தமிழ்த் திரையுலகில் சிறு முதலீட்டுப் படங்களை வெற்றிகரமாகத் தயாரித்து வெளியிட்டு, வரிசையாக வெற்றிகள் கொடுத்து வருவதன்மூலம் பிரபலமானவர் சி.வி.குமார். தற்போது 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் களம் காண்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
‘மாயவனி'ன் கதைக்களம் என்ன?
‘மாயவன்' ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர். தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளை யார், எதனால் பண்ணுகிறார்கள், அதை எப்படித் துப்பறிகிறார்கள் என்பதே கதைக்களம். இது சின்ன சயின்ஸ்- பிக் ஷனும்கூட. கொலையும் அறிவியலும் சந்திக்கும் புள்ளிதான் இதன் திரைக்கதையை டேக் ஆப் செய்கிறது. இப்படம் தரமான த்ரில்லர் பார்த்த உணர்வு கிடைக்கும். எனது தயாரிப்பில் வெளியான படங்கள் போலவே 'மாயவன்' படமும் வித்தியாசமாக இருக்கும்.
தயாரிப்பு அனுபவம் இயக்கத்தில் உதவியதா?
14 படங்களைத் தயாரித்த அனுபவம் படம் இயக்க பெரிய அளவில் உதவியது. இதுவரை என்னுடன் இருந்த குழுவினர் அனைவருமே என்னை ஒரு தயாரிப்பாளராகத்தான் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் என்னை இயக்குநராக ஒப்புக்கொள்வதற்கு அவர்களிடம் நிறைய பேசினேன். தயாரிப்பாளராக என்னைப் பார்த்து பயப்பட ஆரம்பித்திருந்தார்கள் என்றால் வேலை நடந்திருக்காது.
இயக்குநராகத் திட்டமிட்ட பொருட் செலவில் படத்தை முடித்துவிட்டீர்களா?
நாங்கள் படம் ஆரம்பிக்கும்போது என்ன திட்டமிட்டிருந்தோமோ, அந்தச் செலவுக்குள் படத்தை முடித்துவிட்டோம். நட்சத்திரப் பட்டியலில் ஜாக்கி ஷெரஃப் முதலில் கிடையாது, இறுதியாக வந்தார். அவருடைய சம்பளம் மட்டுமே புதிதாகச் சேர்ந்திருக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு முன் திட்டமிடலில் கவனமாக இருந்தோம். அதனால் எனக்குப் படப்பிடிப்பில் எந்தத் தயக்கமும் இல்லை.
அதேபோல ஒரு தயாரிப்பாளராக நான் எந்தவொரு இயக்குநரையுமே ரொம்ப கஷ்டப்படுத்தியது கிடையாது. 500 ரூபாயில் முடியக்கூடிய வேலையை 50 ரூபாயில் முடியுங்கள் என்று சொல்ல மாட்டேன். நான் அந்த மாதிரி பணியாற்றியிருந்தால் என்னுடைய தயாரிப்புப் பணி எப்போதோ அடிவாங்கியிருக்கும்.
ஒரு தயாரிப்பாளராகச் சொல்லுங்கள், தமிழ்த் திரையுலகம் எப்படி இருக்கிறது?
அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஏனென்றால் அனைத்துத் தயாரிப்பாளர்களுமே நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள். இந்த ஆண்டு சுமார் 5 படங்கள் மட்டுமே அனைவருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. பெரும்பாலான படங்கள் முழுமையான நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன. கடுமையான காலத்தில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சி உரிமை இல்லாதது திரையுலகுக்குப் பெரிய இழப்பு. தயாரிப்புச் செலவு மிகவும் அதிகரித்துவிட்டது. திரையரங்கில் டிக்கெட் விலையை அதிகரித்து நீண்ட வருடங்களாகிவிட்டன. ஆனால் 2 முறை திரைப்பட ஊழியர்களுக்குச் சம்பளத்தை உயர்த்திவிட்டோம். நடிகர்கள் சம்பளம், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம், தயாரிப்புச் செலவு உள்ளிட்ட அனைத்துமே உயர்ந்துவிட்டது. ஆனால் வருமானம் குறைந்துகொண்டே போகிறது.. இதைத் தாண்டி ஜெயித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தான் அனைவருமே பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
திருட்டு விசிடி பிரச்சினை எந்த அளவு அச்சுறுத்தலாக இருக்கிறது?
திருட்டு விசிடி பிரச்சினையை முழுமையாக ஒழிப்பது அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. அரசு உதவியில்லாமல் அதை எப்படி ஒழிப்பது என்றே தெரியவில்லை. அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். சட்டப்படி ஒரு விஷயத்தைப் பண்ணினோம் என்றால் சட்ட விரோதமாக இருக்காது. சட்டரீதியாக விசிடியை விற்றால் திருட்டு விசிடி என்பது இருக்காது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரிடமும் தயாரிப்பாளர் சங்கம் பேசி இதற்கான முடிவு எடுக்க வேண்டும். ஒரு படத்தை வாங்குபவர்கள் சட்டரீதியாக விசிடி வெளியிடுவதை விரும்ப மாட்டார்கள். விசிடி வெளியாகும்போது மக்கள் அதைப் பார்த்துப் பழக்கப்பட்டுவிடுவார்கள். இதனை அனைத்துச் சங்கங்களும் பேசித் தீர்வு காண வேண்டும்.
இவ்வளவு பிரச்சினைகளைத் தாண்டி எப்படி வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருகிறீர்கள்?
சிறு வயதில் இருந்தே ஏதாவது தேடி ஓடிக்கொண்டேதான் இருப்பேன். ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டே இருக்க மாட்டேன். இன்றைக்கு இயக்குநராகி இருக்கிறேன், நாளைக்கு இத்துறையில் இல்லாவிட்டாலும் வேறு ஒரு துறையில் ஓடிக்கொண்டிருப்பேன். இன்னும் ஒரு சில நாட்களில் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் ஆரம்பிக்கப்போகிறேன். இந்திய சினிமாவில் யாருமே பண்ணாத விஷயம். நடக்குமா, நடக்காதா, காசு வருமா இல்லையா அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன்.
14 படங்களைத் தயாரித்துவிட்டீர்கள். ஏன் பெரிய இயக்குநர், நடிகரை வைத்து இதுவரை படம் தயாரிக்கவில்லை?
எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அதற்கு நான் இன்னும் நிறைய பயணிக்க வேண்டும். பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை.
- சி.வி.குமார்
படம்: எல். சீனிவாசன்