இந்து டாக்கீஸ்

இயக்குநரின் குரல்: உறவுகளுக்கு நடுவே உட்கார்ந்துகொண்ட பேய்! - ஐக் பேட்டி

கா.இசக்கி முத்து

“எங்களுடைய குடும்பத்திலிருந்து பலர் நடிகர்களாவும், தயாரிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அங்கிருந்து ஒரு இயக்குநராகவும் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளேன்” என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் தொடங்கினார் எம்.ஆர்.ராதா குடும்பத்திலிருந்து வந்திருக்கும் இயக்குநர் ஐக்.

‘சங்கிலி புங்கிலி கதவ தொற' தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே?

அனைவருமே இத்தலைப்பை ஒரு பாடலிலிருந்து எடுத்துள்ளேன் என நினைக்கிறார்கள். உண்மையில் இது ஒரு விளையாட்டு. கூட்டுக் குடும்பமாக எங்கள் வீட்டில் மொத்தம் 38 பேர் இருந்தோம். அப்போது ‘கல்லா மண்ணா' உள்ளிட்ட பல விளையாட்டுகளை இணைந்து விளையாடுவோம். பல பேர் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற' விளையாட்டை மறந்துவிட்டார்கள். அந்த விளையாட்டுக்கும், எனது கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் படத்தில்தான் காண வேண்டும்.

பேய்ப் படங்கள் அதிகமாக வரும் காலகட்டத்தில் நீங்களும் அப்பட்டியலில் இணைந்துள்ளீர்களே?

அனைத்துப் பேய்ப் படங்களிலும் பேய் இருக்கும். அதை எப்படி ரசிக்க வைக்க முடியும் என்பதில் எனது திரைக்கதை புதுமையாக இருக்கும். கதையெல்லாம் எழுதி முடித்தவுடன், ஒரு பேய் பின்னணி இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்தேன். இக்கதையைத் தயார் செய்யும்போது, 3 பேய்ப் படங்கள் வெளியாகி இருந்தன. இப்படம் வெளியாகும்போது நிறையப் பேய்ப் படங்கள் வந்திருக்குமே என்று யோசித்தேன். உண்மையிலேயே இப்போது நிறையப் பேய்ப் படங்கள் வந்துவிட்டன.

டீஸர் பார்த்தவுடனே ஒவ்வொருத்தவர் ஒவ்வொரு கதை சொல்லிவருகிறார்கள். படமாக நாம் எதிர்பார்க்காதது ஒன்று இருக்கும்போது, அது ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். கதையாக அரைத்த மாவுதான். ஆனால் திரைக்கதை என்பது மிகவும் புதிது.

முதல் படத்திலேயே அதிகமான நடிகர்களிடம் பணியாற்றியுள்ளீர்களே?

அது ப்ரியதர்ஷன் சாரிடம் கற்றுக் கொண்டது. அவரிடம் உதவி இயக்குநராக 8 படங்கள் பணியாற்றினேன். அவருடைய பாணியில் குடும்பப் பின்னணியில் ஒரு நகைச்சுவை படம் செய்யலாம் எனத் திட்டமிட்டேன். இப்போது நம்ம பழக்கவழக்கத்தில் நிறையக் குடும்ப உறவுகளை இழந்துவிட்டோம். இன்றைய இளைஞர்களுக்கு நெருங்கிய உறவினர்களை என்ன சொல்லி அழைப்பது என்றே பலருக்குத் தெரியவில்லை. ஆகையால் நிறைய உறவுமுறைகளை வைத்து ஒரு கதை எழுதிப் படம் இயக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

ப்ரியதர்ஷன், கமல் இருவரிடமும் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

ப்ரியர்தர்ஷன் சாரை வெளியில் பார்க்கும் போது ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால், அவருக்குள் இருக்கும் காமெடி, அவரோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். படத்தின் கதையோடுதான் நகைச்சுவை வைக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். எப்போதுமே தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருக்க வேண்டும் என்று சொல்வார்.

கமல் சாரோடு ‘விஸ்வரூபம்' படத்தில் பணியாற்றியது எனது திரையுலக வாழ்க்கைக்கு ஒரு பாடம். அனைத்துத் துறைகளிலும் இருக்கும் நுணுக்கங்களை அப்படத்தில் கற்றுக்கொண்டேன். நமக்கு என்ன தேவையோ, அதைத் திரையில் எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு பணியாற்றுவார்.

ப்ரியன் சார் மற்றும் கமல் சார் இருவருமே வெவ்வேறு உலகங்கள். ‘சங்கிலி புங்கிலி கதவ தொற' படப்பிடிப்பு தளத்தில் ‘விஸ்வரூபம்' படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களைப் பற்றி தினமும் பேசுவோம். இப்போதுகூட 'விஸ்வரூபம்' மாதிரி இன்னொரு படம் வருமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதைக் கமல் சார் மட்டுமே செய்ய முடியும். அப்படித் தொடங்கினால் உடனே சென்றுவிடுவேன்.

தொடர்ச்சியாக நகைச்சுவைப் படங்களைத்தான் எடுக்க விரும்புகிறீர்களா?

அப்படியில்லை. எல்லா விதமான படங்களும் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. முதல் படம் என்பதால் நகைச்சுவை. எப்போதுமே படம் பார்ப்பவரின் எண்ண ஓட்டத்திலிருந்துதான் கதையே எழுதுவேன். இன்றைய காலகட்டத்தில் கமர்ஷியல் இயக்குநராக இருப்பது கடினம் என நினைக்கிறேன். கண்டிப்பாக அடுத்த படங்கள் எல்லாமே வெவ்வேறு களத்தில்தான் இருக்கும்.

SCROLL FOR NEXT