இடதுசாரிப் பின்னணியை உள்ளடக்கமாகக் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வெளிவருவது கேரளத்தில் மாத்திரமே. அதற்கான சமூகக் காரணங்களில் முக்கியமானது மலையாள சினிமாவில் இவ்வகைத் திரைப்படங்களுக்காகத் தரப்பட்டுவரும் இடம். ‘நிங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி’ ‘அம்மே அறியான்’ ‘ஈ நாடு’ ‘ஆரண்யம்’ ‘லால் சலாம்’ ‘இரத்த சாட்சிகள் ஜிந்தாபாத்’, ‘சந்தேஷம்’, ‘அத்வைதம்’, ‘பாலேறி மாணிக்கம்’, ‘லெப்ட் ரைட் லெப்ட்’, என நீளும் சிவப்புப் படங்களின் பட்டியல் பெரியது.
சமீபத்தில் சித்தார்த் சிவா இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாய் நடித்து வெளியாகியிருக்கும் படம் ’சகாவு’. சகாவு என்றால் தோழர் என்று பொருள். இடதுசாரி இயக்கத்தில் பணியாற்றும் கிருஷ்ணகுமார் என்ற இளைஞர், கட்சியில் ‘முன்னேற’த் துடிக்கிறார். அதற்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கும் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூத்த தோழருக்கு ரத்தம் கொடுக்கப்போய் ஒரே தினத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் ஆகிறார்.
படம் முழுக்கப் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எதுவுமே நிகழவில்லை, கோஷங்கள் போடுகிறார்கள், முதலாளிகளை முறைக்கிறார்கள், ஆளற்ற மலைச்சாலைகளில் செங்கொடிகளோடு ஊர்வலம் போகிறார்கள். மாண்டேஜ் காட்சிகளில் ஒப்பந்தங்களில் முதலாளிகளிடம் கையெழுத்து வாங்கி போராட்டம் வெற்றி பெற்றதாய் அறிவிக்கிறார்கள். சகாவு கிருஷ்ணகுமாரைத் தூக்கிக்கொண்டு சக சகாவுகள் ஓடுகிறார்கள்.
சமகாலம், கடந்த காலம் என இரண்டு காலங்களில் பயணிக்கிறது கதை. கதைதான் திரைப்படம் என்று உறுதியாய் சொல்லவே முடியாது. இரண்டு காலங்களிலும் பிழையாகவே பயணிக்கிறது படம்.
சமகால கேரள சிபிஎம் கடும் நெருக்கடி யில் இருக்கிறது. குண்டாயிசம், பிஜேபியுடனான மோதல், முதலமைச்சர் பினராயி விஜயன் மீது சிபிஐ வழக்கு என்பது சமகாலம். கடந்த காலம் எனும்போது தேவிகுளம், பீர்மேடு, போன்றவற்றை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டத்தில் நடக்கும் இந்தக் கதையில் ஒரு தமிழர் கூட இல்லை. மூணாறு பகுதியை உள்ளடக்கிய பழைய இடுக்கி மாவட்டம் என்பது முழுக்க முழுக்கத் தமிழர்களின் இரத்தத்தால் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற மலையாள நாவலாசிரியர் எஸ்.கே. பொற்றே காடின் நாவலே அதற்குச் சாட்சி. வரலாற்றை அப்படியே திரிக்கிறார்கள். ஏற்கனவே ‘அயோபிண்டே புஸ்தகம்’ என்ற மலை யாளத் திரைப்படம் இதே தவறைச் செய்தது.
மலையாள சினிமாவில் சிறந்த இடதுசாரி சினிமாக்கள் புகழ்பாடும் வகைப் படங்களாக பெரும்பாலும் இருந்ததில்லை. இடதுசாரிக் கட்சியின் சிக்கல்களை, நடைமுறைக்கும் சித்தாந்தங்களுக்கும் உள்ள இடைவெளிகளை, வறட்டுத்தனங் களை, போலித்தனங்களைக் கூர்மையான பகடிகளோடு சித்தரிக்கும் ‘சந்தேஷம்’, ‘பாலேறி மாணிக்கம்’ போன்ற திரைப்படங்கள் இதற்கு ஆகச் சிறந்த உதாரணங்கள்.
ஏற்கெனவே அங்குள்ள சிறந்த இடதுசாரி சினிமாக்கள், அவற்றின் குற்றம் குறைகளோடு அப்பட்டமாய் முன்வைத்ததனாலேயே இன்றைக்கும் அவை கொண்டாடப்படுகின்றன. ‘சந்தேஷம்’ என்ற திரைப்படத்தின் பெயரைச் சொன்னவுடனேயே சிரிக்காத மலையாளிகள் மிகக் குறைவு. ‘பாலேறி மாணிக்கம்’ என்றென்றைக்கும் அவர்களுடைய விவாதங்களில் உயிர்ப்போடு இருக்கிறது.
‘சகாவு’ திரைப்படம் முழுக்க முஷ்டியைத் தலைக்குமேல் உயர்த்தியபடி “இன்குலாப்.. ஜிந்தாபாத்.. இன்குலாப்.. ஜிந்தாபாத்..” என்று சகாக்கள் எழுப்பும் கோஷங்கள் மட்டும் ஒலிக்கின்றன.