இந்து டாக்கீஸ்

உலகில் மிஞ்சியிருப்பது என்ன?

ஷங்கர்ராமசுப்ரமணியன்

தி டிசன்டன்ட்ஸ் திரைப்படத்தின் கதை, இன்றைய இந்தியச் சூழலில் நேர்வதற்கு வாய்ப்புள்ள கதைதான். பொருள் சம்பாதிப்பதிலோ, வேலையிலோ, தனி ஈடுபாடுகளிலோ அதீதமாகத் தங்கள் நேரத்தைச் செலவழிப்பவர்கள் தம்மை நேசித்தவர்களை, முக்கியமாகக் குடும்பத்தினரை, குழந்தைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். வேலையோ, பொருளோ, சொந்த ஈடுபாடுகளோ வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்பதை முகத்தில் அறைந்து சொல்லும் படம் இது.

இப்படத்தின் கதாநாயகன் மேட் கிங், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ரியல் எஸ்டேட் வழக்கறிஞர். வேலை தவிர வீட்டைக் கவனிக்காமலேயே 40 வயதைக் கடந்துவிட்டவன். அவனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள். மேட் கிங், ஹவாய் தீவின் முன்னாள் அரசியின் வழி வந்த பேரன். குடும்பச் சொத்தாக 25 ஆயிரம் ஏக்கர் அவன் பொறுப்பில் உள்ளது. அதை விற்றுப் பணமாக்கும் நெருக்கடியில் அவனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் காத்திருக்க, அந்தச் சொத்தை விற்கும் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மேட் கிங் இருக்கும்போது ஒரு விபத்து நடக்கிறது. அவனது ஒட்டுமொத்த வாழ்க்கையையே மறுபரிசீலனை செய்யும் நெருக்கடிக்குத் தள்ளுகிறது அந்த விபத்து.

மேட் கிங்கின் மனைவி எலிசபெத், படகு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்போது தலையில் அடிபட்டுக் கோமாவில் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் இருக்கிறாள். அவள் முன்பே எழுதிவைத்திருந்த உயிலின்படி, செயற்கை சுவாசத்தைச் சீக்கிரம் நிறுத்தி இறுதி விடை தர வேண்டிய நிர்ப்பந்தம் மேட் கிங்குக்கு ஏற்படுகிறது. மூத்த மகள் அலெக்சியை மருத்துவமனைக்கு அழைத்துவருவதற்காக, மகள் தங்கியிருக்கும் கல்லூரி விடுதிக்குப் பயணிக்கிறான். அங்குதான் தனது 17 வயது மகள், அதீதமாகக் குடிப்பவள் என்றும் போதை அடிமை என்றும் தெரிகிறது. அவளது முரட்டுத்தனம், யாரையும் மதிக்காத போக்கு, தாறுமாறான நடத்தைகள் குறித்த புகார்களையும் கேட்கிறான். இரண்டாவது மகளான பத்து வயது ஸ்காட்டியும் பள்ளியில் யாரும் விரும்பாத மாணவியாக இருக்கிறாள். சொந்தக் குழந்தைகள் தொடர்பான இந்தச் செய்திகள் தந்தை மேட் கிங்குக்குப் புதியவை.

மேட் கிங் தன் திருமண வாழ்வில் முதல் முறையாக ஒரு பகல் முழுவதும் தன் குழந்தைகளுடன் கழிக்கிறான். மூத்த மகள் அலெக்சி அப்போது ஒரு தகவலைச் சொல்கிறாள். அம்மா எலிசபெத்துக்கு இன்னொரு இளைஞனுடன் உறவு இருந்ததும், அதை முன்னிட்டு அவள் மணவிலக்கு பெற முயன்றாள். அந்த உறவை முன்னிட்டுத்தான் அம்மாவிடம் சண்டைபோட்டு, விடுதிக்குப் போனதாக அலெக்சி தந்தையிடம் சொல்கிறாள்.

எலிசபெத்துக்குச் செயற்கை சுவாசத்தைத் துண்டிக்கும் முன் அவளை, அவளது காதலன் உயிருடன் பார்க்க வேண்டும் என்று மேட் கிங் நினைக்கிறான். மகள்களுடன் ஹவாய் தீவுக்குப் பயணமாகிறான். அங்கே எலிசபெத்தின் காதலன், பிரையன் ஸ்பியர் தனது புது மனைவியுடன் தேனிலவில் இருக்கிறான். எலிசபெத்துடன் இதயப்பூர்வமான காதல் எதுவும் இல்லை என்றும், சந்தர்ப்பவசமாக ஏற்பட்ட உடல் ரீதியான உறவுதான் என்றும் கூறுகிறான்.

தன் கணவனின் முன்னாள் காதலியை வெறுப்பதற்காகவே மருத்துவமனைக்கு வரும் பிரையன் ஸ்பி்யர்ஸின் புது மனைவி, எலிசபெத் மரணத் தறுவாயில் பிரக்ஞையின்றிப் படுத்திருக்கும் நிலையைப் பார்த்து இரக்கப்பட்டு அழுகிறாள். மேட் கடைசியாகத் தான் அதிகம் நேசிக்காத, அதிக நேரத்தைச் செலவிடாத மனைவிக்கு முத்தம் தந்து விடைகொடுக்கிறான். அவனைத் தொடர்ந்து குழந்தைகளும் முத்தமிடுகிறார்கள்.

எலிசபெத்தின் செயற்கை சுவாசம் துண்டிக்கப்படுகிறது. எலிசபெத்தின் சாம்பலை மேட் கிங், குழந்தைகளுடன் கடலில் கரைக்கிறான். தன் பொறுப்பில் உள்ள சொத்துகள் தொடர்பாகத் தன் சகோதரர்கள் அதிர்ச்சியடையும் துணிவான முடிவொன்றை எடுக்கிறான். குழந்தைகளுடன் தன்வீட்டில் ஒரு பகலில் அமைதியாகச் சோபாவில் அமர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே மேட் கிங் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பதுதான் இறுதிக் காட்சி. ஒரு வகையில் அந்தத் தந்தையால் மீட்க முடிந்தது தனது குழந்தைகளை மட்டும்தான். அவர்கள் குளிருக்காகப் போர்த்தியிருக்கும் போர்வை தாய் எலிசபெத் பயன்படுத்தியது. இத்துடன் படம் முடிகிறது.

குடும்ப உறவுகள் சார்ந்த விழுமியங்கள் எல்லாம் பெருமளவில் துறக்கப்பட்டு விட்டதாக நம்பப்படும் மேற்கத்திய கலாசாரத்தில் நடக்கும் கதை இது. ஆனாலும் ஆண் - பெண் உறவுக்குள் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச விசுவாசம், அது மீறப்படும்போது இரு தரப்பிலும் ஏற்படும் கொந்தளிப்புகள், நடுவில் பாதிக்கப்படும் குழந்தைகள் என மேற்கு - கிழக்கு பாகுபாடுகளைத் தாண்டி, எல்லாக் கலாசாரத்திலும் அடிப்படை உணர்வு நிலைகள் ஒன்றாகவே இருப்பதை இப்படம் வெளிப்படுத்துகிறது.

கட்டற்ற சுதந்திரம், நுகர்வு மற்றும் பொருளாதாரத்தை மட்டுமே மையமாகக் கொண்ட வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் இப்படம் பரிசீலனை செய்கிறது.

எல்லாம் வர்த்தகமாகிவிட்ட இந்த உலகில் நம்பிக்கை வைப்பதற்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை என்ற செய்தியை இப்படம் மிக இயல்பாக உணர்த்திவிடுகிறது. இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜார்ஜ் க்ளூனி ஒரு இக்கட்டான கதாபாத்திரத்தில்,மிகச் சிறப்பாக நடித்தியிருக்கிறார். 2011இல் வெளியான படம் இது. இயக்குநர் அலெக்சாண்ட் பேய்ன்.

SCROLL FOR NEXT