யார் இவர்?
தீபா மேத்தா என்றால் ‘ஃபயர்', ‘ஃபயர்' என்றால் தீபா மேத்தா என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். பாரம்பரியம்-மரபு என்ற பெயரில் கெட்டிதட்டிப் போன பண்பாட்டு மூடத்தனங்களை திரைமொழியில் கேள்விக்கு உட்படுத்துபவர்.
உலகப் பெண் இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்தியப் பெண். எல்லைகளைக் கடந்த ஒரு திரைக் கலைஞராக அறியப்பட்டுள்ள அவர், இந்தியாவின் புதிய குரலாக, மாற்றுச் சக்திகளின் குரலாக இருக்கிறார். உலகின் முக்கியத் திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.
பின்னணி
மீரா நாயரைப் போலவே இவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்தான். டெல்லி பல்கலைக்கழகத்தில் தத்துவவியலில் பட்டம் பெற்ற பின், சில காலம் ஆவணப் படங்களை இயக்கி வந்தார்.
1973-ல் கனடாவுக்குக் குடிபெயர்ந்து, டொரண்டோவை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறார். கனடாவில் குடியேறினாலும்கூட இந்தியா மீதும், இந்தியக் கதைகள் மீதும் பெரும் பிடிப்பு கொண்டவர். அவரது படங்களே இதற்கு அத்தாட்சி.
முதல் அரும்பு
அவருடைய முதல் சினிமா ‘சாம் அண்ட் மீ' 1991-ல் வெளியானது. முதல் படமே, உலகப் புகழ்பெற்ற கான் (Cannes) திரைப்பட விழாவில் ‘மதிப்புமிக்க படம்' என்ற கவுரவத்தைப் பெற்றது. ஒரு முஸ்லிம் சிறுவன், ஒரு முதிய யூதர் என முரண்பட்ட இருவருக்கு இடையிலான சிக்கலான நட்பு பற்றிய கதை.
முக்கியப் படைப்புகள்
ஐம்பூதங்கள் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அவர் எடுத்த முதல் படம் ‘ஃபயர்'. பாலுறவில் நிலவும் அரசியலைப் பேசியது. திருமணத்தால் திருப்தியடையாத இரண்டு பெண்கள் இடையிலான தன்பாலின உறவு (லெஸ்பியன்) பற்றிய கதை. காலங்காலமாக நம்மிடையே இருந்துவரும் விஷயத்தைப் பேசுபொருளாக்கியது.
இந்து அடிப்படைவாதிகளின் எதிர்ப்பு, தணிக்கை பிரச்சினை, திரையரங்குகள் மீது தாக்குதல் போன்ற சர்ச்சைகள் இப்படத்துக்கு எதிராக எழுந்தன. பெண்களுக்கான பாலியல் உரிமைகளைப் பற்றி பேசியதே காரணம். தடை கோரப்பட்ட இந்தப் படம், தணிக்கை கத்தரியில் தப்பி பின்னர் வெளியானது.
ஐம்பூதக் கொள்கையின் இரண்டாவது படமான ‘எர்த்’ (1998), நிலத்தின் அரசியலைப் பேசியது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் காலத்தால் அழிக்க முடியாத வடுவை ஏற்படுத்திய ‘இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை' பற்றி, எழுத்தாளர் பாப்சி சித்வா எழுதிய ‘கிராக்கிங் இந்தியா' நாவலின் தழுவலே இந்தப் படம்.
ஐம்பூதக் கொள்கையின் மூன்றாவது படம், ‘வாட்டர்'. இதை தீபா மேத்தாவின் ஆகச் சிறந்த படம் எனலாம். எட்டு வயது சிறுமி விதவையாக்கப்பட்டு, எஞ்சிய காலம் முழுவதும் விதவைகள் இல்லத்தில் வாழத் துரத்தப்படும் மனதை உலுக்கும் கதை.
மதத்தின் அரசியலைப் பேசியது. இந்தப் படத்தை எடுக்கவிடாமல் கலவரத்தைத் தூண்டிவிட்டது, வாராணசியில் சினிமா செட்டை எரித்தது, இயக்குநர்- நடிகர்களுக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற செயல்பாடுகளில் இந்து அடிப்படைவாதிகள் வரிந்துகட்டிக் கொண்டு இறங்கினார்கள். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் எடுக்கப்பட்டு வெளியானது. 2006-ல் ஆஸ்கர் சிறந்த வெளிநாட்டு படப் பிரிவுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட கவுரவத்தைப் பெற்றது.
தனித்தன்மை
தனது 30 ஆண்டு திரை வாழ்வில் சகிப்புத்தன்மை இல்லாமை, பண்பாட்டு ஒடுக்குமுறை, குடும்ப வன்முறை போன்ற நமது சமூகத்தின் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைப் பற்றிய திரைப்படங்களையே தீபா எடுத்து வருகிறார். சிக்கலான, எளிதில் பிரச்சினைகளாகிவிடக்கூடிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயப்படாதவர்.
தெரியுமா?
இவருடைய அப்பா ஒரு திரைப்பட விநியோகஸ்தர். சுயமாக சினிமா எடுக்க ஆரம்பிப்பதற்கு முன், குழந்தைகள் சினிமாக்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். 2012-ம் ஆண்டில் கனடா கவர்னர் ஜெனரலின் சினிமாவுக்கான நிகழ்த்து கலை விருதைப் பெற்றிருக்கிறார்.