இந்து டாக்கீஸ்

ரஜினிக்கு எது கம்பீரம்?- ‘கபாலி’ ஒளிப்பதிவாளர் ஜி. முரளி சிறப்பு பேட்டி

கா.இசக்கி முத்து

ரஜினியின் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கபாலி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜி.முரளி. பாராட்டுகளை அள்ளிய ‘மெட்ராஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளரும் இவர்தான். ஓவியக் கல்லூரியில் பயின்று சினிமா ஒளிப்பதிவுக்கு இடம்பெயர்ந்த இவர், ரஜினி படத்துக்கு ஒளிப்பதிவு செய்து முடித்திருக்கிறோம் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் நம்மிடம் பேசினார்...

ஓவியத்துக்கும் ஒளிப்பதிவுக்கும் இடையிலான வித்தியாசமாக எதைச் சொல்கிறீர்கள்?

ஓவியம் கொஞ்சம் கடினம், ஒளிப்பதிவு கொஞ்சம் எளிதுதான். ஏனென்றால் ஒளிப்பதிவுக்குக் கருவி இருக்கிறது. அது நமக்குப் பாதி வேலையை எளிதாக்கும். அந்தக் கருவியை நமக்குத் தேவையான விஷயங்களுக்கு எப்படிப் பயன்படுத்துகிறோம் என்ற விஷயம் இருக்கிறது. ஓவியத்தில் நீங்கள்தான் அனைத்தையுமே உருவாக்க வேண்டும். வண்ணங்கள், தொகுப்புகளுக்கு இடையே இருக்கக்கூடிய இடைவெளி என இரண்டுக்குமே சில விஷயங்கள் ஒத்துப்போகும். சினிமா என்பது இயக்குநர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் எனப் பலருடைய படைப்புப் பார்வைகளை உள்ளடக்கியது.

உங்களது முதல் படமான ‘அந்தால ராக்ஷசி’ தெலுங்குப் பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

நான் திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது கூட, சினிமாவில் வேலை பார்ப்பேன் என்று எண்ணியதில்லை. ஆனால், எனது இறுதி வருட புராஜெக்ட் கவனிக்கப்பட்டது. அதன் ஒளிப்பதிவுக்காகத் தேசிய விருது கிடைத்தது. எனது நண்பர் ராமகிருஷ்ணா மூலமாக அந்தப் படம் எனக்குக் கிடைத்தது.

நான் எதையும் எதிர்பார்த்து அந்தப் படத்தைப் பண்ணவில்லை. ஒரு இயக்குநரின் கதையை உள்வாங்கி அதைக் காட்சிப்படுத்திக் கொடுப்பதைத் தான் ஒளிப்பதிவாளரின் பணியாகப் பார்க்கிறேன். ‘அந்தால ராக்ஷசி’ கதையைக் கேட்டவுடன், இந்தக் காதல் கதைக்கு நம்மால் என்ன பண்ண முடியும் என்றுதான் யோசித்தேன். தெலுங்கு சினிமாவில் பார்த்த வழக்கமான காதல் கதையின் ஒளிப்பதிவை விடுத்துக் கொஞ்சம் யதார்த்தமாகப் பண்ணினேன். இப்போது வரை நிறையப் பேர் அப்படத்தின் ஒளிப்பதிவுத் தன்மையைப் பற்றிப் பேசுகிறார்கள்.

‘மெட்ராஸ்’ ரஞ்சித் - ‘கபாலி’ ரஞ்சித் ஏதேனும் வித்தியாசம் உணர்ந்தீர்களா?

‘மெட்ராஸ்’ கொஞ்சம் ராவான படம். அப்படத்தின் கதைக்களம் என்பது வேறு. அந்தக் கதையை வேறு ஏதாவது ஒரு களத்தில் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்காது. அப்படத்தில் ரஞ்சித் பேசிய சமூக அக்கறை கொண்ட விஷயங்கள் ‘கபாலி’யிலும் இருக்கின்றன. இயக்குநர் ஒரு படத்தில் சொல்லும் கருத்து அனைத்து மக்களையும் சென்றடைகிறது. அப்படித்தான் ‘கபாலி’யில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் அதிகமான மக்களைச் சென்றடையும். ரஜினி சார் மூலமாக ரஞ்சித் சொல்லியிருக்கும் விஷயங்கள் கண்டிப்பாக அனைவரையும் கவரும் என நினைக்கிறேன்.

ரஜினிக்கு என்று ப்ரேம் வைக்கும்போது ஏதேனும் ஸ்பெஷலாக வைத்தீர்களா?

அவருக்கு என்று நான் எந்தவொரு ப்ரேமும் வைக்கவில்லை. அவருடைய படத்துக்கு பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ரஜினி சார் தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலமாக மக்கள் மத்தியில் இன்றும், என்றும் நீங்காத பிம்பமாக இருந்து வருகிறார். அதை நான் எங்கேயும் சிதைத்துவிடக் கூடாது என்றுதான் பணியாற்றியிருக்கிறேன்.

‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ ஆகிய படங்களில் எல்லாம் ரஜினி ஈர்க்கும் விதமான எளிய அழகுடன் இருப்பார். ரஜினிக்கு இந்த எளிய அழகுதான் யாருடனும் ஒப்பிட முடியாத கம்பீரம். இப்படத்தின் கதைக் களங்களுக்கு அவருடைய முகம் எளிய ஆனால் கம்பீரமான அழகுடன் பொருந்தியிருக்கும்.

வயதான, இளமையான என இரண்டு கதாபாத்திரங்களையும் ரஜினி எப்படிச் செய்திருக்கிறார்?

வயதான வேடத்துக்கு ஏற்றவாறு உடலசைவில் தனது நடிப்பைக் கொண்டுவர முடியும் என்று சிரத்தை எடுத்தார். அதே வேளையில் இளம் வயது ரஜினிக்கு நான் ஒளிப்பதிவு செய்யும்போது அவருடைய வயது என் கண்ணுக்குத் தெரியவில்லை. நிறைய நீளமான வசனங்கள் இப்படத்தில் இருக்கின்றன. அதை எல்லாம் ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணிவிட்டார். அப்போது எல்லாம் ஒரு அனுபவமிக்க நடிகராகத்தான் ரஜினி சாரைப் பார்த்தேன்

SCROLL FOR NEXT