பிராச்சியின் ஆசை
2008 -ல் வெளியான ‘ராக் ஆன்’ திரைப்படத்தில் பிராச்சி தேசாய், ஃபர்ஹான் அக்தருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ‘ராக் ஆன்’ படத்தின் தொடர்ச்சியாக ‘ராக் ஆன் 2’ வெளியாகவிருக்கிறது. ஓர் இசைக் குழு நடத்தும் நான்கு இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘ராக் ஆன்’ இருந்தது. ஃபர்ஹான் அக்தர், அர்ஜூன் ராம்பால், பூரப் கோஹ்லி போன்றவர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் ஃபர்ஹானின் மனைவியாக நடித்திருந்த பிராச்சி, “தற்போது நடிகைகளுக்குள் இருக்கும் புரிதல் அதிகமாகியிருக்கிறது. அதனால், இயக்குநர்கள் ‘ராக் ஆன்’ போலவே முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே நடத்தும் இசைக்குழுவைப் பற்றி ஒரு படம் எடுப்பதை யோசிக்கலாம். இது என் ஆசை. இந்த மாதிரி வித்தியாசமான படங்களை பாலிவுட் ரசிகர்கள் வரவேற்கிறார்கள். எவ்வளவோ சோதனை முயற்சிகள் நடக்கும் பாலிவுட்டில் பெண்கள் மட்டும் ஏன் பின்தங்க வேண்டும்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் பிராச்சி. ஷுஜாத் சவுதாகர் இயக்கும் இந்தப் படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது.
‘‘டிரண்டைப் பின்தொடர விரும்பவில்லை’’
நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆப்ராஹம் பாலிவுட்டில் இருக்கும் டிரண்டுக்கு ஏற்ற மாதிரி படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார். ‘ருஸ்தம்’ படத்தின் திரையிடலுக்கு வந்திருந்த ஜானிடம், இந்திய ராணுவத்தைப் பற்றிப் படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு, “என்னுடைய பிரச்சினை என்னவென்றால் டிரண்டைப் பின்தொடராமல் இருப்பதுதான். அதனால் இந்தக் கேள்வி கேட்பதற்கான சரியான நபர் நானில்லை. எனக்குப் பிடித்த படங்களைத்தான் தயாரிப்பேன். அவற்றில் மட்டும்தான் நடிக்கவும் செய்வேன். ஒரு படத்தில் ஏதாவது ஒரு விஷயம் என்னை உற்சாகப்படுத்தும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் அதைச் செய்வேன். அப்படி எந்த உற்சாகமான அம்சங்களும் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன். தயாரிக்கவும் மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார் ஜான்.
அமிதாப்புடன் இணையும் ஆமிர்?
ஆமிர் கானும் அமிதாப் பச்சனும் முதன்முறையாக இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்ற செய்தி பாலிவுட்டில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யாவின் ‘தக்’ படத்துக்காக இவர்கள் இணையப்போகிறார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆமிர் கான் இந்தச் செய்தியை உறுதியும் செய்யவில்லை; மறுக்கவும் செய்யவில்லை. “இந்த நேரத்தில் இதைப் பேசுவது சரியாக இருக்காது. யாருக்குத்தான் அமிதாப் போன்ற நடிகருடன் நடிக்க ஆசை இருக்காது? நான் எப்போதும் அவரை என்னுடைய ஆதர்சமாகவே நினைத்திருக்கிறேன். நான் அவருடைய மிகப் பெரிய ரசிகன். அவருடைய இணைந்து நடித்தால் அது என்னுடைய நீண்டகாலக் கனவு நனவாவதைப் போன்றதாகும்” என்று சொல்லியிருக்கிறார் ஆமிர்.
ஆமிர் கான் தற்போது ‘தங்கல்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மல்யுத்த வீரர் மஹவீர் போகத் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகவிருக்கிறது.