இந்து டாக்கீஸ்

மொழி கடந்த ரசனை 19: என் நினைவில் கண்ணீர் சிந்தாதே

எஸ்.எஸ்.வாசன்

திரை இசையமைப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் ஆகிய இருவருக்குமிடையே உள்ள தொழில் சார்ந்த உறவு, சில தருணங்களில் புதிய பரிணாமத்துக்கு அவர்களை இட்டுச் சென்றுவிடும். ‘கெமிஸ்ட்ரி’ என்ற பொதுவான அடைமொழியால் குறிப்பிடப்படும் இந்த விசேஷமான புரிதல்களின் சங்கமம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எல்லா மொழித் திரை உலகிலும் இருந்துவந்திருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் மெஹதி—மன்மோகன் சங்கமம்.

மிகச் சிறந்த கூட்டணி

ராஜா மெஹதி அலி கான் அவர் வாழ்ந்த காலத்திய, சிறிய, பெரிய என்ற வேறுபாடின்றி அனைத்து இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற படங்களுக்கும் சிறந்த வரிகளை எழுதியுள்ளார். ‘ஆன்கேன்’ (விழிகள்) என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கிய மெஹதி—மன்மோகன் கூட்டணி இந்தித் திரை உலகின் பொற்காலத்திற்கு அடித்தளமாக விளங்கியது. மெஹதியும் மன்மோகனும் இணையாத மிகச் சிறந்த பல பாடல்கள் இந்தியில் இருந்தாலும் அவை இந்தக் கூட்டணியின் பங்களிப்புக்கு நிகராகாது. தமிழில் கண்ணதாசன் - விஸ்வநாதன், ராமமூர்த்தி சங்கமம் இங்கு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.

‘மத்ஹோஷ்’ (புரட்சி) என்ற திரைப்படத்தில் தொடங்கிய இந்த இசைப் புரட்சியின் மூலம் வெளிவந்த பாடல்கள், லதா மங்கேஷகர், தலத் முகமது, முகேஷ், முகமது ரஃபி, மகேந்திர கபூர் ஆகிய பாடகர்களுக்குப் புதிய முகவரியை அளித்தது.

மத்ஹோஷ் படத்தில் தலத் முகமது பாடிய ‘மேரி யாத் மே தும் ஆசு நா பஹானா’ என்று தொடங்கும் பாடல் திரை உருது கஜல்களில் முக்கிய இடத்தைப் பெற்ற பாடல். எளிய உருதுச் சொற்கள், சோகம் ததும்பும் தலத் முகமதுவின் பட்டுக் குரல், பொருத்தமான இசை அமைப்பு, மீனாகுமாரியின் உடல் மொழி ஆகிய பல அம்சங்களின் தொகுப்பாக விளங்கும் இப்பாடலின் பொருள்:

என் நினைவில் கண்ணீர் சிந்தாதே

இதயத் தீயை எரியவிடாதே

என்னை மறந்துவிடு

அழகிய கனவாக இருந்த அந்தத் தருணங்கள்

அகன்றுவிட்டன என்பதை அறிந்துகொள்

என் இலக்கு உன் பாதை இரண்டுமே

விலகிச் சென்றுவிட்டன.

இனி நம் விழிகள் சந்திக்காது.

உன் உலகத்திலிருந்து

தொலைவில் செல்ல வேண்டிய என்னை

உடனே மறந்துவிடு

உன் காதலுக்கு ஏற்றவன் நான் இல்லை என்பதை

உடைந்த என் உள்ளம் அழுது அரற்றுகிறது

என் பெயர்கூட இனி இதயத்தில் வர இடம் தராதே.

என்னை மறந்துவிடு.

என் நினைவில் கண்ணீர் சிந்தாதே.

ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்றான ஜூலியர் சீசர் நாடகக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற லதாவின் மற்றொரு பாடலின் சில வரிகள் பாக்கியலக்ஷ்மி என்ற தமிழ்ப் படத்தின் சுசீலா பாடிய கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.

‘ஜப் ஆனேவாலா ஆத்தே ஹைன் ஃபிர் ஆகே கியோன் சலே ஜாத்தேன் ஹன்’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் பொருள்:

வருவதற்கு விரும்பி வருபவர்கள்

வந்தவுடன் ஏன் சென்றுவிடுகின்றனர்.

உள்ளத்தில் காதல் தீயை மூட்டிவிட்டு

ஏன் தொலைவில் நின்று சிரிக்கின்றனர்

நெஞ்சில் உன்மீது காதல் உண்டானபோது

ஒரு லட்சம் லட்சியம் என் உள்ளதில் இருந்தன

உன் காதல் கைகூடவில்லை எனினும்

என் இதயத்தில் உன் நினைவு பொங்கி வழிகிறது.

ஏ உலகத்தாரே விதியால் நான் எப்படி வஞ்சிக்கப்பட்டேன்

என்பதைக் காணுங்கள்

நான் அவனுடையவள், என் உள்ளமும் அவனிடமே உள்ளது

இருந்தும் ஏன் என்னை அவன் புறக்கணிக்கிறான்

என்னை அமைதி இல்லாமல் தடுமாற வைத்தவன்

எங்கிருந்தாலும் ஆனந்தமாய் இருக்கட்டும்

இனிமையுடன் இருக்கட்டும்

எனக்கு ஒரே குறைதான் இனி அவனிடம்

ஏன் இன்னும் அவன் உன் நினைவில் உறைகிறான்

விரும்பி வருபவர்கள் வந்தவுடன் ஏன் சென்றுவிடுகின்றனர்.

இந்தப் பாடலி, ‘வருவதற்கு விரும்பி வருபவர்கள் வந்தவுடன் ஏன் சென்று விடுகின்றனர். உள்ளத்தில் காதல் தீயை மூட்டிவிட்டு ஏன் தொலைவில் நின்று சிரிக்கின்றனர்’ என்ற மெஹதியின் வரிகளைப் பாருங்கள். ‘கனவில் வந்தவன் யார் எனக் கேட்டேன்; கணவன் என்றான் தோழி, கணவன் என்றால் கனவு முடிந்ததும் மறைந்தது ஏன் தோழி’ என்ற கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?

காதலனிடம் காதலை யாசிக்கும் காதலியின் வரிகளாக அமைந்த இப்படத்தின் ‘ஹமே ஹோகயா தும்ஸே பியார் பேதர்தி பால்மா’ என்று தொடங்கும் இன்னொரு பாடலின் பொருள்:

எனக்கு உன் மீது காதல் ஏற்பட்டுவிட்டது அன்பே

இதய காதலை ஏற்றுக்கொள்ள மறுக்காதே

என் காதலுக்கு பதிலாகக் கொஞ்சம் உன் காதலைத் தா

அமைதியற்ற என மனதுக்கு ஆறுதலாக

அன்பே என்று ஒரு தரம் என்னை அழை

நெஞ்சில் பதித்துவிடேன் உன் மீதான காதலை

நீ இல்லாமல் வாழ்வது இனி கைகூடாது

கழுத்தில் இடும் மாலையாய் என்னை செய்வாய்

காதலனே உன் மீது எனக்குக் காதல் ஏற்பட்டு விட்டது

சிதார், பியானோ, கிடார் போன்ற கம்பி வாத்தியங்கள் மூலம் காதல் உணர்வையும் அதன் பிரிவையும் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைப்பதில் நிகரற்று விளங்கிய மன்மோகன் இசைக்குத் தக்க விதத்தில் மெஹதியின் கவிதை வரிகள் அமைந்திருந்தன.

SCROLL FOR NEXT