இந்து டாக்கீஸ்

விமர்சனத்தில் ஏன் இந்த வன்மம்?

செய்திப்பிரிவு

ஒரு படைப்பின் மீதான விமர்சனத்துக்கும் ஒரு படைப்பாளி மீதான வன்மத்துக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. தற்காலத் தமிழ் சமூகத்தில் ரஜினி, கமல், கருணாநிதி, வைரமுத்து வரிசையில் மணி ரத்னமும் விமர்சனத்துக்கு ஈடான வன்மத்துக்கு உட்படுபவர். `காற்று வெளியிடை' திரைப்பட வெளியீட்டுக்கு முன்னும் சரி,வெளியான பிறகும் சரி, படத்தைவிட மணி ரத்னம் மீதான விமர்சனங்கள்தான் அதிகம்.

ஒரு படைப்பாளி தனக்கென்று இருக்கும் வட்டத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டு தான் பார்க்கும், உணரும் விஷயங்களைக் காட்சிக்கு வைக்கிறார். அது நன்றாக இருந்தால் ரசிக்கப்படுகிறது. அபத்தமாக இருந்தால் வீசியெறியப்படுகிறது.

ஆனால் படைப்பாளி யார், அவர் பின்புலம் என்ன, அவரது நோக்கம் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருப்பது ரசனையல்ல; அரசியல். ஒரு படைப்பாளி தன்னைச் சமரசம் செய்துகொள்ளாமல் தனது சுதந்திரத்தில் ஒரு கருத்தைக் காட்சிப்படுத்தும்போது அது நிச்சயம் விமர்சிக்கப்படும். ஆனால் அதில் வன்மம் நெளியும்போது அந்தப் படைப்பாளி சிதைக்கப்படுகிறான்.

எல்லைகள் தாண்டிவந்த படைப்பாளி

அவரது கதாபாத்திரங்கள் அடித்தட்டு மக்களைப் பிரதிபலிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே மணி ரத்னம் அந்த மக்களுக்கு எதிரானவர் என எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அவருக்குத் தெரிந்ததை அவர் செய்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் அவர் வளர்ந்து வந்த வாழ்க்கைச் சூழலின் தாக்கமாகக்கூட இருக்கலாம். அனைத்துப் படங்களிலுமே தான் சொல்லவரும் விஷயங்களை முழு ஈடுபாட்டோடு சொல்லிவருகிறார்.

எலைட் என்று சொல்லும் விஷயங்களை விடுத்து, சாதி வேறுபாடு பேசிய ‘இந்திரா' படத்திலும் அவரது பங்கு இருக்கிறது, மத ஒற்றுமை பேசிய ‘பம்பாய்’கூட அவர் படம்தான். ‘ராவணன்’ சொல்லவந்த கருத்துகள் மேட்டுக்குடி மனநிலையைச் சாடியவைதான். ‘கடல்’ படம் அவரது திரைமொழியில் இருந்து சற்று வெளியே வந்து எடுத்த முயற்சிதான்.

ரோஜாவுக்குப் பிறகு

மணி ரத்னத்தின் முதல் படம் வேண்டுமானால் ‘பல்லவி அனுபல்லவி’ என்று இருக்கலாம். ஆனால் அவர் பெயர் சொல்லக்கூடிய முதல் படம் ‘மௌன ராகம்’தான். ‘நாயகன்’, ‘தளபதி’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ என்று மணி ரத்னத்தின் சாயல் ‘ரோஜா’வுக்கு முன்புவரை வேறாகத்தான் இருந்திருக்கிறது. ரோஜா அவரை இந்தியாவின் இயக்குநராக ஆக்குகிறது. இந்திய சினிமாவின் முகங்களில் ஒன்றாக மணி ரத்னம் அறியப்படுகிறார். அதன் பிறகுதான் அவர் மீது அகில இந்தியச் சாயம் பூசப்படுகிறது.

இங்கு சினிமா என்பது வியாபாரம். கலை, உணர்வு, சமூகப் பார்வை எல்லாமே இரண்டாம்பட்சம்தான். வியாபாரத்துக்காகச் சில சமரசங்கள் தேவைப்படுகின்றன. தமிழ் மொழியில் மட்டும் படம் எடுத்து, தமிழ்நாட்டுக்கு மட்டுமான வியாபாரம் என்றால் அதில் ஒரு முறைமையும், மாநிலங்கள் தாண்டிய படங்களுக்குச் சில சமரசங்களையும் அவர் கையாள்கிறார். இது அவரே ஒப்புக்கொண்ட உண்மையும்கூட. ‘ராவணன்’ படம் பேசிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையில்கூடத் தமிழ் வாடை இல்லாதது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். அது மூன்று மொழிகளுக்கான வியாபாரம். இதை விமர்சிக்கலாம் ஆனால் வெறுப்பதில் கருத்தில்லை.

அவர் மட்டுமே காரணம் இல்லை

‘ரோஜா’வுக்குப் பின்னர் மணி ரத்னத்தை அரசியல் சாயம் கொண்டும், சாதிய வன்மம் கொண்டும் ஒதுக்க, அவரது படங்கள் பொதுத்தளத்திலிருந்து கொஞ்சம் விலகத் தொடங்கின. இந்த விலகலுக்கு அவர் மட்டுமே காரணம் இல்லை. ‘ரோஜா’ படத்தில் அவர் காட்டியது கணவனைப் பிரிந்த மனைவியின் போராட்டம், கணவனின் ஏக்கம். இதற்கான தளமாக காஷ்மீரும், இந்திய ஒருமைப்பாடும் அவருக்குத் தேவைப்பட்டன. அவரது நிலைப்பாடு ஒரே இந்தியா, ஒற்றுமை. அவ்வளவுதான்.

ஆனால் அவர் எதிர்கொண்ட குற்றச்சாட்டு, “எப்படி காஷ்மீர் போராளிகளைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கலாம்” என்பது. அவரது பார்வையில் அவர்கள் தீவிரவாதிகளும் அல்ல, போராளிகளும் அல்ல. பின்னிருந்து யாராலோ இயக்கப்படும் இந்தியர்கள் என்று அவர்களைச் சித்தரித்திருப்பார். அந்த யார் யாரென்பதுதான் அரசியல். அப்படிக் காட்சிகளால் வைப்பது அவர் கருத்துச் சுதந்திரம். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’கூடத் தீவிர அரசியல் பேச எடுக்கப்பட்ட படமல்ல. ஈழ விஷயத்தில் அவர் விரும்பியது அமைதியென்றால் அது அவர் பார்வை. சுதந்திரம்.

ரசிகர்கள் மீதான எள்ளல்

இங்கு ரசனையென்பது பொதுவானதல்ல. ரசனை ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது. மணி ரத்னம் ரசிகர்கள் என்று குறிப்பிடும் போதெல்லாம் “மணி சார் பக்தாள்ஸ்”, “elite group” என்று எழுதப்படுவது ஏன்? மணி ரத்னம் ரசிகர்கள் யதார்த்தவாதிகள் அல்ல என்று நினைத்துக்கொள்வது எந்த மாதிரியான மனநிலை? ‘தளபதி’யில் காதல் முறிவுக் காட்சி, ‘நாயக’னில் போலீஸ் கைதுசெய்து விடுவிக்கும் காட்சிகள், ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் விஜயகுமார் கண் விழிக்கும் காட்சி, ‘உயிரே’ படத்தில் மனிஷா கிட்டுவிடம் திட்டு வாங்கும் காட்சி, ‘இருவ’ரில் ப்ரகாஷ்ராஜும் மோஹன் லாலும் ஒரு திருமணத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சி, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ இறுதிக் காட்சியில் அமுதாவும் சியாமாவும் பேசிக்கொள்ளும் உணர்வுகள் என்று இதையெல்லாம் யாரும் ரசிக்கலாம்.

‘அலைபாயுதே’வில் மாதவன் அண்ணன் மகள் விளையாட்டாகப் போன் செய்து, பிரியும் முடிவிலிருக்கும் மாதவனும் ஷாலினியும் பேசிக்கொள்ளும் காட்சியை ரசிக்க எந்த ‘எலைட்’ தகுதியும் தேவையில்லை. எனக்கு ஆங்கிலப் படங்கள் பார்க்கும் ரசனை இல்லை. ஆங்கிலப் படங்களை சிலாகிப்பவர்கள் எனக்கு ‘எலைட்’ குழுவாகத்தான் தெரிவார்கள்.

ரசனைக்கு மொழியோ தகுதியோ எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் அதை எள்ளி நகையாடும் உரிமை யாருக்கும் இல்லை. ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அவரைத் தூற்றுவதும், ‘இனிமே படம் எடுக்க வேண்டாம்', ‘ஓய்வெடுத்துக்குங்க' , ‘மணிக்கு வயசாகிடுச்சு' போன்ற அறிவுரைகளும் சொல்லச் சொல்லத்தான் அவரின் இருப்புக்கான எதிர்பார்ப்பு அதிகமாகிறது. வெற்றி தோல்வி எல்லாம் படைப்பாளிகளை அடக்கிவிடப்போவதில்லை. அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். அதில்தான் அவர்களுக்குத் திருப்தி.

பிடிக்கவில்லையென்றால் ஒதுக்குங்கள். வெறுக்கிறீர்கள் என்றால் ஒதுங்குங்கள். சேறை வாரிப் பூசி உங்கள் கைகளையும் சேறாக்கிக்கொள்ளாதீர்கள். ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் மணிரத்னம் சினிமா அழகியலின் அடையாளம்.

SCROLL FOR NEXT