இந்து டாக்கீஸ்

மொழி கடந்த ரசனை 31: பூக்கள் மலரும்போதெல்லாம்...

எஸ்.எஸ்.வாசன்

திரைப்படம் என்பது நிகழ்காலத்தைக் காட்டும் கண்ணாடியாக மட்டுமே அல்ல. இனி எப்போதும் திரும்பாத கடந்த காலத்தின் நினைவுகளை ஆவணப்படுத்தும் அதிசயமாகவும் திகழ்கிறது. ‘வன்முறை நிகழாத நாளே இல்லை’ என்று இன்று மாறிவிட்ட காஷ்மீர் முழுவதும், ஒரு சமயம் புன்சிரிப்பு பொங்கும் இன்முகம் என்ற வண்ணப் பூக்களே பூத்துக் குலுங்கியது. டால் ஏரியையும் அதில் மிதக்கும் படகு வீடுகளையும் அடிப்டையாகக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதே தயாரிப்பாளர்களின் லட்சியமாக அப்போது இருந்தது. அநேகமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கைத் திரைக்களமாக்கி எடுக்கப்பட்ட எல்லாப் படங்களுமே வெற்றியடைந்தன.

அந்த வரிசையில் வெளிவந்த ‘ஜப் ஜப் ஃபூல் கிலே’ (எப்பொழுதெல்லாம் பூக்கள் மலர்கின்றனவோ) என்ற படத்துக்குச் சில கூடுதல் சிறப்புகள் இருந்தன. பாடகராகப் புகழ்பெற வேண்டும் என்ற கனவுடன் பம்பாய் வந்த ஆனந்த் பக்ஷி, பாடலாசிரியராக வெற்றிபெற்றுத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது இந்தப் படம் மூலமே. படகு வீடு ஓட்டும் காஷ்மீர் பாமரனுக்கும் விடுமுறைக்கு அங்கு வந்து தங்கும் படித்த செல்வச் சீமாட்டிக்கும் ஏற்படும் மென்மையான காதலைச் சொல்லும் படம் இது. வழக்கமான எதிர்ப்புகளுக்குப் பிறகு, திரை இயல்புக்கு மாறான முறையில் அந்தக் காதல் நிறைவேறும் விதமும் ஹீரோயிசம் இல்லாத நாயகனாக சசிகுமார் வெளிப்படுத்திய யதார்த்தமான உடல் மொழியுடன் கூடிய நடிப்பு, செருக்கான பார்வை, முறுக்கான முகவெட்டு, இயற்கையாகவே வரப்பெற்ற நந்தாவின் வித்தியாசமான நடிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆனந்த் பக்ஷியின் எளிய பாடல் வரிகள், கல்யாண்ஜி-ஆனந்த்ஜியின் மிகச் சிறந்த இசை, முகமது ரஃபியின் குரல் வளம் ஆகியவை ஒன்றிணைந்து சங்கமித்த படம் இது.

இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் ‘மொழி கடந்த ரசனை’யாக இப்படம் பெரும் வெற்றி அடைந்தது. ஆஸ்திரியா நாட்டின் ஒரு திரை அரங்கில் வாரத்தின் இரண்டு நாட்கள் என ஓராண்டு முழுவதும் இப்படம் திரையிடப்பட்டது. இந்தியாவின் பல நகரங்களில் 50 வாரங்களுக்கு மேல் ஓடிப் பொன்விழா கண்ட இந்தப்படம் சென்னையிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் ரிஷிகபூரின் சிறப்பு அடையாளமாக மாறிய ‘Boyish Look’ என்ற வெகுளித் தோற்றத்தில் படத்தின் நாயகன் சசிகுமார், அக்கால காஷ்மீர் பாமரனின் பிம்பத்தை அப்படியே திரையில் கொண்டுவந்தார்.

இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகப் பெரும் வெற்றியடைந்தன. பாடல்களின் வெற்றியே படத்தின் வெற்றி எனக் கருதப்பட்ட இப்படத்தின் ‘பர்தேசியோன் ஸே அக்கியான் மிலானா’ என்று தொடங்கும் பாடலை மகிழ்ச்சியுடனும் சோகத்துடனும் நாயகன் இரு முறை பட, நாயகியும் ஒரு முறை பாடுகிறாள். இது தவிர ‘யஹான் மே அஜ்னபி ஹூம்’ என்ற முகமது ரஃபி பாடல், ‘ஏக் தா குல், அவுர் ஏக் தீ புல்புல் தோனே சமன் மே ரஹத்தேதே’ என்ற வித்தியாசமான பாடல் ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை.

சாருகேசி ராகத்தின் சாயலில் அமைந்த ‘பர்தேசியோன் ஸே அக்கியான் நா மிலானா’ என்ற சோக ரசப் பாடலின் பொருள்:

வெளியூர் மனிதர்களுடன்

விழிகளைக் கலக்காதே

வெளியூர் மனிதர்கள் ஒருநாள்

விட்டுச் சென்றுவிடுவர்

காதலில் ‘எனது’ என்பது

எப்போதும் இல்லை

கருங்கற்கள் கண்ணீர் விட்டு அழுவதில்லை

இவர்களுக்காக நீ எப்போதும் அழாதே

இவர்களின் காதல் மின்னும்

தாரகை இல்லை

காகிதப் பூக்களே அவை

அதன் ஒரு மொட்டேனும் மலராகுமா?

வெளியூர் மனிதர்களுடன்

விழிகளைக் கலக்காதே

வெளியூர் மனிதர்கள் ஒருநாள் விட்டுச் சென்றுவிடுவர்

இதே பல்லவியில் அமைந்த மகிழ்ச்சியான பாடலின் அனுபல்லவியின் பொருள்.

இந்த அழகான வசந்த காலம் வரும்போதெல்லாம்

ஏதாவது ஒரு சுகமான பதிவைத்

தந்து விடுகிறது

அந்த மாதிரி அனுபவம் ஏற்பட

ஆகும் ஆண்டுகள்

சரியாகவே எவரோ சொன்னார்

பறவை என என்னை

இரவில் வீட்டில், எழுந்து எங்கோ பகலில்

இன்று இங்கே, நாளை அங்கே

எப்போதெல்லாம் இங்கு பூக்கள் மலர்கின்றனவோ

அப்போதெல்லாம் இந்தப் படகோட்டியைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT