இந்து டாக்கீஸ்

மாயப்பெட்டி: ரஜினியின் பஞ்ச்

ஆபுத்திரன்

நீதிக்கதை

ஜெயா டி.வியில் ‘அன்கட்’ என்ற நிகழ்ச்சி. தணிக்கைக்குச் செல்லும் முன் இயக்குநரே நீக்கிய காட்சிகள் பற்றிய நிகழ்ச்சி. பசங்க – 2 படத்திலிருந்து அப்படி நீக்கப்பட்ட ஒரு காட்சியை ஒளிபரப்பினார்கள். ஆசிரியை அமலா பால் மாணவர்களுக்குக் கூறும் கதை அது.

எண்களுக்கிடையே சண்டை. ஒவ்வொரு எண்ணும் தனக்குக் கீழே உள்ள எண்ணைக் கேவலமாக எண்ணி அடித்து நொறுக்கியது. ஒன்பது எட்டை அடித்தது. எட்டு ஏழை அடித்தது. ஏழு, ஆறை அடித்தது. எண் ஒன்று தனக்குக் கீழே உள்ள பூஜ்ஜியத்தைப் பார்த்தது. “நான் உன்னை அடிக்கப் போவதில்லை. வன்முறை வேண்டாம்” என்றது. பூஜ்ஜியம் புன்னகைத்தபடி நட்புடன் ஒன்றின் அருகே சென்றது. அப்போது அது 10 ஆகிவிட்டது. ஆக நட்பின் மூலம் மற்ற எல்லா எண்களையும்விட உயர்ந்ததாகிவிட்டது. நல்ல நீதிக்கதை இல்ல!?

போராடி வென்ற பெண்

அழகாக இருக்கும் காரணத்தாலேயே ஐஸ்வர்யா ராயின் நடிப்புத் திறனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்று எண்ணவைத்தது கலைஞர் டி.வி.யில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட ‘Provoked’ என்ற ஆங்கிலப்படம். கிரண் அலுவாலியா என்ற (பிரிட்டனில் குடியேறிய) பஞ்சாபிப் பெண்ணின் நிஜக் கதை. திருமணமானதிலிருந்து பத்து வருடங்களாகப் பலவித கொடுமைகள் செய்யும் கணவரை கிரண் கொன்றுவிடுகிறாள்.

தனக்கு உச்சகட்டக் கொடுமை இழைக்கப்பட்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் அவள் கொல்கிறாள் என்பதால் அதைத் திட்டமிட்ட கொலையாகக் கருதி அவளுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறது நீதிமன்றம். உள்ளூர் பெண்கள் இதற்கு எதிராக பொங்கி எழ, சட்டத்தின் வேறொரு கோணத்தை முன்னிறுத்தி கிரணை விடுவிக்கிறது மேல் நீதிமன்றம். காலப்போக்கில் கிரண் அலுவாலியாவுக்குச் சிறந்த ஆசியப் பெண்மணி என்ற விருதும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யாவின் நடிப்பு படத்தை மறக்க முடியாததாக ஆக்குகிறது.

கொடூரப் பொழுதுபோக்கு!

தென்னாப்ரிக்காவில் டீயின் பாம்பர்னர் என்பவர் ஒரு பெரிய பண்ணையில் சிங்கங்களை வளர்க்கிறார். கட்டணம் செலுத்திவிட்டுத் துப்பாக்கியுடன் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம். சிங்கங்கள் வெளியே துரத்தப்படும். அவற்றை வேட்டையாடுவதுதான் உள்ளே நுழைந்தவர்களுக்கான த்ரில். இதை ஒளிபரப்பிய தந்தி டீ.வி. சானலில் இந்தக் கொடுமையைத் தடுக்கத் தென்னாப்ரிக்க அரசு தயாராக இல்லை என்றார்கள். காரணம் இதன் மூலம் அரசுக்குப் பெரும் வருமானம் கிடைக்கிறதாம்.

ரஜினியின் பஞ்ச்

விஜய் டி.வி.யில் காமெடி கிங்ஸ் பகுதியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் கே.எஸ்.ரவிகுமார். ரஜினி படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பஞ்ச் வசனமாக “கண்ணா, நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்திலே சரியா வந்துடுவேன்” என்பதைக் கூறினார். இதைப் பேசுவதற்கு முன்னால் “இதனாலே எனக்கு சிக்கல் வர சான்ஸ் இருக்கு” என்றாராம் ரஜினிகாந்த். பாவம், ஏதோ கட்டாயத்துக்கு உட்பட்டு பிறகு கூறிவிட்டார் போலும்!

SCROLL FOR NEXT