ஆடியோ காப்புரிமைகள் தொடங்கி, வீடியோ, சாட்டிலைட் மற்றும் வெளிநாட்டு காப்புரிமைகளில் அதிகமான பிரச்சினைகள், குழப்பங்கள் தற்போது தமிழ் சினிமாவில் உள்ளன. காப்புரிமைகள் பற்றிச் சரியான தெளிவு இல்லாமல், அனேக தயாரிப்பாளர்கள் வாங்குபவர்கள் கொடுக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதால், காப்புரிமை மோதல்கள் ஏற்படுகின்றன.
காப்புரிமை பற்றித் தெளிவான ஒப்பந்தங்கள் செயல்படுத்த பட வேண்டும். ஒரு படம் சம்பந்தப்பட்ட அனைத்துக் காப்புரிமைகளும், சரியாகப் பிரிக்கப்பட்டு, தெளிவான புரிதலின் அடிப்படையில், அவைகள் விற்கப்பட வேண்டும். பல காப்புரிமைகள் வரையறுக்கப்பட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். இதைத் தனி தயாரிப்பாளர்கள், வாங்கும் பெரிய நிறுவனங்கள் முன் செயல்படுத்த முடியாது. தயாரிப்பாளர் சங்கம் இதை ஒரு தனி சட்டப் பாதுகாப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, வாங்கும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, செயல்முறைப்படுத்த வேண்டும். காப்புரிமை பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டால், தயாரிப்பாளர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் மிகப்பெரிய வருவாயை ஏற்படுத்தி தரும்.
தியேட்டர்கள் எண்ணிக்கையும் டிக்கெட் விலையும் ஒரு பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு படம் இன்று 900க்கும் மேலான தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. அதனால், பெரிய, நல்ல தெலுங்குப் படங்கள் இன்று, ரூபாய் 100 கோடி வசூலை சந்தித்துவருகின்றன. இது தமிழ் சினிமாவில் அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை. பெரிய தெலுங்குப் பட பட்ஜெட்டில் தயாரான தமிழ் படங்களும், தமிழ்நாட்டில் இன்று 300 முதல் அதிக பட்சம் 400 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் சூழ்நிலை உள்ளது. ஆந்திராவில் உள்ளது போல இங்கும் குறைந்தது 2,000 தியேட்டர்கள் இருக்க வழி செய்ய வேண்டும்.
பைரஸி குறைந்து, புது படங்களை மக்கள் திரையரங்கில் மட்டுமே காணும் சூழ்நிலை ஏற்படும்போது, தற்போது உள்ள குறைந்த அளவு திரை அரங்குகள் போதாது. எனவே, அதிக திரை அரங்குகளை உண்டாக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். அதே சமயம், 800 அல்லது 1,000 இருக்கைகள் என்று பெரிய திரை அரங்குகள் கட்டி, அவைகள் நஷ்டத்தில் இயங்காமல் இருக்க, பெரிய திரை அரங்குகளை, மினி பிலெக்ஸ் திரையரங்க வளாகங்களாக (இரண்டு அல்லது மூன்று சிறு தியேட்டர்கள்) மாற்ற, அரசாங்கம் சுலபமான விதிமுறைகளை கொண்டுவந்தால், சிறு அரங்கங்கள் நிறைய உருவாகும். தனி அரங்கங்கள் மினி பிலெக்ஸ் ஆக மாறி, திரையரங்கங்களின் எண்ணிக்கை கூடும்.
2020-ல், தமிழ்நாட்டில் 2,000 திரையரங்குகள் (அவைகளில் அதிகபட்ச இருக்கைகள் – 400 அல்லது 500 மட்டுமே) என்ற குறிக்கோளைத் தமிழ்த் திரைப்படச் சங்கங்களும் அரசாங்கமும் ஏற்படுத்தி, அதை நோக்கிச் சரியான திட்டங்களை வகுத்தால், கண்டிப்பாக இந்த இலக்கை அடைய முடியும்.
அதிக திரை அரங்கங்களை உருவாக்கும் அதே நேரம், பார்வையாளர்களுக்குத் தரமான சினிமா பார்க்கும் அனுபவத்தையும் ஏற்படுத்த, டிக்கெட் விலையையும் சீர்படுத்த வேண்டும். இன்று தமிழ் நாட்டில் அமுலில் உள்ள டிக்கெட் விலைகள் 1-1-2007 அன்று அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு, ஏழு வருடங்களாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் அமலில் உள்ளது. இந்த ஏழு வருடங்களில், எல்லாப் பொருட்களின் விலையும், தொழிலாளர்கள் சம்பளமும், சேவைகளின் செலவுகளும் இரண்டு மடங்கு கூடி இருந்தாலும், கட்டணச் சீட்டுகள் மாத்திரம் அதே அளவு உள்ளது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
இன்று நிறைய திரை அரங்குகள், அவற்றின் தரத்தை உயர்த்த முடியாமல், லாபத்தில் இயங்க முடியாமல் உள்ளதற்கு முக்கியக் காரணம் இந்த குறைந்த கட்டண சீட்டுகளே. இந்த ஆண்டிலாவது, கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, சீர்படுத்தப்பட வேண்டும். நாம் சகோதர மாநிலங்களில் எல்லாம், கட்டணங்கள் குறைந்தது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றியமை க்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஏழு வருடங்களாக அதே கட்டணம் நீடிப்பது திரைத்துறை உயர வழி அமைக்காது.
2014 -ல் மேலும் நிறைய புதுப்படங்கள் வந்தாலும், வெற்றி சதவீதம் பெருகினால், தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் செழிக்க அது உதவும். வெற்றி சதவீதம் பெருக, தமிழ் சினிமாவின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படவேண்டும் என்பதே திரையுலகின் எதிர்பார்ப்பாகும்.
[இங்கே முன்வைக்கப்படுபவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். அவர் சார்ந்த நிறுவனத்தின் கருத்துகளாக அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.