இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: பஞ்ச தந்திரம்- 2

செய்திப்பிரிவு

கிடாரி நாயகி

எம்.சசிகுமார் நடிப்பில் வெளியான ‘வெற்றிவேல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிகிலா. முதல் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தாலும் அட்டகாசமான நடிப்பைத் தந்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இதனால் தனது அடுத்த படமான ‘கிடாரி’யில் தனிக்கதாநாயகி வாய்ப்பைக் கொடுத்துவிட்டார் சசிகுமார். கேரளத் தொலைக்காட்சி உலகிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் நிகிலாவுக்கு இந்தப் படத்திலும் கிராமத்துப் பெண் வேடம். இந்தப் படத்தில் கிடைத்த வாய்ப்பை அட்டகாசமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறாராம் இவர்.

பஞ்ச தந்திரம்- 2

‘சபாஷ் நாயுடு’ அடுத்த கட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகிவரும் கமல் இன்னொரு பக்கம் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்துப் பேசியிருக்கிறாராம். கமல், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான ‘பஞ்ச தந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்பது திட்டம். பஞ்ச தந்திரத்துக்கு வசனம் எழுதிய அதே கிரேஸி மோகன் மீண்டும் வசனம் எழுத, கதை, திரைக்கதைப் பொறுப்பை ரவிக்குமாரிடமே ஒப்படைத்திருக்கிறார் என்கிறார்கள்.

சினேகா வந்தார்!

திருமணம், குழந்தை, குடும்பம் எனச் சொந்த வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தார் சினேகா. தற்போது அவரது குழந்தை வளர்ந்துவிட்டதால் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார் சினேகா. பிருத்விராஜ் தயாரிப்பில் மம்மூட்டி நடிக்கும் ‘தி கிரேட் ஃபாதர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துவரும் அவர் தற்போது தமிழ்ப் படமொன்றையும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ‘தனியொருவன்’ வெற்றியைத் தொடர்ந்து மோகன் எம். ராஜா இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில்தான் சினேகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகி நயன்தாரா.

வெட்ட வெளிச்சம்!

‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’ படங்களின் மூலம் யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர் கதிர். பரத்துடன் இவர் இணைந்து நடித்திருக்கும் ‘என்னோடு விளையாடு’ விரைவில் வெளியாக இருக்கிறது. சாந்தினி தமிழரசன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அருண் கிருஷ்ணசுவாமி. கதிரும் பரத்தும் நண்பர்களாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் வில்லனின் இடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறதாம் குதிரைப் பந்தயம். குதிரைப் பந்தயத்தின் இன்றைய முகத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறாராம் இயக்குநர்.

அதிர்ஷ்டக்காரன்

சமீபத்தில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிப் பல கோடிகளை அள்ளியது ‘பிச்சைக்காரன்’ படம். இதனால் தற்போது தெலுங்குத் திரையுலகிலிருந்து சசிக்குப் பல அழைப்புகள். இயக்குநர் சசியை அழைத்த சீனியர் தெலுங்கு ஹீரோவான வெங்கடேஷ் அவர் சொன்ன கதையைக் கேட்டு உடனே ஓ.கே செய்திருக்கிறாராம். தமிழில் தற்போது ஜி.வி. பிரகாஷை இயக்கும் சசி அடுத்து நடிகர் சித்தார்த் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வெங்கடேஷ் நடிக்கும் நேரடித் தெலுங்குப் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

SCROLL FOR NEXT