சென்னை அண்ணா சாலையில் உள்ள சில பழைய திரையரங்குகளின் அஸ்திவாரத்தில் மிகச் சாதாரணர்களின் கண்ணீர் கலந்திருக்கிறது. எளிய மக்களின் குடியிருப்பை அகற்றிவிட்டு அவை கட்டப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுவதுண்டு. அந்த எளிய மக்கள் அதன் பிறகு அந்த இடத்தைத் துயரத்தோடு, தோற்கடிக்கப்பட்டவர்களாய்க் கடந்து போயிருப்பார்கள்.
அவர்களின் வழித்தோன்றல்கள் யாரேனும் அதைத் திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ராஜீவ் ரவி இயக்கியிருக்கும் சமீபத்திய மலையாளத் திரைப்படமான ‘கம்மாட்டி பாடம்’.
எர்ணாகுளம் என்ற நகரம் உருவானபோது ஏற்பட்ட பக்க விளைவுகளை அல்லது ‘கவனிக்க விரும்பாத’ விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது இத்திரைப்படம்.
பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மலையாள சினிமாவுக்குத் தொழில்நுட்பம் சார்ந்த அக்கறைகள் கிடையாது. மிகக் குறைவான படங்களிலேயே தொழில்நுட்பமும் கலையும் அரிதாய்க் கைகோக்கும். மற்றபடி மலையாள கிளாசிகல் என்று சொல்லக்கூடிய படங்களில்கூட உள்ளடக்கம் மாத்திரமே காத்திரமாக இருக்கும்.
ஒருவகையில் இது இடதுசாரிச் சிந்தனையின் நீட்சி எனவும் புரிந்துகொள்ளலாம். உள்ளடக்கமே பிரதானம். வடிவத்தைப் பொறுத்தவரை அது மாற்றான் பிள்ளையே. மலையாள சினிமாவின் புகழ் பெற்ற அரசியல் நையாண்டிப் படமெனப் போற்றப்படக்கூடிய ‘சந்தேஷம்’ திரைப்படம் ஒரு காத்திரமான நாடகம் மாத்திரமே. அவர்களின் வர்த்தகப் பரப்பளவும் மிகக் குறைவு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மலையாள சினிமாவின் மாறிய முகம்
இந்தப் பத்தாண்டுகளில் உலகமயமாக்கலின் விளைவாக மலையாள சினிமாவின் தொழில்நுட்ப முகம் மாறுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களில் ஊறுகாய், பல்பொடி, இரு சக்கர வாகனம், எனப் பலவற்றுக்குக் கதகளிக்காரர்கள் ஆடுவதை ஒரு குறியீடாகவே கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் பட்டாளம் பெருமளவுக்கு மலையாள சினிமாவுக்குள் நுழைகிறது. பழையவர்களில் ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் மாத்திரமே புதியவர்களின் வரவுகளைத் தாண்டித் தாக்குப் பிடிக்கின்றனர்.
ராஜீவ் ரவி அந்தப் புதியவர்களில் ஒருவர். இது அவருடைய மூன்றாவது திரைப்படம். அவருடைய முதல் படமான ‘அன்னையும் ரசூலும்’, பெரிதும் பேசப்பட்ட திரைப்படம். முற்றிலும் காட்சிபூர்வமான சினிமா. ‘அன்னையும் ரசூலும்’ படத்தில் காட்டப்பட்டதை மிஞ்சி இதுவரை எந்த மலையாளப் படத்திலும் கொச்சி நகரம் காட்டப்படவில்லை.
‘கம்மாட்டி பாடம்’ ஒரு காட்சிபூர்வமான சினிமா. கம்மாட்டி என்பது இடத்தின் பெயர். பாடம் என்றால் வயல். வயல்கள் நகரங்கள் ஆகின்ற 70-களின் இறுதியில் படம் தொடங்குகிறது. எர்ணாகுளத்தைச் சிறிய சென்னையாக நாம் கற்பனை செய்துகொள்ளலாம். தலித் குடியிருப்பொன்றில் சிறிதாக வளர்ந்துவரும் ஒரு குட்டி ரவுடியின் எழுச்சியோடு நகர்கிறது திரைப்படம்.
முதலாளிகளுக்கு அந்த இடத்தைக் கைப்பற்றுவதற்கு குட்டி ரவுடி பாலன் அவசியப்படுகிறான். கட்டிடங்கள் எழ ஆரம்பிக்கிற சமயத்தில் அவன் தேவையில்லாதவனாகவும் ஆகிறான். பாலன் கொலை செய்யப்பட்ட பின் அவனைப் பின்பற்றியவர்கள் என்ன ஆனார்கள் என விரிந்து செல்கிறது திரைப்படம்.
பாலன் குடும்பம் எத்துப்பல் கொண்ட குடும்பம். ஏறக்குறைய ஒரே முகச் சாயல் கொண்ட இருபது பேர் தாத்தாவாக, அப்பாவாக, இளைஞனாக, சிறு பையனாக அத்தனை உண்மையாகத் திரைப்படத்தில் உலவுகிறார்கள். துல்கர் இந்தத் திரைப்படத்தின் நாயகன் என்றாலும் அவர் ஒரு கதை சொல்லி மாத்திரமே. கிருஷ்ணனாக நடித்திருக்கும் துல்கரின் நண்பர்களான கங்கா (விநாயகன்), அவனது சகோதரனான பாலன் (மணிகண்டன் ஆர். ஆச்சாரி) ஆகியோரின் தோற்கடிப்பட்ட வாழ்வே இத்திரைப்படம். ஒரு நாயக நடிகன் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது மலையாள சினிமாவின் நல்ல போக்குகளில் ஒன்று.
தேவைப்படாமல்போன மனிதர்கள்
உலகமயமாக்கலை, அதன் விளைவுகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பேசலாம். எர்ணாகுளத்தில் மரைன் டிரைவுக்கு நாம் படகில் வரும்போது தெரியும்; அதி உயரக் கட்டிடங்களைக் காணுகையில் திரைப்படங்களில் கண்ட சிங்கப்பூரை நினைவுபடுத்தும். ஆனால், அப்படியல்ல என்கிறது ‘கம்மாட்டி பாடம்’.
அமெரிக்காவின் பெருநகரங்களில் ராட்சசத்தனமான கட்டிடத் தொகுப்புக்குப் பின்னால் உள்ள தெருக்களை ஆவணப்படங்களின் வழி காணும்போது அது முழுக்க காகிதங்களாலும் குப்பைகளாலும் நிறைந்திருக்கிறது. ஒரு பெருங்காற்று வீசும்போது காகிதங்களும் குப்பைகளும் அடித்துச் செல்லப்படுகின்றன. பாலனும் கங்காவும் கிருஷ்ணனும் (துல்கர்) கம்மாட்டி பாடத்தின் இன்ன பிறரும் அப்படித்தான் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
சிறையிலிருந்து சில வருடங்களுக்குப் பிறகு வெளிவரும் கங்கா, கம்மாட்டி பாடத்துக்கு மறுபடியும் வரும்போது வேலிகள் அடைக்கப்பட்ட பாதையின் வழி வளைந்து வளைந்து வர வேண்டியிருக்கிறது. அக்காட்சி நமக்கு நிறைய சொல்கிறது. அவர்கள் தேவையில்லாதவர்கள் என்ற பொருள்பட முதலாளி, கிருஷ்ணனோடு பேசும்போது அக்காட்சியின் பின்னணியில் எர்ணாகுளம் மின்சார விளக்குகளால் நிறைந்திருக்க, மிக உயரத்திலிருந்து காட்டப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தோடு, திரையரங்க வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களைப் பற்றிய ஜே.பி. சாணக்கியாவின் சிறுகதையையும், ஆனந்த் பட்வர்த்தனின் ‘பாம்பே அவர் சிட்டி’ ஆவணப்படத்தையும் இணைத்து யோசிக்கலாம்.
மது நீலகண்டனின் ஒளிப்பதிவு அபாரமானது. கே, ஜான் பி. வர்க்கி, விநாயகன், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்தில் கச்சிதமான பாடல் வரிகள் தேர்ந்த குரல்களின் வழியே ஒலிக்கின்றன.
எளிய மனிதர்கள் வெளியேற்றப்பட்ட கம்மாட்டி பாடங்கள் மலையாளத்தில் திரைப்படங்களாக மாறுகின்றன. சென்னை அண்ணாசாலையின் பழைய திரையரங்குகள் பிரம்மாண்டமான வணிக வளாகங்களாக மாறுவது யதார்த்தம்.