‘‘கடந்த ஆண்டைப் பொறுத்தவரை, நான் மிகவும் மெனக்கெட்டு நடித்த 'கெத்து' சரியாகப் போகவில்லை. ஆனால் எனக்கு மிகவும் நல்ல பெயரையும், லாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்த படம் 'மனிதன்'. அப்படம் கொடுத்த உற்சாகத்தோடு 2017-ல் ரசிகர்களை மகிழ்விக்க 'சரவணன் இருக்க பயமேன்' படத்தோடு களமிறங்கியாச்சு’’ என்று பேசத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
எழில் - உதயநிதி கூட்டணியிடம் என்ன எதிர்பார்க்கலாம்?
எழில் இயக்கிய கடைசி மூன்று படங்களின் பாணியிலேயே இப்படமும் இருக்கும். நான் நடித்த படங்களில் அமானுஷ்ய சக்தி இதுவரை இடம்பெற்றதில்லை. அது உட்பட இதுவரை நான் நடித்த படங்களில் இல்லாத பல விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன. ஆனால் அதை வைத்து பயமுறுத்தாமல் காமெடியாக செய்திருக்கிறோம். முதல்முறை சூரியோடு நடித்துள்ளேன்.
இந்தப் படத்துடன் சேர்ந்து மூன்று படங்களில் சூரியுடன் நடித்து வருகிறீர்கள். ரசிகர்களுக்கு போரடித்துவிடாதா?
அதற்கு வாய்ப்பே இல்லை. முதலில் இயக்குநர் கௌரவின் படத்தில்தான் இருவரும் ஒப்பந்தமானோம். ஆனால் மூன்றுபடங்களுமே வெவ்வேறு கதைகள், கதாபாத்திரங்களில் சூரி வருகிறார். 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் எனக்கு வில்லன், 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் எனது நண்பர், இயக்குநர் கௌரவ் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் அவருடைய பாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது.மூன்று படத்திலுமே கூடவே வருகிற நண்பர் கதாபாத்திரம் என்றால் கண்டிப்பாக போரடித்திருக்கும். இருவருமே யோசித்து, பேசித்தான் மூன்று படங்களையுமே செய்தோம்.
படங்களை வாங்கி விநியோகிப்பதிலிருந்து முற்றாக விலகிவிட்டீர்களா?
இப்போதும் நிறைய படங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தற்போது படம் வாங்கி வெளியிடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் சினிமா அந்தளவுக்கு மோசமாகப் போய்விட்டது. தற்போது படம் தயாரித்து வெளியிடுவதே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. 95 சதவிகிதப்படங்கள் தோல்வியடைகின்றன. திருட்டு வீடியோ, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்டவையால் சினிமாவுக்கு கடும் பாதிப்பு. எனக்குப் பிடித்து, வணிக ரீதியாக இந்தப் படம் நல்லா போகும் என்று தெரிந்தால் மட்டுமே செய்வோம்.
வரிச்சலுகை பிரச்சினையில் அதிமுக அரசைக் கடுமையாக சாடினீர்கள். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ‘இரும்பு பெண்’ என ட்வீட் செய்தீர்கள்! நேரிலும் அஞ்சலி செலுத்தினீர்களே!?
தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்காது என்றாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்லவா. அவரிடம் நிறைய விஷயங்கள் பிடிக்காது என்றாலும் ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் அதிகம். அது ஒரு பிரமிப்பான விஷயம். அந்தவொரு சிறு மரியாதை எனக்கு எப்போதுமே உண்டு. அவருடைய பெயரைக் கூட நான் சொல்ல மாட்டேன், எப்போதுமே சி.எம் என்றுதான் சொல்வேன். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, சரியாகித் திரும்பிவிடுவார் என்றுதான் எண்ணினேன். அவருடைய திடீர் மரணம் எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நடிகனாகவும், கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற முறையில் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் எனத் தோன்றியது. அப்பாவிடம் கேட்டேன், “கண்டிப்பாகப் போய் பார்த்துவிட்டு, மாலை வைத்துவிட்டு வா” என்றார்.
வரிச்சலுகை பிரச்சினை இனி முடிவுக்கு வரும் என நினைக்கிறீர்களா?
ஏப்ரல் மாதத்திலிருந்து அனைத்துப் படங்களுக்குமே 10 சதவீதம் வரிச்சலுகை என்ற ஆணை வரப்போவதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வரிச்சலுகைக்கு அதிகாரிகள், அதே ஆட்கள்தானே இருக்கிறார்கள். ஆகையால் தரமாட்டார்கள். இனிமேல் நடக்கவுள்ள விஷயம் இப்படித்தான் இருக்கும் எனச் சொல்ல முடியாதே. வரிச்சலுகை கொடுக்கவில்லை என்றால், மறுபடியும் நீதிமன்றம் சென்று வாங்கிவிட வேண்டியதுதான்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என எதிலுமே ஈடுபாடு காட்டுவதில்லை. தயக்கமா? பயமா?
(சிரித்துக் கொண்டே) தயக்கம், பயம் என எதுவுமே கிடையாது. விஷால் எனக்கு நெருங்கிய நண்பர் என்பது வேறு விஷயம். அவர் நடிகர் சங்கத்தில் செயலாளராக இருப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். விஷாலோடு தொடர்ச்சியாகப் பேசுவேன். அது முழுக்க எங்களுடைய நட்பு, படங்கள் , தனிப்பட்ட விஷயங்கள் பற்றி மட்டுமே இருக்கும். நடிகர் சங்கம் தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டதே இல்லை. கிரிக்கெட் போட்டிக்குக் கூட என்னை அழைத்தார். நான் வரமாட்டேன் என்று சொல்லியவுடன் உன் இஷ்டம் எனச் சொல்லிவிட்டார். எங்கள் இருவருக்குமே எங்களைப் பற்றி தெரியும்.
தயாரிப்பாளர் சங்கத்தில் எதற்கும் நான் போய் நின்றது கிடையாது, கேட்டதும் கிடையாது. அவர்களுடைய உதவியை நான் எதிர்பார்ப்பதும் கிடையாது. அதே போல தயாரிப்பாளர் சங்கமும் என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனக்கு அதில் விருப்பமில்லை. என் வேலையை நான் பார்க்கிறேன், அவர்களுடைய வேலையை அவர்கள் பார்க்கிறார்கள்.
உங்களுடைய நண்பர் சந்தானம் பெரிய நாயகனாக வளர்ந்துவிட்டார். அவருடன் மீண்டும் நடிப்பீர்களா?
கண்டிப்பாக. உதயநிதி படம் என்றால் கண்டிப்பாக நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார் சந்தானம். மறுபடியும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மாதிரியான படம் செய்ய முடியாது. அவரும் ஒரு பெரிய நடிகராக வந்துவிட்டார். அதற்கான பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. நடக்கும் என நம்புகிறேன்.