இந்து டாக்கீஸ்

ஆஸ்கர் விருது போட்டிக்கு ‘தி குட் ரோடு’ பரிந்துரை!

செய்திப்பிரிவு

'தி குட் ரோடு' என்ற குஜராத்தி மொழி திரைப்படம், இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருது போட்டிக்கு, அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

’சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து அனுப்ப பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்டன. ‘தி லஞ்ச் பாக்ஸ்’, ‘தி குட் ரோடு’, ‘பாக் மில்கா பாக்’, ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’, ‘ஷாப்டூ’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்டன.

வங்க மொழி இயக்குநர் கெளதம் கோஷ் தலைமையிலான இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு, ‘தி குட் ரோடு’ என்கிற குஜராத்தி மொழி திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்தி திரையுலகில் பல்வேறு விமர்சகர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பலரும் ‘தி லஞ்ச் பாக்ஸ்’ என்கிற திரைப்படம் தான் பரிந்துரைக்கப்படும் என்று ஆவலோடு எதிர்நோக்கியிருந்தனர். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் அறிவிப்பால் பலரும் அதிர்ச்சியடைந்த பலர் ட்விட்டர் தளத்தில் தங்களது கருத்துக்களை பதித்தவண்ணம் உள்ளனர்.

‘தி குட் ரோடு’ என்கிற திரைப்படம் ஜியான் கெர்யா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கிய படமாகும். சிறந்த குஜராத்தி மொழி திரைப்படம் என்கிற தேசிய விருது பெற்ற இது என்பது குறிப்பிடத்தக்கது.

இர்பான் கான், நிம்ராத் கெளர் நடித்த ’தி லஞ்ச் பாக்ஸ்’ என்கிற படத்தினை ரித்தேஷ் பத்ரா இயக்கியிருந்தார். அனுராக் கஷ்யாப் உள்ளிட்ட சிலர் தயாரிக்க, கரண் ஜோஹர் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து இப்படத்தினை வெளியிட்டது. 2013 கேன்ஸ் திரைப்பட விழாவில் ’விமர்சகர் பார்வையாளர் விருது’ வென்ற திரைப்படம் இது என்பதால், ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப இப்படம் தேர்வு செய்யபடும் என்ற பேச்சு விமர்சகர்கள் மத்தியில் நிலவியது.

இப்படத்தினை யு.டிவி நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டிருக்கும் கரண் ஜோஹர் “இது மிகவும் துரதிஷ்டவசமானது. ’தி லஞ்ச் பாக்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்க அனைத்து அம்சங்களும் நிறைந்தது. மிகப்பெரிய ஏமாற்றத்தினை அடைந்திருக்கிறோம்” என்று ட்விட்டர் தளத்தில் தெரிவித்துருக்கிறார்.

SCROLL FOR NEXT