ஹிட்டடித்த ‘ஷிவாய்’ டிரைலர்
அஜய் தேவ்கன் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் ‘ஷிவாய்’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆக் ஷன் - திரில்லர் படத்தின் பெரும்பான்மையான பகுதி பல்கேரியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அஜய் தேவ்கன். “இந்தப் படம் எந்த மதத்தினரின் மனதையும் புண்படுத்தாது. இதில் சிவபெருமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை. சிவபக்தனாகத்தான் நடித்திருக்கிறேன். கடவுள்களிலேயே மனிதனுடைய குணாம்சங்களை அதிகமாகக் கொண்ட கடவுள் சிவபெருமான். அதனால்தான் அவரைப் பற்றிப் படமெடுக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன்” என்கிறார் அஜய் தேவ்கன். அக்டோபர் 28 அன்று இந்தப் படம் வெளியாகிறது.
நடிகை சோனாக்ஷி சின்ஹா பத்திரிகையாளராக நடித்திருக்கும் ‘நூர்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படம் கிரைம் திரில்லர் காமெடி ஆகிய மூன்றும் கலந்த கலவையாக இருக்கும். ‘கராச்சி, யூ ஆர் கில்லிங் மீ!’ என்ற பாகிஸ்தானிய நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. சபா இம்தியாஸ் என்ற இளம்பெண் பத்திரிகையாளர் இந்நாவலை எழுதியிருக்கிறார்.
‘நூர்’ திரைப்படம் கராச்சியின் இருபது வயதுப் பெண் பத்திரிகையாளர் ஆயிஷா கானின் வாழ்க்கையையும் அவருடைய சாகச விபத்துகளையும் பின்தொடர்கிறது. சுனில் சிப்பி இந்தப் படத்தை இயக்குகிறார். பூரப் கோலியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
அழகான காதல் கதை
‘பார் பார் தேகோ’ படத்தின் ‘காளா சஷ்மா’ பாடல் வெளியானவுடனே பெரிய ஹிட்டானது. சித்தார்த் மல்ஹோத்ரா, கத்ரீனா கையிஃப் நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நித்யா மெஹ்ரா இயக்கியிருக்கிறார். இந்தப் படம் காதலின் சிக்கலைப் பேசுகிறதா என்று கேட்டதற்கு இயக்குநர் நித்யா மெஹ்ரா இப்படிச் சொல்லியிருக்கிறார்: “இந்தப் படம் சிக்கலானதுதான்.
அதுதான் இந்தப் படத்தின் சிறப்பாக இருக்கப்போகிறது. நான் வழக்கமாக ஒரு படத்தை எடுத்தால் அது சலிப்பைத்தான் ஏற்படுத்தும். ஆனால், இந்தப் படம் வாழ்க்கையையும் காதலையும் பற்றிய அழகான கதை என்று சொல்லலாம். இது, நாம் வாழ்க்கையில் தவறவிடும் அழகான சின்னச் சின்ன தருணங்களைப் பற்றிப் பேசுகிறது”.
கரண் ஜோஹர், ஃபர்ஹான் அக்தர், ரித்தேஷ் சித்வானி போன்றோர் இணைந்து ‘பார் பார் தேகோ’ படத்தைத் தயாரித்திருக்கின்றனர். இந்தப் படம் செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது.
தெரு இசைக்கலைஞர்களின் கனவு
‘பஞ்சோ’ படத்தின் போஸ்டர், டீசர், டிரைலர் என எல்லாமே பாலிவுட்டில் பலமான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன. ரித்தேஷ் தேஷ்முக் - நர்கீஸ் ஃபக்ரி நடிக்கும் படமான ‘பஞ்சோ’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவுசெய்கிறது. மராத்தி இயக்குநர் ரவி ஜாதவ் இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இசைப் படமான இதற்கு விஷால் - சேகர் இசையமைத்திருக்கின்றனர். “நான் ஒரு தெரு இசைக்கலைஞராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். ‘பஞ்சோ’ இசைக் குழுவைப் பற்றி இந்தியில் வெளிவரும் முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். இந்தக் கதாபாத்திரத்தை என் மனதுக்கு நெருக்கமானதாக உணர்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் ரித்தேஷ்.
இந்தப் படம் பஞ்சோ இசைக் கலைஞர்களின் கனவுகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கிறது இந்தப் படக்குழு. ‘பஞ்சோ’ திரைப்படம் செப்டம்பர் 23 அன்று வெளியாகிறது.