எதிர்வரும் செப்டம்பர் 16-ம் தேதி தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேற இருக்கிறது. அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கியிருக்கும் ‘கர்மா’ என்ற தமிழ்த் திரைப்படம், திரையரங்குகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாக இணையத்தில் ரிலீஸாகிறது. சினிமா பைரசியின் குத்தகைக் கூடம் என்று விமர்சிக்கப்படும் இணையத்தில், இரண்டு சர்வதேசப் படவிழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றுத் திரும்பியிருக்கும் இந்தப் படத்தை நேரடியாக வெளியிட வேண்டிய அவசியம் எழுந்தது ஏன்? இயக்குநரைச் சந்தித்தோம்…
உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
கடந்த 15 ஆண்டுகளாக விளம்பரத்துறையில் ஒரு காப்பி ரைட்டராகவும் இயக்குநராகவும் தீவிரமாக இயங்கிவருகிறேன். சிறந்த விளம்பரங்களை உருவாக்கியதற்காக நூற்றுக்கும் அதிகமானமுறை விருதுபெற்றிருக்கிறேன். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. ‘கர்மா’ நான் தயாரித்து இயக்கியிருக்கும் முதல் படம். ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட்டில் சமீபத்தில் நடந்த சர்வதேசப் படவிழாவில் உலகத் திரைப்படங்களில் சிறந்த இயக்குநருக்கான விருதில் தகுதி பெற்றது. தவிர ஹாலிவுட் ஸ்கை பிலிம் பெஸ்டிவலிலும் சிறந்த திரைப்படத்துக்கான தகுதி பெற்றது.
சிறந்த திரைப்படத்துக்கான தகுதி இருந்தும் இதை நீங்கள் இணையத்தில் ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
இன்றைய தமிழ் சினிமா விநியோக நிலவரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதுவொரு சிறு பட்ஜெட் படம். திரையரங்கில் வெளியிட வேண்டிய எல்லாத் தகுதியும் இதற்கு இருக்கிறது. காரணம் இதுவொரு மர்டர் மிஸ்டரி படம். ஒரு முழுமையான த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. க்யூப் ஃபார்மேட்டில் படம் இருக்கிறது. என்றாலும் இதைத் திரையரங்குகளில் வெளியிட ஆகும் செலவு அதன் தயாரிப்புச் செலவைவிட பலமடங்கு அதிகம். அதனால்தான் நான் இணையத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
இன்று இணையத்தின் வளர்ச்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. இனி வரும் காலங்களில் இணையத்தில் நேரடியாகத் திரைப்படங்களை வெளியிடுவது சர்வ சாதாரணமாகலாம். அதற்கு முன்னோடியாக இருக்க விரும்பினேன். இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததா? தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு கிடைத்ததா?
திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்க்கவில்லை. நான் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்தப் படத்தை இணையத்தில் நேரடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டபோது, மறுக்காமல் எல்லா உதவிகளையும் செய்தார்கள்.
இந்தப் படத்தை வெளியிட பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
‘கர்மா’ ஒரு சோதனை முயற்சி. தவிர இதுவொரு இண்டிபெண்டெண்ட் படம். பாலிவுட்டின் வணிகப் பாதையிலிருந்து விலகி பல இண்டிபெண்ட்டெண்ட் படங்களைத் துணிந்து படமாக்கி வெற்றிகள் கொடுத்த மாற்று சினிமா இயக்குநர். அவர் இந்தப் படத்தின் இணைய வெளியீட்டைத் தொடங்கி வைப்பதுதான் சரியாக இருக்கும் என விரும்பினேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
இணையத்தில் நேரடியாக வெளியாவதால் உங்கள் படம் உடனடியாக பைரேட் செய்யப்பட்டுவிடும் என்று கவலைப்படவில்லையா?
நிச்சயமாக இல்லை. தரமான புதிய முயற்சிகளைத் தமிழ் ரசிகர்கள் எப்போதுமே நேர்மையாக அங்கீகரித்திருக்கிறார்கள். தவிர இந்தப் படங்களில் இணைய வெளியிட்டு உரிமையைச் சர்வதேச நிறுவனங்களான ‘ஐ டியூன்ஸ்’, கூகுள் ப்ளே, அமேசான் வீடியோ ஆகியவை வெளியிடுகின்றன. என் படத்தை பைரேட் செய்ய விரும்புகிறவர்கள் நேரடியாக இந்த நிறுவனங்களுடன் மோத வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே கர்மாவுக்கு அந்தப் பிரச்சினை வராது. இந்தியாவிலிருந்து 25 ரூபாய் செலுத்திப் பார்க்க முடியும். மற்ற உலக நாடுகளிலிருந்து அங்கு நடைமுறையில் இருக்கும் தியேட்டர் கட்டணத்தில் பார்த்துவிடலாம்.
இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழு?
படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் வி.பி. சிவாநந்தம். வினோத் பாலன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப் படத்துக்கான டைட்டில் பாடலை எழுதி, பாடியிருக்கிறார். எ.வி.கணேசன் இசையமைத்திருக்கிறார்.