எஸ். எஸ். ராஜேந்திரன் - அஞ்சலி
அண்ணா போல் எம்.ஜி.ஆர். போல் ராஜேந்திரனும் எஸ்.எஸ்.ஆர். என்னும் மூன்றெழுத்துகளால்தான் அதிகமும் அறியப்பட்டார். பசும்பொன் முத்துராமலிங்கத் தால் பெயர் சூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆரும் முன்னிருவரைப் போலவே கலை, அரசியல் இரண்டையும் தனது மூச்சாகக் கொண்டவர்.
மதுரை மாவட்டம் உசிலம் பட்டி அருகே உள்ள சிறிய கிராமம் சேடப்பட்டி. அந்த ஊரைச் சேர்ந்தவர் கல்வித் துறையில் பணியாற்றிய சூரிய நாராயணன். 1928, ஜனவரி 1 அன்று அவருக்கும் ஆதி லட்சுமிக்கும் மகனாகப் பிறந்து தன் யதார்த்தமான நடிப்பால் தமிழக மக்களின் மனங்களைத் தன்பால் ஈர்த்த கலைஞர் 24.10.2014 அன்று காலமான எஸ்.எஸ்.ராஜேந்திரன். திராவிடக் கலைஞர்களில் தனித்துவம் பெற்றிருந்த அவரது மூச்சு அடங்கியிருந்தாலும், தமிழ்த் திரைகளில் ஒலிக்கும் அவரது கம்பீரமான குரல் அடங்க வாய்ப்பில்லை.
நாடகம் தந்த நாயகன்
தன் மகனை ஆட்சியராக்கிப் பார்க்க விழைந்த தந்தையின் எண்ணத்திற்கு மாறாகச் சிறு வயதிலேயே எஸ்.எஸ்.ஆரின் மனதில் கலையார்வம் ததும்பியது. ஐந்தாம் வகுப்பு படித்தபோதே அவரது அழகிய தோற்றம் அவரை நாடகம் ஒன்றில் அர்ஜுனனாக்கியது. அப்போதே நடிப்பு அவருக்குள் துளிர்விட்டது.
அது மெல்ல மெல்ல வளரும் சூழ்நிலையைக் காலம் அமைத்துக் கொடுத்தது. அவர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது வெளியான எம்.கே.தியாகராஜர் பாகவதர் நடித்த சிந்தாமணி என்னும் திரைப்படம் எஸ்.எஸ்.ஆரை முழு நடிகராக மாற்றியது. படத்தில் அவர் நடிக்கவில்லை. ஆனால் அந்தப் படத்தை நாடகமாக்கி அவரது பள்ளியில் மேடையேற்றினர். அதில் நடித்த எஸ்.எஸ்.ஆர். தனது உணர்வுபூர்வ நடிப்பால் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
பச்சைப் பாலகனாக இருந்தபோதும் அவரது கணீர்க் குரலும், கன்னத்துக் குழியும், கச்சிதமான தமிழ்ப் பேச்சும், கலையார்வமும் கண்டவரைக் கவர்ந்திழுத்தன. எஸ்.எஸ்.ஆரின் அத்தனை திறமைகளையும் கண்டுகொண்ட அவரது பள்ளி ஆசிரியரான வார்டன் வாத்தியார் எஸ்.எஸ்.ஆர். நடிகராகலாம் என்னும் உத்வேகத்தைத் தந்துள்ளார். அதன் விளைவால் எஸ்.எஸ்.ஆர். படிப்பிலிருந்து விலகி நடிப்புக்கான பாதையில் பயணித்தார்.
குருவிடமிருந்து பாராட்டு
பாய்ஸ் கம்பெனியில் பாலபாடம் கற்ற எஸ்.எஸ்.ஆர்., அதைத் தொடர்ந்து தமிழ் நாடக உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையான டி.கே.ஷண்முகத்தின் குழுவில் சேர்ந்தார் எஸ்.எஸ்.ஆர். அந்தக் குழு, நடிப்பின் நுட்பங்களைத் துல்லியமாக அவருக்கு உணர்த்தியது.
தொடக்கத்தில் தர்பாரில் தடிபிடித்து நின்று கூட்டத்தில் ஒருவராக இருந்த அவர், தன் ஆர்வத்தாலும் திறமையாலும் படிப்படியாக நாடகக் குழுவின் முன்வரிசைக்கு வந்தார். எஸ்.எஸ்.ஆரின் நடிப்புலக ஆசான் அவ்வை ஷண்முகமே தனிப்பட்ட முறையில் பாராட்டும் அளவுக்கு உயர்ந்தார். ஒரு நாடகத்தில் அவரது நடிப்பைப் பார்த்து, அவருடைய தந்தையே பாராட்டிவிட்டார். பிறகென்ன எஸ்.எஸ்.ஆரின் ஒரே மனத்தடையும் அகன்றுவிட்டது.
லட்சிய நடிகர் பிறந்தார்
ஈரோட்டில் 19.11.1943 அன்று சந்திரோதயம் நாடகம் நடத்த வந்த அண்ணாதுரையுடன் எஸ்.எஸ்.ஆருக்கு ஏற்பட்ட பரிச்சயம் அவரது அரசியல் வாழ்வுக்கு அஸ்திவாரமிட்டுள்ளது. மனம் சோர்வடைந்த காலங்களில் புத்துணர்ச்சி பெற எஸ்.எஸ்.ஆர் விரும்பினாரென்றால் அவர் சென்றது காஞ்சிக்குத்தான். அண்ணாவைப் பார்த்து அளவளாவி வந்தால், தனது துயரமெல்லாம் தூசாய்ப் பறந்துவிடும் என்ற நம்பிக்கை எஸ்.எஸ்.ஆருக்கு இருந்துள்ளது.
நாடகங்களின் மூலம் கிடைத்த புகழ் அவரைத் திரைப்படத்தை நோக்கி நகர்த்தியது. பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் சகோதரராகவும் ரத்தக் கண்ணீரில் (1954) எம்.ஆர்.ராதாவின் நண்பன் பாலுவாகவும் தோன்றினார். நாடகத்தில் இருந்து வந்தபோதும் திரையில் பெரும்பாலும் மிகையாக நடிக்காமல் கதாபாத்திரத்திற்குத் தேவைப்பட்ட யதார்த்த நடிப்பையே வெளிப்படுத்தினார் அவர்.
தமிழ்த் திரையில் யதார்த்த மாக நடித்த ரெங்காராவ், டி.எஸ்.பாலையா, எம்.ஆர். ராதா வரிசையில் தனக்கும் இடம் ஏற்படுத்திக்கொண்டார். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட தமிழின் பிரதான நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திரப் பாத்திரங் களையும் ஏற்று நடித்திருந்த எஸ்.எஸ்.ஆர். பெரியாரின் திராவிடக் கொள்கைகளில் கொண்டிருந்த தீவிரப் பிடிப்பால் புராணப் படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் காரணமாக லட்சிய நடிகர் என்னும் அடையாளப் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது.
குலதெய்வம், சாரதா, மறக்க முடியுமா, முதலாளி, பூம்புகார், வானம்பாடி போன்ற எண்ணற்ற படங்கள் அவரது நடிப்பின் சிறப்பை எடுத்துக் கூறும் விதமாக வெளிவந்துள்ளன. திரைப்பட நடிகராக மாறிய பின்னரும் நாடகக் காதலாலும் நாடக நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்னும் எண்ணத்தாலும்
எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தை ஏற்படுத்தி நாடக நடிகர்களுக்கு மேடையமைத்துக் கொடுத்தார் அவர். அண்ணா எழுதிய சந்திரமோகன், கருணாநிதியின் அம்மையப்பன், என் தங்கை, மணிமகுடம், புதுவெள்ளம் போன்ற பல நாடகங்களை இந்த நாடக மன்றத்தின் மூலம் அரங்கேற்றியுள்ளார் எஸ்.எஸ்.ஆர். கேரளத் திரையுலகின் பிரதான நடிகையான ‘செம்மீன்’ ஷீலா எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தால் அறிமுகமான நடிகையே.
தனது நாடக, திரையுலக, அரசியல் அனுபவங்களையெல்லாம் மனத்தில் தேக்கிவைத்திருந்த எஸ்.எஸ்.ஆர், அவற்றை நான் வந்த பாதை என்னும் பெயரில் நூலாக்கியிருந்தார். அதைக் கடந்த செப்டம்பர் மாதம்தான் அகநி பதிப்பகம் வெளியிட்டது. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட புகழ்பெற்ற நடிகர்களுடனான தனது அனுபவங்களையும் பெரியார், அண்ணாதுரை ஆகியோருடனான அரசியல்ரீதியான நட்பையும் பசும்பொன் முத்துராமலிங்கத்துடனான தனிப்பட்ட உறவையும் தனிப்பட்ட வாழ்வின் நினைவுகளை பல சம்பவங்களையும் அந்தச் சுயசரிதையில் எஸ்.எஸ்.ஆர். விரிவாகவும் சுவைபடவும் எழுதியுள்ளார்.
அரசியலில் பதித்த முத்திரை
தமிழ்த் திரையுலகில் நிலைத்து நின்ற காலத்திலேயே அரசியலிலும் தனது ஆளுமையைச் செலுத்தியவர் எஸ்.எஸ்.ஆர். 1957-ம் ஆண்டு தேனி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பாகப் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்., காங்கிரஸ் வேட்பாளரான என்.ஆர். தியாகராஜனிடம் 6,781 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
ஆனால் அதே தொகுதியில் 1962-ம் ஆண்டு போட்டியிட்டு அதே வேட்பாளரை 12,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டமன்றத்தில் நுழைந்துள்ளார். அப்போது தமிழகத்தில் அந்தத் தொகுதியில் மட்டுமே பிரதமர் ஜவஹர்லால் நேரு காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அதையும் மீறி
எஸ்.எஸ்.ஆர். வென்றாலும் அந்தத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் எஸ். வி. நடேசனிடம் அண்ணாதுரை தோற்றுப்போனது அவருக்குத் தாங்க முடியாத வருத்தத்தை அளித்திருந்தது.
அரசியலிலோ திரைத் துறையிலோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவராக இல்லாத போதும் எஸ்.எஸ்.ஆர். தனக்கான பாதையைத் தானே வகுத்துக்கொண்டு அதில் திறம்படச் செயல்பட்டவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல பரிமாணங்களை எடுத்திருந்தார் எஸ்.எஸ்.ஆர்.
எம்.ஜி.ஆருக்கு மதுரை வீரன், சிவாஜி கணேசனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் எஸ்.எஸ்.ஆருக்குச் சிவகங்கைச்சீமை. மருது பாண்டியரின் சிறப்புரைக்கும் படத்திற்குப் பெருமை சேர்த்த எஸ்.எஸ்.ஆர். மருது பாண்டியர்கள் நினைவு தினத்தன்றே மறைந்தது காலத்தின் விநோத முடிச்சுதானா?
தகவல்கள் ஆதாரம்:
நான் வந்த பாதை
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
அகநி வெளியீடு
எண்:3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி- 604408
தொலைபேசி: 04183 226543
விலை ரூ. 500
படங்கள் உதவி: ஞானம்.