இயக்குநர் பாலாவால் பரதேசி படத்தில் அறிமுப்படுத்தப்பட்ட ரித்விகா, கிடைத்த வாய்ப்பில் கச்சிதமாகப் பொருந்திப் பாராட்டுகளை அள்ளினார். தற்போது வெளியாகியிருக்கும் ’மெட்ராஸ்’ படத்தில் மேரி எனும் வடசென்னைப் பெண்ணாக முத்திரை நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தபோது...
மெட்ராஸ் மேரிக்கு என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் வருகிறது?
பக்கத்துவீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கேன்னு எங்க போனாலும் மேரி கேரக்டர் பத்திதான் பேச்சு. அந்தக் கதாபாத்திரத்தில ரொம்ப உயிரோட்டமா நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க. மரண வீட்டுல நான் அழற காட்சிய எல்லோரும் குறிப்பிட்டுச் சொல்றாங்க. இன்னும் பலர் அந்தக் காட்சி எங்கள உலுக்கிடுச்சுன்னு சொல்றாங்க.
வடசென்னை பெண்ணாக நடிப்பது சவாலாக இருந்ததா?
நான் சென்னைப் பெண்தான். ஆனா தென் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள். அதனால் வட சென்னை பேச்சு வழக்கு எனக்கு முதல்ல வரல. கொஞ்சம் பயமாகவும் இருந்துச்சு. யூனிட்டுல எல்லோரும் வடசென்னை பாஷையில் பேசிக் கலக்குவாங்க.
இயக்குநர் ரஞ்சித் எனக்குத் தைரியம் கொடுத்து, கற்றுக்கொடுத்தார். அதைப் பேசும்போது உங்கள யாரும் அந்நியமா நினைக்க மாட்டாங்க. மக்களோட அப்படிக் கலந்துருக்கு.
எப்படி நடிக்க வந்தீர்கள்?
எஸ்.ஐ.டி. காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது ஃப்ரெண்ட் ஒருத்தரோட குறும்படத்தில் நடிச்சுக் கொடுத்தேன். அதை ஒரு விளையாட்டா தான் செஞ்சேன். ஆனால் அதைப் பார்த்து ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், “நீ பிரமாதமா நடிக்குற. சினிமாவுல டிரை பண்ணு”ன்னு சொன்னாங்க. அப்படித் தான் நானும் முயற்சி பண்ணேன்.
அறிமுகப் படமே பாலா இயக்கத்தில் அமையும் என்று எதிர்பார்த்தீர்களா?
என்னோட சில புகைப்படங்களைப் பாலா சாரோட பி ஸ்டுடியோஸ் அலுவலகத்துக்கும் அனுப்பி யிருந்தேன். ஒரு நாள் திடீர்னு போன். உடனே வரச் சொல்லி ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து உடனே ஓகே சொல்லிட்டாங்க. பாலா படத்துல ஒருமுறையாவது நடிக்கணும்னு எல்லோருக்கும் கனவு இருக்கும். எனக்கு முதல் படத்திலேயே அந்த வாய்ப்பு கிடைச்சதை இந்த நிமிஷம் வரைக்கும் நம்ப முடியல.
பாலாவுடன் பணியாற்றிய அனுபவம்..?
பாலா சார்கூட ஒர்க் பண்ணத பற்றி நிறைய சொல்லலாம். உண்மையைச் சொன்னால் முதலில் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனால் பாலா நிறைய விஷயங்களைத் தெளிவா சொல்லிக்கொடுத்தார். எப்படிப் பார்க்கணும், எப்படிப் பேசணும்னு பல விஷயங்களைப் புரியவைத்தார்.
பரதேசிக்குப் பிறகு ஆளையே காணோமே?
அப்படியெல்லாம் இல்லை. இரண்டு படங்கள்ல நடிச்சேன். கதாபாத்திரங் களுக்காகத்தான் என்னை நடிக்கத் தேர்ந்தெடுக்குறாங்க. இப்ப மெட்ராஸ் படத்தில் மேரி கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன்னுதான் ரஞ்சித் என்னைத் தேர்ந்தெடுத்தார். நானே எனக்கான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கிற சூழல் உருவாகல.
என்ன மாதிரியான கதாபாத்திரம் உங்கள் தேர்வு?
பத்து நிமிஷம் வந்தாலும் அது படத்தோட முக்கியமான கதாபாத்திரமாக இருக்கணும். மக்கள் மனசில நிக்கணும்.
உங்க ரோல் மாடல் ?
சரிதா, நந்திதா தாஸ், சுஹாசினி.
சினிமால உங்கள் லட்சியம்?
நான், ரஜினிகாந்த், சூர்யா ரெண்டு பேரோட வெறித்தனமான ஃபேன். அவுங்க கூட ஒரு பத்து நிமிஷமாவது சேர்ந்து நடிக்கணும். இதுதான் இப்போதைக்கு என்னோட லட்சியம்.