தமிழகத்தின் மாபெரும் இசையமைப்பாளர் இளையராஜாவைத் திரைக்கதைக்காகவும் இசைக்காகவும் 50 முறைக்கு மேல் பார்க்க வைத்த படம். திரைக்கதைக்கு ஒரு சிறந்த பாடம் என்று கமல்ஹாசன் தொடங்கி உலக சினிமாப் படைப்பாளிகள் வியக்கும் திரைப்படம் இது.
குழந்தை இசை மேதையாக இருந்து 35 வயதுக்குள் சிம்பொனிகளையும் ஒபெரா இசை நாடகங்களையும் படைத்து அகாலத்தில் இறந்துபோன மொசார்ட்டின் வாழ்க்கையையொட்டி மிலோஸ் போர்மென் இயக்கிய ‘அமெடியஸ்’ திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவடைகின்றன. யார் இசைத்தார்கள் என்றே தெரியாமல் உலகின் சகல மூலைகளிலும் இன்றும் பொதுமக்களால் ரசிக்கப்படுபவர் மொசார்ட்.
18-ம் நூற்றாண்டில் வியன்னாவில் வாழ்ந்த இசைமேதையான மொசார்ட்டின் சமகால இசைக் கலைஞர் சலேரி. அவரை எதிர்மறைக் கதாபாத்திரமாக்கிப் புனையப்பட்ட பீட்டர் ஷாஃபரின் நாடகம்தான், இயக்குநர் மிலோஸ் போர்மனின் திரைக்காவியமாக ஆனது.
சமயப் பற்றும் ஒழுக்கமும் தனது கலைக்கும் உயர்வுக்கும் தேவையானவை என்பதை நம்பியவர் அந்தோணியோ சலேரி. தொடர்ந்த பயிற்சி, புலனடக்கம், என அர்ப்பணிப்போடு தனது இசையை மெருகேற்றியவர். ரோமானியப் பேரரசர் இரண்டாம் ஜோசப்பின் அவையில் இசை வித்வானாகப் பணியாற்றியவர்.
வயதில் மூத்தவரும் கோமானின் பண்புகளும் கொண்ட மொசார்ட் அவரது வாழ்க்கையில் நுழைந்தார். ஒழுக்கங்கள், பொது நாகரிகங்கள் குறித்துக் கவலையேயில்லாதவரும், கிறுக்குத்தனம் நிறைந்தவரும் வயதில் சிறியவருமான மேதை மொசார்ட்டின் குறுக்கீடும் அதனால் சலேரிக்கு ஏற்படும் பொறாமையும்தான் ‘அமெடியஸ்’ படத்தின் மையக்கதை.
‘அமெடியஸ்’ ஓர் இரவுக்காட்சியில் தொடங்குகிறது. மொசார்ட்டின் புகழ்பெற்ற ‘எ லிட்டில் செரனேட்’ இசைத்துணுக்கு ஒலிக்க மொசார்ட்டை மரணத்துக்குத் தள்ளியதால் குற்றவுணர்வுக்குள்ளான அந்தோணியோ சலேரி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.
தன் துயரங்களைக் கேட்டு, தனக்கு விடுதலையளிக்க வரும் பாதிரியாரிடம் பேசத் தொடங்குகிறார் சலேரி. தான் இசையமைத்ததில் புகழ்பெற்ற ஒரு இசைத்துணுக்கை வாயில் இசைத்து பாதிரியாரிடம் ‘யார் இசை இது?’ என்று கேட்கிறார். பாதிரியார் உதட்டைப் பிதுக்குகிறார். மொசார்ட்டின் இசைத்துணுக்கை இசைத்து யார் என்று கேட்க பாதிரியாரின் முகம் பிரகாசமாகி மொசார்ட்டின் பெயரைச் சொல்கிறார்.
மரணத்துக்குப் பிறகு நித்தியத்துவத்தை அடைந்துவிட்ட அந்த இளம் மேதையை எண்ணிப் புழுங்கி முகத்தைப் பிதுக்குகிறார். மொசார்ட்டின் வருவாய் வாய்ப்புகள் அனைத்தையும் பறித்து, அவரை மரணத்தை நோக்கிய தள்ளிய அதே சலேரிதான், மொசார்ட்டின் இசையைக் கடவுளின் இசை என்று கொண்டாடுகிறார்.
சலேரியாக நடித்த முர்ரே ஆப்ரகாம், தன் பொறாமை வழியாகவே மொசார்ட்டின் திறமையை முழுமையாக அங்கீகரித்து நேசித்த ஒரே சக இசைக்கலைஞனாக இந்தப் படத்தில் வாழ்ந்திருப்பார்.
தான் தினசரி வணங்கும் கடவுள், நல்லொழுக்கத்துடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் உள்ள தனக்கு மாபெரும் இசையை வரமாக வழங்காமல், ஏன் ஒழுக்கமேயற்ற போக்கிரியான மொசார்ட்டைக் கொண்டு தோற்கடிக்கிறார் என்று சலேரி கேவும்போது பார்வையாளனுக்கு சலேரி மீது அனுதாபமே ஏற்படும்.
ஒபெரா என்ற இசை நாடகம் அன்று உயர்குடி மக்களிடையே செலுத்திய தாக்கம் அழுத்தமாகப் படத்தில் பதிவாகியுள்ளது. சினிமா என்ற கலை சாதனத்தை மேற்கத்தியர்கள் அத்தனை இயல்பாகப் பயன்படுத்தியதற்குக் காரணமாக சினிமாவுக்கு முன்னர் ஒபெரா இசை நாடகங்கள் இருந்திருக்கலாம்.
சராசரிக்கும் குறைவானஉயரமே கொண்ட மொசார்ட் இறக்கும்போது, அவரை இந்த பூமி வாங்கியது மிகச் சிறிய மரச்சவப்பெட்டியாகத்தான். ஆனால், கீர்த்தியில் உயர்ந்து கொண்டே போகும் மொசார்ட்டின் புகழ் இருக்கும் வரைக்கும், ‘அமேடிய’ஸின் புகழும் நிலைத்திருக்கும்.
தொடர்புக்கு:
sankararamasubramanian.p@thehindutamil.co.in