உலகத் திரைப்பட விழாவில் நாம் காணும் சிறந்த படங்களின் கதைச்சூழல், நடிப்பு, காட்சியாக்கம் ஆகியவை அந்தந்த நாட்டின் மொழி, கலாசார அடிப்படையில் அமைவது இயற்கையே. ஆனால், அப்படங்களின் வாயிலாக நாம் உணரும் மையக் கருத்து, பொதுவான மனித வாழ்வின் அன்றாட நடைமுறைக்கு ஏற்றதாகவே விளங்கும். அத்தகைய படங்களின் திரைக்கதை, ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மறு ஆக்கம் செய்யப்படும்போது மேலும் செழுமையடைகிறது.
பாடலாசிரியர், ஆனந்த் பக்ஷியின் கவி வரிகளில் மிளிர்ந்த ‘கட்டி பதங்க்’ (அறுந்த பட்டம்) என்ற இந்திப் படம் இத்தகு புகழுக்குரியது. சக்தி சாமந்தாவின் இயக்கத்தில் ராஜேஷ் கன்னா-ஆஷா பரேக் நடிப்பில், ஆர்.டி. பர்மன் இசையமைப்பில், இதே பெயரில் குல்ஷன் நந்தா எழுதிய ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தைப் பற்றிய மேலும் சில தகவல்கள் சுவையானவை.
குல்ஷன் நந்தாவின் நாவலின் மூல வடிவத்தை எழுதியவர், ‘வில்லியம் ஐரிஷ், ஜார்ஜ் ஹோப்லி’ என்ற புனைபெயர்களில் பல அமெரிக்க நாவல்களை எழுதிய கார்னெல் வுல்ரிச் என்ற திரைக்கதை ஆசிரியர். No Man of Her Own என்ற பெயரில் பார்பெரா ஸ்டான்விக் நடிப்பில் 1950-ம் ஆண்டு அமெரிக்கத் திரைப்படமாக வெளிவந்த இந்த நாவல், 60-ல் ‘ஷிஷா தோ நூ கெக்கோன்’ என்ற ஜப்பானியப் படமாகவும். 83-ல் ‘ஜெ யே எப்போசி யுனெ ஒம்ப்ரெ’ (I married a Shadow) என்ற பிரெஞ்சுப் படமாகவும், 96-ல் மீண்டும் ஒரு முறை Mrs Winter bourene என்ற ஹாலிவுட் வெளியீடாகவும் 81-ல் ‘நெஞ்சில் ஒரு முள்’என்ற தமிழ்ப் படமாகவும், 87-ல் ‘புன்னாமி சந்துருடு’ என்ற தெலுங்கு படமாகவும் வெளிவந்தது. சூழலின் கட்டாயத்தால் கன்னியாக இருக்கும்போதே, ஒரு விதவையாக வாழும் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த ஆஷா பரேக், காதல் நாயகியாக ஆடும் திறன் மட்டுமின்றிக் கழிவிரக்க உணர்விலும் நடிக்கும் அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய இப்படத்தின் இரண்டு பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை.
‘ந கோயி உமங்க் ஹை, ந கோயி தரங்க் ஹை, மேரி ஜிந்தஹி கியா ஏக் கட்டி பதங்க் ஹை’ என்று தொடங்கும் லதாவின் பாடல் உச்சகட்டக் கழிவிரக்கத்தைப் பெரிய அளவில் வெளிப்படுத்தும் ஓர் அரிய பாடல். எளிய வரிகள். சோகம் கொப்பளிக்கும் மெட்டு ஆகியவற்றுடன் கூடியது இப்பாடலின் பொருள்.
எந்தக் கனவும் இல்லை
எவ்வித நம்பிக்கையும் இல்லை
என்னுடைய வாழ்க்கை –என்ன அது
ஒரு அறுந்த பட்டம்தான்.
விண்ணிலிருந்து அறுந்து ஒரு முறை வீழ்ந்த
என்னை எப்படி இந்த உலகம் கொடுமைப்படுத்தியது
என்பதைப் பற்றி எதுவும் கேட்காதே.
எவருடைய துணையாகவும் நான் இல்லை
எவரும் எனக்குத் துணையாக இல்லை.
கனவுகளின் தேவனான உனக்கு
நான் எதை அர்ப்பணிப்பேன்?
இலையுதிர் காலத்தின் நிழல் நான்
கண்ணீர்த் துளிகளின் ஒரு கண்ணாடி (நான்)
இதுதான் என் ரூபம் இதுதான் என் அழகு
எந்தக் கனவும் இல்லை
எவ்வித நம்பிக்கையும் இல்லை
என்னுடைய வாழ்க்கை –என்ன அது
ஒரு அறுந்த பட்டம்தான்.
‘காகித ஓடம், கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்.’ ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்’ என்ற வரிகளில் கலைஞர் கருணாநிதி ‘மறக்க முடியுமா?’ படத்துக்காக எழுதிய அதீத கழிவிரக்க உணர்வை வெளிப்படுத்தும் தமிழ்ப் பாடல் இங்கு நினைவுக்கு வருவது குறிப்பிடத் தகுந்தது.