உலக அளவில், ஹாலிவுட் படங்களுக்கு அடுத்தபடியாக, பார்ப்பவர்கள் எண்ணிக் கையிலும் தயாரிப்பிலும் இரண்டு பெரிய அங்கங்களாகத் திகழ்பவை, இந்திப் பட உலகும் தமிழ்ப் பட உலகும். இவை இரண்டுக்கும் ஜீவ நாடி யாக விளங்கும் திரைப்படப் பாடல்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களும் அதன் மூலம் அடையும் உணர்வும் அதிசயத் தக்க அளவில் இணைந்தும் பிரிந்தும் இருப்பதைப் பலரால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. தமிழ், இந்திப் பாடல்களுக்கு இடையே உள்ள தொடர்பையும் வேறு பாட்டையும் நாம் ராகம், வாத்திய ஓசை, இசையின் வடிவம் ஆகியவை மூலம் மட்டுமே தொடர்புப்படுத்தி அறிந்துகொள்கிறோம். ஆனால் பாடல் வரிகளைப் பார்த்தால் மேலும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம்.
கி.பி. 1908இல் பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா 1913இல் இந்தியாவுக்கு வந்து 1931இல் பேசத் தொடங் கியது. இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட பேசாத படங்கள், மற்ற நாடுகள்போல முழுவதுமான பேசாப் படங்களாக வெளியிடப்படவில்லை. எழுதப் படிக்கத் தெரியாத, ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் மக்கள் இருந்த அக்காலத்தில், ‘சப்-டைட்டி’லுடன் படங்களை வெளியிடுவதில் பயன் இல்லை. எனவே, படக் காட்சிகள் ஓடும்பொழுது, ஒருவர் திரைக்குப் பக்கத்தில் நின்றபடி, சத்தமாக வசனங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்.
இந்தியாவில் தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்திப் படங்களும் தமிழ்ப் படங் களும் பக்திப் படங்களாகவே இருந்தன. அச்சமயத்தில் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்ட பக்தி நாடகங்களே திரைப்படங்களானதுதான் இதன் காரணம். எல்லோரும் அறிந்த கதையும் கேட்ட பாடல்களும் அவ்வித நாடகங்களில் இருந்தன. தொடக்கத்தில் திரைக்கு வந்த நடிகர்களும் வசனம் பேசி, பாடல் பாடி நடிக்கும் நாடக கலைஞர்களாகவே இருந்தனர். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பாடல்கள் என்பதால் திரைப்படப் பாடலாசிரியர் தேவைப்படவில்லை.
இந்தச் சூழல், மெல்ல மெல்ல மாறியது. பேசும் படம் வந்த நான்கு வருடத்தில், 1935இல் முதன் முதலாக, சமூகக் கதை ஒன்று திரைப் படமாக்கப்பட்டு அதற்கெனத் தனியாகப் பாடல்களும் இயற்றப்பட்டன. அந்தப் படம் ‘தேவதாஸ்’. பாடலாசிரியர்கள் தனிப்பிரிவினராகப் புகழ் பெற இந்தப் படமே அடிகோலியது எனலாம்.
பேசாத படமாகவும், பின் பேசும் படங்களாகவும், வங்காளம், இந்தி மொழிகளில் முதலில் வெளிவந்த இந்தப் படம் பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, மராட்டி எனப் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்தியில் மூன்று முறையும் தமிழில் இரண்டு முறையும் தேவதாஸ் என்ற அதே பெயரில் வெளிவந்தது.
திரைப்படமாக எடுக்கப்பட்ட முதல் இந்திய நாவல் என்ற புகழ் பெற்ற தேவதாஸ் படத்தின் மூலக்கதையை எழுதியவர் வங்காள எழுத்தாளர் சரத் சந்திரர். 1917இல் எழுதப்பட்ட இந்த நாவல் 18 வருடங்களுக்குப் பிறகு படமாக்கப்பட்டது. தேவதாஸ், காதல் தோல்விப் படங்களின் முன்னோடி.
அந்தக் கால வங்காளச் சூழலைப் படம் பிடித்துக் காட்டிய இந்த இந்திப் படத்தின் பாடல் வரிகள் வெளிப்படுத்திய உணர்வை, இந்தப் படம் வந்த 18 வருடங்களுக்குப் பின்னர் வெளியான தமிழ் தேவதாஸ் படப் பாடல்கள் எப்படி வெளிப்படுத்துகின்றன என்பதைப் பார்ப்போம்.
(அடுத்த வாரம்...)
படங்கள் உதவி: ஞானம்