இந்து டாக்கீஸ்

திரையும் இசையும்: உடைந்த மனம், சாய்ந்த மலை

எஸ்.எஸ்.வாசன்

1946இல் வெளியான ஷாஜஹான் என்ற திரைப்படத்தின் பாடலை எழுதியவர் மஜ்ரூர் சுல்தான் பூரி எனற உருதுக் கவிஞர். இந்தித் திரை உலகின் பொற்காலம் என்று சொல்லப்படும் 1960-65 வரையிலான காலகட்டத்தின் அமரத்துவம் வாய்ந்த பல பாடல்களை எழுதிய பெருமைக்குரியவர். பல அம்சங்களில் கண்ணதாசனுடன் ஒப்பிடப்படத் தகுந்தவர். நெஞ்சைத் தொடும் மனித உணர்வுகளின் வண்ணங்களை சாமன்யர்களும் புரிந்துகொள்ளும் எளிய ஹிந்தி மற்றும் உருதுச் சொற்கள் மூலம் பல புகழ் பெற்ற தத்துவ, காதல் பாடல்களை தந்த சுல்தான் பூரி, கண்ணதாசன் போல் திரையைத் தாண்டிய கவிஞராகத் திகழ்ந்தார். உருது கஜல்கள் இயற்றுவதில் மிகுந்த திறமையுடைய இவரின் பங்களிப்பு அத்துறைக்கு முழுவதும் கிடைக்காமல் போனதற்கு திரைப்பாடல் துறைக்கு இவர் அதிகமாய் பங்களித்ததே காரணம் எனக் கருதுவோர் பலர் உண்டு.

மனைவியின் மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியால், மும்தாஜ் இறந்த பிறகு தனது காதலின் சின்னமாக தாஜ்மகால் கட்டினார் முகலாய மாமன்னர் ஷாஜஹான். அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான ஷாஜஹான் திரைபடத்தின் பாடலைப் பாடியவர் கே.எல். சைகல். கம்பீரமும் கனிவும், சோகமும் கலவையாய் இழந்தோடும் வித்தியாசமான குரல் வளம் இவருடையது. இந்தித் திரை இசை அமைப்பாளர்களின் பிதாமகர் என்ற தகுதிக்குரிய நௌஷாத் அலி இசை அமைத்த பாடல் அது.

ஜப் தில் ஹீ துட் கயா, ஜப் தில் ஹீ துட் கயா
ஹம் ஜீக்கே க்யா கரேங்கே, ஹம் ஜீக்கே க்யா கரேங்கே
உல்பத் கா தியா ஹம்னே, இஸ் தில்மே ஜலாயாத்தா
உம்மீத் கே ஃபூலோன் ஸே, இஸ் கர் கோ சஜாயாத்தா

என்று தொடங்கும் பாடல் அது.

அந்தப் பாடலின் பொருள்:

மனதே உடைந்து போகும் பொழுது
மனதே உடைந்து போகும்பொழுது
நாம் வாழ்ந்து என்ன பயன்
நாம் வாழ்ந்து என்ன பயன்
ஏமாற்றம் என்ற விளக்கை
என் உள்ளத்தில் ஏற்றினேன்
நம்பிக்கை என்னும் மலர்களால்
என் வீட்டை அலங்கரித்தேன்
ஒரு பாண்டம் உடைந்துவிட்டது
ஒரு பாண்டம் உடைந்து விட்டது
நாம் வாழ்ந்து என்ன பயன்
மனதே உடைந்து போகும் பொழுது
அறியமால் போனதே என் பாதை
இத்தனை துயரமென்று,
இத்தனை லட்சியங்களால் நிறைந்த பாதையின்
விருப்பப் பூக்கள் கண்ணீர் ஆகியது
உடன் இருந்தவர்கள் எல்லாம் விலகிவிட்டார்கள்
நாம் வாழ்ந்து என்ன பயன்
மனதே உடைந்து போகும் பொழுது

நமக்குப் பிடித்தமானவர்களைப் பிரிய நேரும்பொழுது மனம் உடைந்து நாம் கொள்ளும் இந்தக் காதல் விரக்தி உணர்வை, மஜ்ரூர் சுலதான் பூரி வெளிப்படுத்திய அதே உணர்வுடன் மட்டுமின்றி, ஏறக்குறைய ஒரே வித வார்த்தைப் பிரயோகத்துடனும், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு கண்ணதாசன் திரைத்தமிழில் வடித்திருகிறார். 1965இல் வெளிவந்த ‘கார்த்திகை தீபம்’ என்ற படத்தில் இடம்பெற்ற இப்பாடலின் இசை அமைப்பாளர் ஆர் சுதர்சன்.

அந்தப் பாடல்:

மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம் - இந்த
மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?
(மலை சாய்ந்து போனால்)

நடை மாறிப் போனால் கலையாகலாம்
விடை மாறிப்போனால் சரியாகலாம்
கடல் மாறிப் போனால் நிலம் ஆகலாம் - காதல்
தடம் மாறிப் போனால் என்ன செய்யலாம்?
(மலை சாய்ந்து போனால்)

இருண்டாலும் வானில் மீன் காணலாம்
திரண்டாலும் பாலில் நிறம்காணலாம்
மருந்தாலும் தீரா நோய் தீரலாம் - காதல்
இழந்தாலே வாழ்வை என்ன செய்யலாம்?
(மலை சாய்ந்து போனால்)

கண்ணதாசனின் வரிகளை உணர்ச்சி ததும்பப் பாடியவர் டி.எம். சௌந்தரராஜன்.

இந்தியத் திரையிசையில் தத்துவப் பாடல்களைப் பொருத்தவரை கண்ணதாசன் காலம் வரை, தமிழ் –இந்தி திரைப் பாடல்கள் ஓரளவுக்கு ஒன்றாகவே இருந்தன எனக் கூறலாம். ஒப்பிட இயலாத கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் இந்தச் சமன்பாட்டை மாற்றின என்றும் சொல்லலாம். மேலே காணப்படும் பாடல்கள் உள்படப் பல பாடல்களை இதற்கு உதாரனமாகக் காட்டலாம்.

SCROLL FOR NEXT