இலங்கை உள்நாட்டுப் போரைக் கதைக்களமாகக் கொண்டு, ஒரு பெண் போராளியின் உள்ளிருக்கும் தாய்மையின் தவிப்புகளை ‘தி டெரரிஸ்ட்’ என்ற படமாக இயக்கியவர் சந்தோஷ் சிவன். இந்த முறை, இறுதி யுத்தம் என்று சொல்லப்படும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சண்டைக்குச் சற்று முன்னும், அதன் பிறகும் என்று கதைக்கான காலகட்டத்தைத் தேர்ந்துகொண்டிருக்கிறார்.
உணர்வுபூர்வமான இலங்கை இனப் பிரச்சினையை முடிந்தவரை நடுநிலையாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் சிவன். முள்ளிவாய்க்கால் சண்டையில் பலியானது போக எஞ்சியிருக்கும் மக்கள், முள் வேலி முகாம்களில் இருக்க, அங்கிருந்து தப்பித்து பலர் கனடா நாட்டுக்குக் கள்ளத் தோணிகளில் சென்றுவிட முயல்கிறார்கள். இந்தியக் கடல் எல்லையைக் கடக்க முயலும்போது ரஜினி என்ற இளம்பெண்ணுடன் அந்தக் குழுவினர் இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டு, ராமேசுவரம் அகதிகள் முகாமுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். ரஜினி வைத்திருக் கும் ஆவணங்களில் 53 பேர் என்று இருந்தாலும், படகில் இருந்தவர்கள் 50 பேர்தான். எஞ்சிய மூன்று பேர் என்ன ஆனார்கள் என்று கேட்கிறார் அதிகாரி. அவரிடம் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள் ரஜினி.
உறவுகளை இழந்தும் பிரிந்தும் யுத்தத்தை எதிர் கொண்டு, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்று கூடிய பலர் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் வாழ்ந்த கதை விரிகிறது. ஒரு பக்கம் ராணுவத்தின் குண்டு வீச்சு, இன்னொரு பக்கம் இளைஞர்களையும் யுவதிகளையும் போராளிகள் இயக்கத்திற்குள் இழுக்கும் நெருக்கடி என்று வாழும் இவர்களது வாழ்க்கையை சுனாமி அக்காவும் (சரிதா), ஸ்டான்லி ஆசிரியரும் (கருணாஸ்) பொறுப்பேற்றுப் பார்த்துக் கொள்கிறார்கள். அந்தக் குழுவில் மனவளம் குன்றிய நந்தன் என்ற இளைஞன் வந்து சேர்கிறான். ஒரு நாள் ஸ்டான்லியின் வகுப்பறையில் நுழையும் போராளிகள், இயக்கத்தின் கொள்கை, போராட்டக் களம் ஆகியவற்றை பற்றிய காணொளியைக் காட்டி இயக்கத்தில் சேரத் தூண்டுகிறார்கள். ரஜினி (சுகந்தா), தன் வயதையொத்த ரவியை (ஷ்யாம் சுந்தர்) காதலிக்கிறாள். ரவி திடீரென்று ஒருநாள் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறான்.
இறுதி யுத்தத்தில் சிக்கும் இவர்கள், தங்கள் குழுவில் யாரையெல்லாம் இழந்தார்கள்? ரஜினி தன் காதலனைக் கண்டுபிடித்தாளா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் சந்தோஷ் சிவன்.
யுத்த நிகழ்வுகளின் சில பக்கங்களை ரத்தமும் சதையுமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். குண்டு மழையில் அதிரும் கேமராவின் வழியாகச் சில காட்சிகள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. ராணுவம், போராளிகள், அப்பாவித் தமிழ் மக்கள் ஆகிய மூன்று தரப்பின் இழப்புகளையும் நடுநிலையோடு சித்தரிக்க முயன்றிருக்கும் சந்தோஷ் சிவன், இலங்கை அரசு புலிகள் மீது வைத்த பல குற்றச்சாட்டுகளைக் காட்சிகளாக வைத்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடக்கி வாசித்திருக்கிறார்.
எதிர்ப்பின் காரணமாகப் படத்திலிருந்து ஐந்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் லிங்குசாமி அறிவித்திருக்கிறார். அன்பே உருவான (!) ஒரு சிங்கள புத்த பிட்சு தமிழ்ச் சிறுவர்களுக்கு மாதுளம்பழத்தைப் பரிசளிப்பது அவற்றில் ஒன்று. இன்றைய இலங்கையின் பிட்சுக்களை அமைதியின் திருவுருக்களாகக் காட்டுவதில் உள்ள முரண் வெறும் சித்தரிப்புப் பிழை அல்ல. அதில் ஒரு அரசியல் இருக்கிறது.
இலங்கை இனப்போரைக் கொஞ்சம் விரிவாகவே சித்தரித்த வகையில் சந்தோஷ் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. நடுநிலைமையோடு படம் எடுக்க முனைந்ததும் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் எது நடுநிலை என்பதுதான் பிரச்சினை.
படத்தின் டைட்டிலில் ‘இனம்’ என்பதற்கு ஆங்கிலத்தில் The Mob என்று போடுகிறார்கள். Mob என்றால் கும்பல். இனத்தைக் கும்பலாகக் காட்டும் மொழிபெயர்ப்பை இயக்குநரது பார்வையின் அடையாளமாகக் கொள்ளலாமா?