ஹாலிவுட்டின் அனிமேஷன் படங்கள் உலகெங்கிலும் பெரிய வரவேற்பைப் பெற்றவை. அதே போல் நாம் வீடுகளில் ஆசையுடன் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளும் நம் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவை. இப்போது இந்த இரண்டையும் சேர்த்து கற்பனை செய்யுங்கள். வளர்ப்புப் பிராணிகள் முதன்மைக் கதாப்பாத்திரங்களாக்க வலம் வரும் ஹாலிவுட் அனிமேஷன் படம் என்றால் மனதில் உற்சாகம் பெருகுகிறதா? இந்த உற்சாகத்தை உங்களுக்குத் தரவே உருவாக்கப்பட்டிருக்கும் அனிமேஷன் காமெடிப் படம்தான் ‘த சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்’.
இந்த ஆண்டு ஜூலை 8 அன்று திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தை யுனிவர்ஸல் பிக்ஸர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தை இயக்கியிருப்பவர் கிறிஸ் ரினாடு. இவர் ஏற்கெனவே ‘டெஸ்பிகபிள் மீ ’ படத்தை இயக்கி ஹாலிவுட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகியிருக்கும் இயக்குநர்தான்.
அமெரிக்காவின் நெருக்கடி மிகுந்த பகுதியில் அமைந்திருக்கும் அபார்ட்மெண்டில் குடியிருப்பவர் மேக்ஸ். இவருடைய விருப்பத்துக்குரிய வளர்ப்புப் பிராணிக்கு இடையூறாக வந்து சேர்கிறது டியூக் என்ற அபூர்வ ரக நாய். டியூக் வந்த பின்னர் மேக்ஸின் பிரியத்துக்குரிய வளர்ப்புப் பிராணியின் வாழ்க்கை தலைகீழாகிறது. உரிமையாளர் வீட்டில் இல்லாதபோது வளர்ப்புப் பிராணிகள் என்ன செய்யும்? இவற்றுக்கிடையே நடக்கும் உரிமைப் போராட்டங்கள் காரணமாக என்னவிதமான கலாட்டாக்கள் அரங்கேறுகின்றன என்பதை விறுவிறுப்பான நகைச்சுவை எபிசோட்களாக விவரித்துப் போகிறது படம்.
முயல், நாய், பூனை எனப் பலவகை பிராணிகள் பங்குகொள்ளும் 3டி காட்சிகள் படத்தை நிறைத்துள்ளன. இந்த காமெடி கலாட்டாக்கள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் மனிதர்களின் உணர்ச்சிகளை அல்லவா இந்தச் செல்லப் பிராணிகளுக்குப் பொருத்தியிருக்கிறார்கள்! ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கான ஈஸ்டர் விருந்தாக அமையப்போகிறது.