இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: காத்திருக்கும் சவால்!

ஆர்.சி.ஜெயந்தன்

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென்று மூன்று அமைப்புகள் தமிழகத்தில் உண்டு. இருப்பினும் ‘புரொடியூசர் கவுன்ஸில்’என அழைக்கப்படும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே சினிமா தயாரிப்புத் தொழிலின் சீரான ஓட்டத்தின் தலையாய அமைப்பு. வாக்களிக்கும் உரிமை கொண்ட 1,200 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 150 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

தேர்தல் நடத்தப்பட்ட வளாகத்திலோ 100-க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இலவச நிலம், இலவசத் தங்கக் காசு, பணப் பட்டுவாடா, வாக்களிக்க வந்து செல்ல இலவச வாகனம், சொந்த வாகனத்தில் வந்தால் பெட்ரோல் பேட்டா, வாக்களித்து முடித்ததும் நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி எனப் பதவிக்காக நடந்த போட்டா போட்டியில் கோலிவுட்டே கலகலத்ததாகக் குறிப்பிடுகிறார்கள் தயாரிப்பாளர்களும் பத்திரிகையாளர்களும்.

விஷால் அணியின் விஸ்வரூபம்

தேர்தலுக்கு முதல் நாள் நடிகர் சங்கக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை விஷாலும் அவரது அணியினரும் நடத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. எப்படியிருந்தாலும் ஆர். ராதாகிருஷ்ணன் அணிக்கே வெற்றி கிடைக்கும் என்று எல்லா மட்டத்திலும் எதிர்பார்க்கப்பட்டபோதும் விஷால் அணிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்திருக்கிறது. வெற்றி பெற்ற 27 பேரில் ஐந்து பேரைத் தவிர மற்ற அனைவரும் தற்போது படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள். “இப்போது படம் எடுக்காதவர்களுக்கு எங்கள் பிரச்சினைகள் தெரிவதில்லை” என்ற விஷால் அணியின் குற்றச்சாட்டு நன்றாக வேலை செய்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதே நேரம் “ராதாகிருஷ்ணன்–கேயார் அணிகள் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் விஷால் அணிக்கு வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை; அனுபவம் மிக்க தொழில்முறை தயாரிப்பாளர்கள் தற்போது படங்களைத் தயாரித்துவருபவர்களை அலைய விட்டதும், சங்க விதிமுறைகளைக் காரணம் காட்டிக்கொண்டு பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்காததும் இந்தத் தேர்தலில் மூத்த தயாரிப்பாளர்கள் தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணம் என்பதை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

மேலும், மூத்த சங்க நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு, ஒருவர் பதவியைப் பறிக்க மற்றவர் குழி பறித்ததும் அவர்களது ஒற்றுமையை பாதித்துவிட்டது. இது விஷால் அணிக்குச் சாதகமாகப் போய்விட்டது. அதுவுமில்லாமல் மூத்த நிர்வாகிகளில் பலர் பெரிய நட்சத்திரங்களின் கால்ஷீட் பெறுவதற்காகவே தங்களது பதவிக் காலத்தை ஓட்டினார்களே அன்றி, பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருக்கும் சிறு படங்களை விடுவிக்க ஆமைவேகத்தில் கூடச் செயல்படாமல் போனதும் அவர்களது தோல்விக்கு முக்கியமான காரணம்” என்கிறார் சிறுபடங்களை எடுத்து தன் மொத்த பணத்தையும் இழந்துவிட்ட தயாரிப்பாளர் ஒருவர்.

தற்போது படமெடுத்துவருபவர்கள், வென்ற அணியில் அதிகமிருப்பதால் இவர்களுக்குத் தயாரிப்பாளர்களின் நடப்புப் பிரச்சினைகளின் ஆழம் தெரியும். தமிழ் சினிமாவைத் தற்போது மிகவும் பாதித்துவரும் பிரச்சினைகளில் முக்கியமானது திருட்டு வீடியோ மற்றும் இணையப் பதிவேற்றம். இவை இரண்டும் ஒழிக்கப்பட்டாலே தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படமெடுக்க லாபம் கிடைக்கும். இதற்கு மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தை அவர்கள் காலம் தாழ்த்தாமல் நாடுவது மிக முக்கியம்.

இந்திய அரசு வழியே இணையதளங்களுக்கான ‘டொமைன் ரெஜிஸ்ட்ரி’ அமைப்பை அணுகி திருட்டு இணையதளங்களை நடத்திக் கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்களை சர்வதேசக் காவல் வழியே ஒழித்துக்கட்ட முயல வேண்டும். இதற்கு அவர்கள் தொழில்நுட்பம் தெரிந்த, சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க ஒரு குழுவை அமைப்பது அவசியம். அதை மட்டும் விஷால் அணி சாதித்துவிட்டால் அதுவே தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் மைல் கல்லாக மாறிவிடும்.

தயாரிப்பாளர்களின் அடுத்த பெரிய பிரச்சினை, சிறு முதலீட்டுப் படங்களுக்கான திரையரங்குகளின் தேவையும் பெரிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதிகளும். சிறுபடங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் விதமாகப் பெரிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதிகளை வரையறுத்துக்கொண்டு, சிறு படங்களுக்கான தேதிகளை அறுதிட்டுக் கூறினால் மட்டுமே திரையரங்க உரிமையாளர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் சிறு படங்களைத் திரையிட முன்வருவார்கள். இதை விஷால் அணி நன்கு அறிந்திருக்கிறது என்று நம்பலாம்.

குவிந்துகிடக்கும் தேவைகள்

தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்டுவதில் தொய்வும் இழப்பும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து அவர்கள் படங்களைத் தயாரிக்க முனைவார்கள். அது நடக்க வேண்டுமானால், படங்களின் தொலைக்காட்சி உரிமைகள் நியாயமான விலைக்கு வாங்கப்பட வேண்டும். இதற்காகத் தொலைக்காட்சிகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த கசப்பான கடந்த காலத்தை மறந்துவிட்டு, தயாரிப்பாளர் சங்கத்துக்கென்று ஒரு தனியார் தொலைக்காட்சியைத் தொடங்குவதே தீர்வாக அமையும். காலப்போக்கில் இந்தத் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கையைக்கூட அதிகரித்துக்கொள்ளலாம்.

அதேபோல ஒரு படத்துக்கான வெளிநாட்டு வியாபாரத்தில் எத்தனை விதமான மேடைகள் இருக்கின்றனவோ அனைத்தையும் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பாடமாகச் சொல்லித்தந்து அவர்கள் லாபம் ஈட்டத் தயாரிப்பாளர் சங்கம் முன்வருமானால் அதுவே பெரிய சேவையாக இருக்கும். தற்போது இணையத்தின் அசுர வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு டிஜிட்டல் வியாபாரத் தளத்தில் படங்களை எவ்வாறு வெளியிடுவது என்பதையும் ரகசியமாகப் பொத்தி வைக்காமல் அதை ஜனநாயகப்படுத்தி அனைத்துச் சிறிய தயாரிப்பாளர்களுக்கும் வழிகாட்ட வேண்டிய பொறுப்பையும் புதிய அணி எடுத்துக்கொண்டால் நஷ்டம் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் இருக்கும்.

தற்போது தமிழ் சினிமாவை அடிக்கடி உரசிப்பார்க்கும் மற்றொரு பிரச்சினை, திரைப்படங்களுக்கு வட்டிக்கு நிதிஉதவி செய்யும் பைனான்சியர்கள் - தயாரிப்பாளர்கள் இடையில் மூளும் கடைசிநேர வெளியீட்டுச் சிக்கல். திரைப்படங்களுக்கு வட்டிக்குப் பணம் தரும் பைனான்சியர்களை ஒருங்கிணைத்துப் பரஸ்பரம் ஏமாற்றாமல் அதே நேரம் யாரும் நஷ்டமடையாமல் தொடர்ந்து பைனாசியர்களின் நிதி கிடைக்கும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தயாரிப்புச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டிய எல்லா நடவடிக்கைகளுக்கும் தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் ஆகிய இரண்டு தரப்புமே கட்டுப்பட வேண்டும். அவற்றில் முக்கியமானது முன்னணிக் கதாநாயகர்களின் ஊதியம் சம்பந்தப்பட்டது. இதிலும் விஷால் அணி கவனம் செலுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT