இந்து டாக்கீஸ்

வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம்

இந்து டாக்கீஸ் குழு

பேச்சுதான் படத்தின் மையம். மனதை விட்டுப் பேசுங்கள், மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் – இதுதான் படத்தின் ஆதாரமான செய்தி. இந்தச் செய்தியைத் துளிக்கூட சீரியஸ் தன்மையோ வன்முறையோ இல்லாமல் அழகான மலைப் பிரதேசத்தின் பின்னணியில் மெல்லிய சாரலாய்த் தெளித்தி ருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன்.

பேச வேண்டியதைப் பேசாமல் போனால் என்ன ஆகும்? தேவையே இல்லாமல் பேசினால் என்ன ஆகும்? சுத்தமாகப் பேசாமல் இருந்தால் என்ன நடக்கும்? - சில துணைக் கதைகளின் உதவியோடு இதையெல்லாம் பேசுகிறார் இயக்குநர்.

பனிமலை கிராமத்தில் ‘ஊமைக் காய்ச்சல்’ என்ற வித்தியாசமான நோய் பரவுகிறது. நோய்க்கு ஆளானவர்கள் பேசும் திறனை இழக்கின்றனர். பேசுவதாலேயே நோய்க் கிருமிகள் பரவுவதாகக் கூறி, ஊர் மக்கள் பேச அரசு தடை விதிக்கிறது. நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவுடன் பேச விதித்த தடையை அரசு விலக்கிக்கொள்கிறது. இப்படிப் பேச்சுக்கும் மௌனத்துக்கும் இடையே நடக்கும் சலனங்கள்தான் திரைக்கதை.

படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள். மனதில் பட்டதைப் பளிச்சென்றும் நயமாகவும் பேசும் அர்விந்த் (துல்கர் சல்மான்), தனக்குப் பிடிக்காததை வெளிப்படையாகச் சொல்லும் துணிவில்லாத அஞ்சனா (நஸ்ரியா நசீம்), கட்டுப்பாடுகள் விதிக்கும் காதலன், எதையாவது உளறிப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் அரசியல்வாதி, அடையாளம் பெறுவதற்கான அவஸ்தையில் இருக்கும் வித்யா (மதுபாலா), தனக்கு ஓவியத்தில் நாட்டம் என்பதைச் சொல்ல முடியாத சிறுவன், மகனை வெறுப்பதோடு அனாதை இல்லத்தைக் காலி செய்வதில் கறாராக இருக்கும் பெரியவர் (வினுசக்கரவர்த்தி), நடிகர் உமேஷ் (ஜான் விஜய்), குடிகாரர்களின் சுயமரியாதையைக் காக்கப் போராடும் குடிகாரர் சங்கத் தலைவர், நடிகரின் உரிமை காக்கப் போராடும் ரசிகர் மன்றத் தலைவர் எனப் பலரும் வருகிறார்கள்.

பேச்சைப் பறிக்கும் நோய் இவர்கள் ஒவ்வொருவரையும் எப்படிப் பாதிக்கிறது என்பதை வேடிக்கையாகச் சொல்ல முயன்றிருக்கிறார் பாலாஜி. முதல் பாதி முழுவதும் பேசிப் பேசிக் கலகலப்பூட்ட முயல்கிறார். அரசியல்வாதியைக் கிண்டலடிப்பது, ரசிகர் மன்றத்தைக் கேலி செய்வது, செய்தி சேனல்களைக் கிண்டலடிப்பது என எல்லாவற்றிலும் காமெடி. எல்லாமே மிகையான ஸ்பூஃப் வகை. சில இடங்களில் சிரிக்க முடிகிறது.

துல்கர் சல்மானின் துறுதுறுப்பும் நஸ்ரியாவின் அமைதியும் படத்தின் பலம். சல்மான் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகச் செய்திருக்கிறார். மெல்லிய சோகத்துடன் நடமாடும் பாத்திரத்தில் நஸ்ரியா கவர்கிறார். நீண்ட நாள் கழித்துத் திரையில் தலை காட்டியிருக்கும் மதுபாலா 1990களில் பார்த்தது போலவே இருக்கிறார். மௌனமாகப் பேசும் காட்சிகளில் நஸ்ரியாவும் மதுபாலாவும் தங்கள் விழி மொழி மூலம் தனித்து நிற்கிறார்கள்.

செய்தி வாசிப்பாளராக டி.வி.யில் தோன்றிச் சிரிக்க வைக்கும் பாலாஜி, ஒரு கட்டத்தில் சலிப்படையவும் வைக்கிறார்.ரோபோ சங்கரும், ஜான் விஜய் யும் திரைக்கதையில் திணிக்கப்பட்டிருந்தாலும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். உளறி மாட்டிக்கொள்ளும் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் கச்சிதம்.

இரண்டாம் பாதியில் வசனங்கள் இல்லாமல் கதையை நகர்த்த வேண்டியிருக்கும் சவாலில் ஜெயிக்கிறார் இயக்குநர். இந்த மௌனத்தைத் தன் இசையால் மொழியாக்கம் செய்திருக் கிறார் சியன் ரால்டன். மலைப் பிரதேசத்தை அழகாகக் காட்டி நம் கண்களுக்குக் குளிர்ச்சி தருகிறார் ஒளிப் பதிவாளர் செளந்தர்ராஜன்.

படத்தின் ஆதாரமான கேள்விகள் அனைத்துக்குமான பதில்கள் உடனடியாகத் தெரிந்துவிடுவதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. அடுத்து என்ன என்ற கேள்வியே எழ வாய்ப்பில்லை. கிண்டலையும் சில நெகிழ்ச்சியான தருணங்களையும் மட்டுமே நம்பிப் படத்தை நகர்த்தியிருக்கிறார் பாலாஜி. படத்தின் பலமும் பலவீனமும் இதுதான்.

SCROLL FOR NEXT