முன்னெப்போதையும் விட, இந்த ஆண்டு ‘கான்' திரைப்பட விழா கூடுதல் அம்சங்களோடு களைகட்டுகிறது. இந்தத் திரைப்பட விழா தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவு, முதன்முதலாகத் தமிழ்த் திரைப்படம் ஒன்றின் அறிமுக விழா நிகழ்ச்சி, ‘நெட்ஃப்ளிக்ஸ்' சர்ச்சை... என அதற்குப் பல காரணங்கள்.
இந்த ஆண்டு கான் (Cannes என்னும் பிரெஞ்சுச் சொல்லின் சரியான உச்சரிப்பு ‘கான்’) திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து எந்தப் படமும் அதிகாரபூர்வத் திரையிடலுக்குத் தேர்வாகவில்லை. இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர் பாயல் கப்பாடியா. அவரது ‘ஆஃப்டர்நூன் க்ளவுட்ஸ்' எனும் குறும்படம் ‘சினி ஃபவுண்டேஷன்' பிரிவில் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருப்பது மட்டுமே ஒரே ஆறுதல்!
அறிமுக விழா
இந்திய சினிமா எதுவும் போட்டிப் பிரிவுகளுக்குத் தேர்வாகித் திரையிடப்படவில்லையே தவிர, இந்திய சினிமா வியாபாரம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘பாகுபலி' முதல் பாகத்தின் தமிழ்ப் பதிப்பு உரிமையை வாங்கி வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது அகில உலகக் கவனத்தையும் பெறும் நோக்கத்துடன் தனது பட நிறுவனத்தை லிமிடெட் கம்பெனியாக்கி தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் என்ற பெயர் மாற்றத்துடன் ‘பாகுபலி’யை விஞ்சும் நோக்கத்துடன், ‘சங்கமித்ரா' படத் தயாரிப்பைக் கையில் எடுத்திருக்கிறது. இவர்களது 100-வது படத் தயாரிப்பு என்பதால் தொடக்கத்திலேயே கவனத்தை ஈர்க்க அந்தப் படத்தின் அறிமுக விழாவை கான் திரைப்பட விழாவில் நடத்தி அசத்தியிருக்கிறார்கள்.
அறிமுக விழாவில் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன், இரு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெயம் ரவி, ஆர்யா எனப் படக்குழுவில் பாதிப் பேர் பங்கேற்றது இந்திய ஊடகங்களுக்குத் தீனியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் சுந்தர்.சி, ‘சங்கமித்ரா’வுக்கான தாக்கம் குறித்துப் பேசியபோது “தமிழில் என்னை மிகவும் பாதித்த பிரம்மாண்டமான திரைப்படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்தியத் திரையுலகமே அன்று திரும்பிப் பார்த்த படம். இன்றைய காலகட்டத்துக்கு இந்தியாவும் உலகமும் திரும்பிப் பார்க்கும் படத்தை இயக்க விரும்பி, 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டுவரும் படம் ‘சங்கமித்ரா’” என்று கூறினார். சுந்தர். சியின் பேச்சைப் போலவே கவரும் வகையில் இருந்தது ஸ்ருதி ஹாசனின் கான் ஃபேஷன்.
‘சங்கமித்ரா’தவிர, ஹாலிவுட்டில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ராம்போ' படத்தின் ‘அதிகாரபூர்வ இந்திய ரீமேக்'கின் அறிமுக விழாவும் நடைபெற்றிருக்கிறது. இந்திய 'ராம்போ' படத்தில் ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃப் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படியான ஆக்ஷன் படங்களின் அறிமுகங்களுக்கு இடையில், ‘மண்டோ' என்ற தலைப்பில் எழுத்தாளர் சாதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்கிவரும் நந்திதா தாஸ், அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளைத் திரையிட்டிருக்கிறார்.
‘பன்றி’... உரிமையும் உணவும்
கான் விழாவில் வழங்கப்படும் ‘ஃபாம் டி ஓர்’ எனப்படும் தங்கப்பனை விருது ஆஸ்கர் விருதுக்கு இணையாக உலகம் முழுவதும் மதிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தங்கப்பனை விருதுக்குப் போட்டியிடும் முக்கியமான படங்களில் ஒன்று ‘ஓக்ஜா'. பாங் ஜூன் ஹோ இயக்கியிருக்கும் இந்த கொரியத் திரைப்படம், வேளாண்மை, விலங்கு நல உரிமைகள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் தொடுக்கும் வன்முறையைப் பற்றிப் பேசுகிறது. சிறுமி ஒருத்திக்கும், அவள் வளர்க்கும் பன்றிக் குட்டி ஒன்றுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து, மரபணு மாற்றப்பட்ட இறைச்சி, விலங்குகள் மீது போலியான கரிசனம் ஆகியவை குறித்து அங்கதப் பார்வையில் அமைந்த திரைக்கதையைக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.
இந்தப் படம் திரையரங்கில் இன்னும் வெளியாகவில்லை. ‘நெட்ஃப்ளிக்ஸ்' மூலம் நேரடியாக இணையத்தில் வெளியிடப்பட உள்ள இதை, தங்கப்பனை விருதுக்குப் பரிசீலிக்கக் கூடாது என்று பிரான்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இதனால், அடுத்த ஆண்டு முதல் திரையரங்கில் வெளியான/ வெளியிடப்படும் திரைப்படங்கள் மட்டுமே போட்டிகளுக்குப் பரிசீலிக்கப்படும் என்று திரைப்பட விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘ஓக்ஜா’படத்தின் திரையிடலின்போது, படவீழ்த்திக் கருவி (புரொஜெக்டர்) கோளாறு செய்ய, பார்வையாளர்கள் கேலி செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தைப் பார்த்து முடித்ததும் ரசிகர்கள் கனத்த இதயத்துடன் கைதட்டி ஆர்ப்பரித்தார்களாம். ‘ஓக்ஜா’வுக்கு நேரெதிராக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘அங்கமாலி டைரீஸ்'. பன்றி இறைச்சியைக் கொண்டாடியிருக்கும் இந்தப் படத்தை, ‘கான்' ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
இந்த ஆண்டு கான் திரை விழாவுக்குச் செல்ல முடியாத, ஆனால் 2016-ம் ஆண்டு சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘எம்ப்ரேஸ் ஆஃப் தி சர்பென்ட்' படத்தைப் பார்த்துச் சிலாகித்த ரசிகர்களுக்கு ஒரு கொசுறு தகவல். 2015-ம் ஆண்டு இதே கான் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்ட அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் டேவிட் கல்லேகோ. கறுப்பு
வெள்ளையில் அமேசான் காட்டை நம் கண் முன் நிழலாடச் செய்த அவரின் ஒளிப்பதிவில், இந்த ஆண்டு ‘ஐ ஆம் நாட் எ விட்ச்' எனும் திரைப்படம் இந்த ஆண்டு தங்கப்பனை விருதுக்குப் போட்டியிடுகிறது. ஸாம்பியா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் ரங்கானோ நியோனி இயக்கியிருக்கும் இந்தப் படம் சூனியக்காரிகளைப் பற்றிப் பேசுகிறதாம். ‘எம்ப்ரேஸ் ஆஃப் தி சர்பென்ட்' படத்தைப் போல, டேவிட்டின் ஒளிப்பதிவுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று ஆரவாரம் செய்கிறார்கள் ரசிகர்கள்.
தங்கப்பனையை வெல்லப் போகும் படம் எதுவென்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.