இந்து டாக்கீஸ்

வசூல் களம்: சிங்கம் 3-ன் வசூல் சிதறியது ஏன்?

முத்து

தமிழ் திரையுலகில் பட விநியோகத்துக்கு என்று தனியாக நிறுவனம் ஒன்று கிடையாது. சில தயாரிப்பாளர்களே, விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள். முதல் முறையாகப் பட விநியோகத்துக்கு என ‘சக்தி பிலிம் பேக்டரி' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் சக்திவேலன். அவருடன் பேசியதிலிருந்து...

ஏன் இப்படி ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?

15 ஆண்டுகளாக ‘ஸ்டூடியோ க்ரீன்' உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் விநியோகத் துறையில் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தியுள்ளேன். இக்காலகட்டத்தில் கவனித்த விஷயம் பல நல்ல திரைப்படங்கள் ஒழுங்கான வெளியீட்டினைப் பெறாமல் தோல்விகளைத் தழுவின.

உலக நாடுகளில் உள்ளது போன்று திரைப்பட விநியோகத்திற்கான நிபுணத்துவம் உள்ள நிறுவனங்கள் இருந்திருந்தால் தோல்விகளைத் தவிர்க்க இயலும் என்ற எண்ணம் நீண்டகாலமாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு சினிமா ரசிகன். வியாபாரத்துக்கும், நல்ல சினிமாவிற்கும் சம வாய்ப்பளித்து திரைப்படங்களை வெளியிடும் முயற்சியாக இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்.

சினிமா விநியோகத்தில் நிலவும் சிக்கல் என்ன?

மற்றத் தொழிகளில் இல்லாத ஒரு அதிசயமான நடைமுறை திரைப்பட விநியோகத்துறையில் உள்ளது. தயாரிக்கப்படுகின்ற எந்தப் பொருளுக்கும் தயாரிப்பு நிறுவனம்தான் அப்பொருளை வாங்குபவர்களூக்கு உத்திவிரவாதமளிக்கும். திரைப்படத் துறையில் மட்டும் தயாரிப்பாளருக்கு அத்திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களால் உத்திரவாதமளிக்கும் நடைமுறை உள்ளது.

மேலும், தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க எடுத்துக் கொள்ளும் சிரத்தையில் ஒரு சிறிய அளவு சிரத்தை மட்டுமே வெளியீட்டிற்குத் தருகின்றனர். இது தவிரத் திரையரங்குகளைப் பொறுத்தமட்டில் 85% சிறு முதலீட்டு வளர்ந்து வரும் படங்களை வெளியிடத் தேவையான உள்கட்டமைப்பு தற்பொழுது இல்லை. 100 முதல் 200 வரையிலான இருக்கைகள் கொண்ட திரையரங்கங்கள் அதிகரிக்கும் பொழுதுதான் அனைத்துத் திரைப்படங்களுக்கும் நல்ல வெளியீட்டினைப் பெற இயலும்.

அதிகமான திரையரங்குகளில் வெளியீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பெற இயலும் என்ற தவறான புரிதல் இங்குள்ள பல தயாரிப்பாளர்களுக்கு உள்ளது. திரைப்படத்தின் தன்மையறிந்து பொருத்தமான திரையரங்கத்தில் வெளியிடும் பொழுதுதான் வெற்றிகிட்டும் என்பதை அவர்களுக்கு விளங்கச் செய்வதே எங்களுக்கு மிகப்பெரிய சவாலான பணியாக உள்ளது.

வெளியீட்டுத் தேதி அறிவித்தும், சில படங்கள் சொன்ன தேதியில் வெளியிட முடிவதில்லையே. என்ன காரணம்?

முன்கூட்டியே தேதியை அறிவித்துத் திரைப்படத்தை வெளியிட வேண்டுமெனில் அந்தத் தேதிக்குச் சில மாதங்களுக்கு முன்பே தயாரிப்புப் பணியினை முடிக்க வேண்டியுள்ளது. பெரிய முதலீட்டு படங்கள் முதலீட்டிற்கான வட்டி உள்ளிட்ட சில நடைமுறை காரணங்களால் படம் தயாரானவுடன் நல்ல வெளியீட்டு தேதியினைத் தேர்ந்தெடுத்து வெளியிடவேண்டியிருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. பெரிய முதலீட்டுப் படங்களின் வெளியீட்டு தேதியைப் பொறுத்தே சிறு முதலீட்டுப் படங்களின் தேதி அமைவதனால் வெளியீடு தேதியில் மேலும் குழப்பம் ஏற்படுகின்றது. முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, வர்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம் முதலான காரணங்களால் சமீப காலத்தில் வெளியீட்டுத் தேதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

‘சிங்கம் 3' 200 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதன் அடிப்படையில் கூறினீர்கள்? அதுவும் சமூகவலைத்தளத்தில் விவாதிக்கப்பட்டதே..

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சூரியாவின் மார்க்கெட் அளவையும் ‘சிங்கம் 3' திரைப்படத்துக்குத் தென்னிந்தியாவில் இருந்த எதிர்பார்ப்பையும் கணக்கில் கொண்டு அத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தேன். குழப்பமான அரசியல் சூழல் காரணமாக எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் மற்ற மொழிகளில் நல்ல வசூலையும், தமிழகத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு பிடித்த திரைப்படமாகவும் ‘சிங்கம் 3' இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது

SCROLL FOR NEXT