இந்து டாக்கீஸ்

ஓல்ட் பாய்: நிழலின் மறைவில் உறங்கும் நிஜங்கள்

வெ.சந்திரமோகன்

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் புதிரான சம்பவங்களின் பின்னணியில் உள்ள காரணங்களைத் தெரிந்துகொள்ள நமக்குள் ஒரு இனம்புரியாத ஆர்வம் பிறக்கும். தற்செயலாக நிகழ்ந்த சம்பவம்தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளும்வரை நம் மனம் அமைதி கொள்வதில்லை. ஒரு வேளை அதன் பின்னணியில் நாம் இதுவரையில் அறிந்திராத ஆபத்துகள் இருப்பதைக் கண்டறிய நேர்ந்தால், மனம் பெரிய அதிர்ச்சிக்குள்ளாகும். இதுபோன்ற மர்ம முடிச்சுகள் இலக்கியம், திரைப்படம் போன்ற கலைப்படைப்புகளுக்கு மிகப்பெரிய ஆதாரமாக அமைகின்றன. அப்படியான ஒரு மர்மப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஹாலிவுட் படம் 'ஓல்ட் பாய்'. தென் கொரியாவின் முக்கியமான இயக்குநரான பார்க் சான்-வூக் இயக்கி கொரிய மொழித் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் கடத்தப்படுகிறான். தன் நினைவுக்குத் தெரிந்தவரை அந்த மனிதன் யாருடைய உயிர்க்கும் ஆபத்து ஏற்படுத்தியதில்லை; பெரிய குற்றங்களைச் செய்திருக்கவில்லை. ஒரு தொழிலதிபராக சமூகத்தில் மரியாதையுடன் வாழ்ந்துவந்த அந்த மனிதன், காரணம் புரியாமலேயே 15 வருடங்கள் அந்த மர்மச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறான். திடீரென்று ஒரு நாள் அவன் அந்தச் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறான். தன்னைக் கடத்தியவனை வெறியுடன் தேடியலைகிறான். ரெஸ்டாரண்ட் ஒன்றில் உணர்வின்றி விழுந்து கிடக்கும் அவனை, ஒரு இளம்பெண் காப்பாற்றுகிறாள்.

இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்படுகிறது. இடையில் தன்னைக் கடத்தி சிறைவைத்தவன் யாரென்று தெரியவருகிறது. அதன் பின்னணியில் தனது தவறும் அவனுக்குப் புரிகிறது. அதைவிட அதிர்ச்சியான விஷயம் ஒன்றை அந்த மர்ம மனிதன், அவனுக்குச் சொல்கிறான். அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் திணறுகிறான் நாயகன்.

புதிர் நிறைந்த வாழ்க்கையின் இருள் பக்கங்களைக் கொண்ட இக்கதை, முதலில் ஜப்பானிய காமிக்ஸ் வடிவமான மாங்கா என்ற கதை வடிவில் வெளிவந்தது. மூலக்கதையில் இருந்த சம்பவங்களில் பல மாற்றங்களை தனது திரைப்படத்தில் செய்திருந்தார் பார்க் சான்-வூக். பல சர்வதேச விருதுகள் வென்ற அப்படத்தை விமர்சகர்களும் கொண்டாடினர்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு, வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. 'மால்கம்- எக்ஸ்', 'இன்சைட் மேன்' போன்ற படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்பைக் லீ இப்படத்தை இயக்கியுள்ளார். 'ஹாலோ மேன்', 'மில்க்', 'நோ கண்ட்ரி பார் ஒல்ட் மென்' போன்ற படங்களில் நடித்த ஜோஷ் பிராலின் இந்தப் படத்தின் நாயகன் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை முதலில் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் இயக்க இருந்தார் என்பது இந்தப் படம் எத்தனை முக்கியமானது என்பதைச் சொல்கிறது.

SCROLL FOR NEXT