போகன் ஜோடி
ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடியை வைத்துக் கடந்த ஆண்டு ‘ரோமியோ ஜூலியட்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் லக்ஷ்மன். இவரது இயக்கத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்திருக்கும் படம் ‘போகன்’. இந்தப் படத்தில் நாயகி ஹன்சிகாவைவிட ஜெயம்ரவியுடன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருக்கும் அர்விந்த்சாமியைத்தான் உண்மையான ஜோடி என்று வருணிக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் இந்த இருவருமே ஹீரோ, வில்லன் என்ற இரண்டு பரிமாணங்களில் வருகிறார்களாம். பிரபுதேவா பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்கிறார் இயக்குநர்.
நடிகர்களுக்குத் தர்ம அடி!
விதார்த் நடிப்பில் உருவான ‘ஆள்’ படத்தின் மூலம் கவனிக்கவைத்த இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன். இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகியிருக்கும் படம் ‘மெட்ரோ’. பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் நாயகன் சிரிஷ். செயின் பறிப்பு சம்பவங்களின் பின்னால் இருக்கும் பளபளப்பான நிழலுலகை மையப்படுத்தியிருக்கிறதாம் இந்தப் படம்.
இதில் இடம்பெற்றிருக்கும் செயின் பறிப்பு காட்சிகளை மறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் படம்பிடித்தபோது நடிகர்களை நிஜமான செயின் திருடர்கள் என்று நினைத்து பொதுமக்கள் வளைத்துப்பிடித்து தர்ம அடி கொடுத்ததை மறக்க முடியாது என்கிறார் படத்தின் இயக்குநர். படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், செயின் பறிப்பு காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மறுதணிக்கைக்குச் சென்று படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தாலும் தங்கம் எனும் உலோகத்தின் பின்னணியில் இயங்கும் பல புனிதமான பிம்பங்கள் கிழிபடும் என்கிறார் இயக்குநர். -
இன்று இசை
கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தக் கூட்டணி தற்போது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இந்த இசை இன்று வெளியாவதில் நெட்டிசன்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தப் படத்திலிருந்து ‘தள்ளிப் போகாதே’, ‘ராசாளி’ ஆகிய இரண்டு பாடல்கள் சிங்கிள்களாக வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இன்று எஞ்சிய பாடல்களும் வெளியாகின்றன. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் அறிமுகமாகிறார்.
இன்று ட்ரைலர்
ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் படம் ‘தேவி’. இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படம் தெலுங்கில் ‘அபிநேத்ரி’ என்ற பெயரிலும் இந்தியில் ‘டெவில்’ என்ற பெயரிலும் வெளியாகவிருக்கிறது.ஒரு இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் என்பதால், இன்று வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரைலருக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
அன்றாட காதல் கதை அல்ல
ஒரே நாளில், ஒரே பகுதியில், குடிசை வீட்டிலும் பணக்கார வீட்டிலும் பிறக்கும் இரண்டு குழந்தைகளை, வளரும் சூழல் தோழர்களாக்கி பின் காதலர்களாக்குகிறது. அந்தக் காதலை சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களும் சமூகமும் எப்படி எதிர்கொள்கிறார்கள், படிக்கும் வயதில் காதல் வந்தால் வாழ்க்கையே சிதறும் இதில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டுடன் உருவாகும் காதலின் நிலைமை பற்றிக் கேட்கவே வேண்டாம்.
பிஞ்சுகளின் காதல் கனிந்ததா கசந்ததா என்பதுதான் ‘நட்சத்திர ஜன்னலில்’ படத்தின் கதைக்களம் என்கிறார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜெயமுருகேசன். “இது மீண்டும் ஒரு அன்றாடக் காதல் கதை அல்ல; அதைத் தாண்டி அழுத்தம் திருத்தமாக அதிர்ச்சிகரமாக சில உண்மைகளை உள்ளே வைத்திருக்கிறோம்” என்று அடித்துக் சொல்கிறார். அபிஷேக் குமரன் நாயகனாகவும்அனுபிரியா நாயகியாகவும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.
நூறாவது நாள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘எந்திரன்’ பட இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 16-ம் தேதி தொடங்கியது. இதுவரை நூறுநாட்கள் படப்பிடிப்பை முடித்திருக்கிறதாம் எந்திரன் படக்குழு. தற்போது டெல்லி நேரு ஸ்டேடியத்தில் படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்தச் சண்டைக்காட்சி உட்பட 50% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்வீட் பக்கத்தில் தகவல் பகிர்ந்திருக்கிறார்.
ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கென்னி பேட்ஸ் ஆக் ஷன் காட்சிகளை வடிவமைத்து உருவாக்கிவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஷங்கருடன் முதல்முறையாக நீரவ் ஷா இணைந்து ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி எமி ஜாக்சன். பாலிவுட் நாயகன் அக் ஷய்குமார் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.