‘Clash’ (மோதல்) (எகிப்து)
எகிப்து என்றாலே உலக அதிசயமான பிரமீட் நினைவுக்கு வரும். ஆனால் நவீன வரலாற்றில் கடந்த 2011-ல் அங்கே நடந்த மக்கள் புரட்சியையும் 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடந்த படுகொலைச் சம்பவத்தையும் உலகம் இன்னும் மறக்கவில்லை.
எகிப்தின் அரசியல் நிர்வாகத்தில் அந்நாட்டு ராணுவத்தின் கையே தொடர்ந்து ஓங்கி வந்திருப்பது வரலாறு. 30 ஆண்டுகள் அதிபர் இருக்கையை விட்டு அகலாமல் எகிப்தை ஆட்சி செய்துவந்த ஹோஸ்னி முபாரக்குக்கு (ராணுவ அதிகாரியாக இருந்து ஆட்சியைப் பிடித்தவர்) எதிராக 2011-ல் மாணவர்களும் பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடி அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அதன் பின் கடந்த 2012-ல் நடத்தப்பட்ட ஜனநாயகத் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முகமது முர்சி, வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார். ஆட்சியதிகாரத்துக்குக் கீழே ராணுவ அதிகாரங்களைக் கொண்டுவந்து ராணுவத்தைக் கட்டுப்படுத்த அவர் முயன்றார். மேலும் ஷரியத் சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால், ராணுவமும் எதிர்க்கட்சிகளும் இதற்கு அனுமதிக்கவில்லை.
03.07.2013-ல் எகிப்தில் நடந்த திடீர் ராணுவப் புரட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டே ஆகியிருந்த நிலையில் முர்சியைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது ராணுவம். அதைத் தொடர்ந்து, இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் முர்சிக்கு ஆதரவாக அமைதிப் போராட்டத்தில் குதித்தனர். கெய்ரோவின் புகழ்பெற்ற பொது மையமான அதவியா சதுக்கத்தில் ஒன்றுதிரள அவர்கள் முகநூலைத் தகவல் ஊடகமாகப் பயன்படுத்தினார்கள். மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காகக் குவிந்ததுபோல் அந்தச் சதுக்கத்தில் பதினைந்து லட்சம் பேர் குவிந்து போராடினார்கள்.
படுகொலைக்கு முன்னர்
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ராணுவம், 2013 ஆகஸ்ட் 12, மற்றும் 14-ம் தேதிகளில் அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 600 பேரைக் கொன்று குவித்தது. உலகையே உலுக்கிய இந்தப் படுகொலை குறித்து இந்தப் படம் மூச்சு விடவில்லை. ஆனால், முர்சி பதவியிருந்து ராணுவத்தால் தூக்கியெறியப்பட்ட பின் ஜூன் மாதத்தில் அவருக்கு ஆதரவாக மக்கள் வீதிகளில் களமிறங்கிப் போராடி வந்த நாட்களில் ஒன்றை நமக்கு விரிவாகக் காட்டுகிறது.
முர்சியின் ஆதரவாளர்கள், அவர்களை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் ஆகிய இருதரப்புமே களத்தில் நிற்கிறார்கள். கிட்டத்தட்ட உள்நாட்டு யுத்தச் சூழல் அது. சந்தேகத்துக்கிடமானவர்கள், போராடுகிறவர்கள், போராட்டத்தை வெறுத்து அமைதிக்காக ஏங்கும் மக்கள் என மூன்று விதமான மக்களை ராணுவ போலீஸ் கைது செய்து செல் போன்ற ஒரு வேனில் ஏற்றுகிறது. வேனுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அவர்கள்தான் இன்றைய நவீன எகிப்தின் மனநிலையை நமக்குக் கண்ணாடிகளாகப் பிரதிபலித்துக் காட்டும் கதை மாந்தர்கள். இயக்குநர் அந்த போலீஸ் வேனின் ஜன்னல் கம்பிகள் வழியே தமது கேமராவின் கண்களை கெய்ரோ வீதிகளில் அலையவிடுகிறார்.
அவை அந்தக் கதாபாத்திரங்களின் கண்களாகவும் மாறுகின்றன. போலீஸ் வேனின் ஜன்னல் சமூகத்தின் சாளரமாக மாறுகிறது. ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, லத்தியடி, மக்களின் போராட்டம், மாணவர்களின் துணிச்சலான எதிர் தாக்குதல் என எல்லாம் போலீஸ் வேன் ஜன்னலிருந்து ‘ஸ்டெடி கேம்’ முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு திரைப் படைப்பாளிக்கு இது மிகச் சவாலான படமாக்கல் முறை. அதில் இந்தப் படத்தின் இயக்குநர் முகமது தயப்பும் அவரது குழுவினரும் மிகத் தேர்ச்சி மிக்க காட்சிப் பதிவைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
சமூகத்தின் சாளரம்
காலியாக நின்றுகொண்டிருக்கும் போலீஸ் வேனுக்குள் முதலில் அடைக்கப்படும் இருவர் பத்திரிகையாளர்கள். முர்சிக்கு ஆதரவாக, அண்டை நாட்டுப் பத்திரிகை ஒன்றுக்குச் செய்தி சேகரிக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு செய்தியாளரும் ஒரு ஒளிப்படக்காரரும் அடைக்கப்படுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து முர்சியின் ஆதரவு இளைஞர்கள் சிலர், எதிர்கட்சியைச் சேர்ந்த சிலர், இந்த இரண்டு தரப்பும் அல்லாமல், எகிப்தில் வசிக்கும் கிறிஸ்தவச் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக ஒரு குடும்பம் என ஒரு கட்டத்தில் வேனுக்குள் மூச்சுவிடக்கூட இடமில்லாமல் போய்விடுகிறது.
இத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் தரப்புக்கு ஆதரவாகவும் எதிர்த் தரப்புக்கு விரோதமாகவும் பேச ஆரம்பிக்கிறார்கள். அதுவே எகிப்தின் மீதான சமூக விமர்சனமாகவும் விவாதமாகவும் மாறுகிறது. கதாபாத்திரங்களின் உரையாடலே நகைச்சுவை கலந்த சமூக எள்ளல் விமர்சனமாகிறது. ஜன்னலுக்கு வெளியே விரியும் காட்சிகள் ராணுவத்தின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு சாட்சியமாக இருக்கின்றன. ஒரு கட்டத்தில் வேனுக்குள் வாய்ச் சண்டை முற்றி கைகலப்பாக மாறும்போது தங்களுக்கு ஆதரவானவர்களையும் சேர்த்தே தண்ணீர் பீரங்கியால் ராணுவம் தாக்குகிறது.
அதுவே அவர்களை நிலைகுலைய வைத்துவிடுகிறது. அதன் பிறகு அந்த வேனுக்குள் இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்கிறார்கள். அங்கே மனிதம் தன் முகத்தைக் கழுவிக்கொள்கிறது. தன் கணவனும் 15 வயது மகனும் அந்த வேனில் ஏற்றப்பட்டதற்காக தானும் வலிய வந்து ஏறிக்கொண்ட நர்ஸ், தாங்கள் ஒரு கிறிஸ்தவக் குடும்பம் என்பதை அந்தச் சூழலில் பதற்றத்துடன் மறைக்க வேண்டியிருக்கிறது. அவள் அந்த வேனில் இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற மருத்துவ உதவிகளைச் செய்கிறாள். குண்டடித் தாக்குதலில் அவளது கணவனின் தோள்பட்டை கிழிந்துவிட அதைத் தன்னிடமிருக்கும் இரண்டு ஹேர் பின்களைக் கொண்டு துணிவுடன் தைக்கிறாள். மேலும் ஒரு ஹேர்பின் தேவைப்பட, அந்த வேனில் புர்கா அணிந்திருக்கும் இஸ்லாமிய பதின் வயது கொண்ட பெண், தன் தலையிலிருந்து இரண்டாவது ஹேர்பின்னைத் தருகிறாள். அப்போது புர்கா மெல்ல விலகுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களைப் போற்றும் முர்சியின் ஆதரவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவளும் அவளுடைய தந்தையும்.
எள்ளல் நாடகம்
அந்த வேனுக்குள் இருப்பவர்கள் காற்றுக்காக ஏங்குகிறார்கள். சுதந்திரக் காற்றுக்காக எகிப்து மக்கள் ஏங்குவதையே இந்தக் காட்சி வழியே நுட்பமாக நமக்குள் கடத்துகிறார் இயக்குநர். ராணுவத்தின் தலையீடோ, எகிப்தைத் தங்களது ராணுவ, தொழில் கேந்திரமாக வைத்துக்கொள்ள நினைக்கும் ஐரோப்பிய நாடுகளின் நிழல் ஆட்சியோ இல்லாமல் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று எகிப்தியர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் இந்த சுதந்திரம் இயற்கையானது. ஆனால் வேனில் சிறுநீர் கழிக்க முடியாமல் இயற்கை உபாதைக்காக அந்தப் பதின்மப் பெண் கதறும்போது காலி பெட் பாட்டிலை நீட்டுகிறது ராணுவ போலீஸ்.
இயக்குநர் முகமது தயாப் எள்ளல் கலந்த நகைச்சுவையைச் சமூக விமர்சனத்துக்கான ஊடகமாகக் கையாண்டிருந்தாலும் ஒரு த்ரில்லர் டிராமாவாக இந்தப் படத்தைத் தந்து நவீன எகிப்தின் ஏக்கத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகிறார். என்றாலும் அதாவியா படுகொலையை இவரைப் போன்றவர்களால் படமாக்க முடியுமா என்றால் எகிப்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் குறைவுதான்.