இந்து டாக்கீஸ்

கபாலி பொறிகள்

செய்திப்பிரிவு

டீஸருக்கான வசனம்!

‘கபாலி’ முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், எடிட்டிங் பணிகளுக்காகக் காட்சிகளை ப்ரவீனிடம் கொடுத்திருக்கிறார்கள். அப்போது அவர் ரஃப் கட் எனப்படும் முதல் படத்தொகுப்பு பிரதியைத் தயார் செய்திருக்கிறார். அப்போதுதான் டீஸரில் ரஜினி பேசும் காட்சியை எடிட் செய்திருக்கிறார். அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் “இதுதான் டீஸருக்குப் பொருத்தமான வசனம். இதை வைத்து டீஸர் பண்ணலாம்” என்று ரஞ்சித்துக்குக் குறுந்தகவல் அனுப்ப, அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

விருது நிச்சயம்!

துப்பாக்கி சுடும் காட்சியின் படப்பிடிப்பின்போது, கோட் அணிந்து வந்துவிட்டார். ஆனால், கோட்டின் காலர் மடிக்காமல் இருந்திருக்கிறது. இதை இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவருமே எப்படிப் போய்ச் சொல்வது என்று தயங்கியிருக்கிறார்கள். இறுதியாக ரஞ்சித் போய் “கோட்டின் காலரை மடிக்க வேண்டும் சார்” என்று கூற “ஏன் இப்படி இருந்தால் என்ன?” என்று கேட்டிருக்கிறார் ரஜினி. “இல்ல சார்… முழுக்க கோட் காலரை மடித்தபடிதான் நடித்திருக்கிறீர்கள். இதிலும் அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கூற உடனடியாக ரஜினி கோட் காலரை மடித்துவிட்டு இயக்குநரை அழைத்து, “உங்களுக்கு விருது நிச்சயம் சார்” என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினி பாராட்டு

‘கபாலி’ படப்பிடிப்பில் ரஜினியுடன் நடித்த தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலரும் வியந்து கூறுவது அவருடைய பாராட்டைத்தான். ரித்விகாவின் நடிப்பைப் பார்த்து, “என்னப்பா. இந்தப் பொண்ணு இப்படி நடிக்குது... அய்யோ” என்று படப்பிடிப்புத் தளத்திலேயே அனைவரது முன்னிலையிலும் பாராட்டியிருக்கிறார். தினேஷின் வசன உச்சரிப்பு, கலையரசனின் நடிப்பு என எது அவருக்குப் பிடித்திருந்தாலும் உடனடியாகப் பாராட்டியிருக்கிறார். கலையரசனை முதல் நாள் பார்த்த உடனே, ‘மெட்ராஸ்’ அன்பு பாத்திரத்தைப் பற்றி அவ்வளவு புகழ்ந்து பேசியிருக்கிறார் ரஜினி.

இன்னொரு டேக்கா?

பல காட்சிகளில் நடித்துவிட்டு, ரஞ்சித் இன்னொரு டேக் கேட்டுவிடுவாரோ என்று பயந்திருக்கிறார் ரஜினி. ஜான் விஜய்யுடன் முதல் காட்சி நடித்து முடித்துவிட்டு “என்னங்க… இப்படிப் பார்க்கிறார். இன்னொரு டேக் கேட்டுவிடுவாரோ? 14 வருடங்களில் யாருமே என்னிடம் இன்னொரு டேக் கேட்டதே இல்லை” என்று ஜான் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. அப்போது ரஞ்சித்தும் எழுந்து நடந்து வர, ரஜினி நேரடியாகச் சென்று “இதுதான் நான் நடித்ததிலேயே சிறப்பான நடிப்பு. இன்னொரு டேக் மட்டும் கேட்டுவிடாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.

இது ரஞ்சித் படம்

படம் முடித்தவுடன், ரஜினிக்குப் படத்தைப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். படம் பார்த்து முடித்தவுடன், “ரஞ்சித் சார்… என்ன சொன்னீங்களோ அப்படி எடுத்திருக்கீங்க. இது ரஞ்சித் படம்” என்று பாராட்டியிருக்கிறார்.

தொகுப்பு: இசக்கிமுத்து

SCROLL FOR NEXT