தமிழ் சினிமா இயக்குநர்கள், தங்கள் படத்தைக் கவனிக்க வைக்க எத்தனையோ உத்திகளைக் கையாளுவார்கள். சேரனின் உதவியாளராக இருந்து, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்த இயக்குநர் எம்.ஏ.ராமகிருஷ்ணன், தலைப்பையே சர்ச்சைக்குரியதாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் இயக்கியுள்ள முதல் படம் இது. படத்துக்கு இசை, தமிழ் படம் படத்தின் இசையமைப்பாளர் கண்ணன், பாடல்கள் அண்ணாமலை.
தஞ்சை செல்வியின் கிராமக் குரலில் வரும் ‘ஏ காதலே காதலே’ பாடலின் வரிகள் கொஞ்சம் கவனிக்க வைக்கின்றன. கானா பாலா இல்லாமல் தமிழ் ஆடியோவா இயக்குநர் ராமகிருஷ்ணனே பாடியுள்ள பாடலில் அவரும் இணைந்துள்ளார். இப்பாடலில் பெண்களைக் குறைசொல்லும் வரிகள் அதிகம்.
ஹரிசரண், எலிசபத் மாலினி பாடியுள்ள ‘சுடச்சுட’ வேகமான பீட் பாடல். முகேஷ் பாடியுள்ள ‘தாறுமாறா’, வழக்கமான ‘குடி பாடல்’. ‘வாம்மா வாம்மா’ எம்.எல்.ஆர். கார்த்திகேயன், லேகா பார்த்தசாரதி குரலில் வந்துள்ள குத்துப் பாடல்.
சில பாடல்களில் மெட்டைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பாட்டை அப்படியே வாசித்து இருக்கிறார்கள். மற்றும் சில, பழைய மெட்டுகளை ஞாபகப்படுத்துகின்றன. மொத்தத்தில் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.