர்கள். அறிவாளிகள். படத்தின் டீசர் பார்த்தேன். பிடித்திருந்தது. இருவரோடும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும்
பிட்னெஸ் குறிப்பு?
நல்லா சாப்பிடுவேன். அதே நேரத்தில் எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வேன் பிட்னெஸுக்காக சாப்பாட்டைக் குறைக்கிற விஷயம் எல்லாம் எனக்குச் சரி வராது. இரண்டையும் சரிசமமாக பார்த்துக்கொண்டால் போதும்.
அடுத்து?
கிராமத்துப் பெண்ணாக நடிக்க வேண்டும். அதுவும் நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தால்தான் ஏற்பேன். விரும்பிக் கற்றுக்கொண்ட பாக்ஸிங் விளையாட்டு அனுபவங்களைக் கதையாக எழுதும் எண்ணமும் உள்ளது. நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்.