ஒரே அறையில் தான் மொத்தப் படமும். 12 பேர் விவாதம் புரிந்து கொண்டேயிருக்கிறார்கள். இறுதியில் தீர்வுபெற்று எழுந்து போகிறார்கள். 1957-ல் வெளிவந்த கறுப்பு வெள்ளைப் படம். இது வரை மொத்தம் 56 முறை முழுமையாகப் பார்த்துவிட்டேன்.
சில முறை பயிற்சிக்காகத் திரையிடுகையில் ‘இது என்ன ஒரு தொழில் உபாதை? இம்முறை பார்க்க வேண்டாமே..?’ என்றுதான் தோன்றும். முதல் காட்சி பார்த்ததும் விறுவிறுப்பு விஷம் போல ஏறிக்கொள்ளும்.
ஸிட்னி லூமட் எடுத்த முதல் படம் இது. நாடகமாகவும், தொலைக்காட்சிப் படமாகவும் வெற்றி கண்ட கதையைத் திரைப்படமாக்க இவரைப் பணிக்கின்றனர் ரெஜினால்ட் ரோசும் ஹென்றி ஃபோண்டாவும். ரோஸ் எழுத்தாளர். ஃபோண்டா நடிகர். இருவரும் சேர்ந்து தயாரித்த படத்தில் ஹென்றி ஃபோண்டாதான் நாயகன்.
நாயகன் என்றால் நிஜமான ஆக்ஷன் ஹீரோ. சத்தமாகப் பேசாமல், சீறிப் பாயாமல், ரத்தம் பார்க்காமல், காதல் செய்யாமல் எப்படி ஒரு ஆக்ஷன் ஹீரோ? படம் முடிந்தவுடன் நிச்சயம் உங்களுக்கு அவர் அப்படித்தான் தோன்றுவார். அதுதான் ஸிட்னி லூமட்டின் வெற்றி. 2005-ல் வாழ் நாள் சாதனையாளர்களுக்கான ஆஸ்கர் விருது ஸிட்னி லூமட்டிற்கு அளிக்கப்பட்டது.
18 வயதுப் பையன். அவன் தந்தையைக் கொன்றதாக வழக்கு. முடிவு பெறாத வழக்கு ஜூரியின் தீர்ப்பிற்கு விடப்படுகிறது. 12 பேர்கள் கொண்ட ஜூரி இது பற்றி விசாரித்து அதன் பரிந்துரையைச் சொல்ல வேண்டும்.
ஏக மனதுடன் எடுக்கப்பட வேண்டிய இந்த முடிவைக் கோர்ட் எடுத்துக்கொண்டு அதற்கேற்பத் தீர்ப்பு வழங்கும். குற்றவாளி என்றால் மரண தண்டனை நிச்சயம். நிரபராதியா, குற்றவாளியா என்று தீர்மானிக்கும் பொறுப்பு ஜூரியுனுடையது.
12 சாமானியர்கள்
ஜூரியில் உள்ள 12 பேரும் சாமானியர்கள். பங்குச் சந்தை தரகர், கட்டடக் கலை நிபுணர், குப்பத்தில் வசிப்பவர், வங்கி ஊழியர், விளம்பர மேலாளர், கடிகார உற்பத்தியாளர், பேஸ்பால் ரசிகர் என முற்றிலும் வெவ்வேறு தொழில் புரிபவர்கள்.
இந்த வழக்கு பற்றி மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து “ஏக மனதாக” முடிவெடுக்க வேண்டும். இந்தச் சிக்கல்தான் கதை.
வழக்கின் போக்கை முழுவதும் கவனித்த குழு முதலில் வாக்கெடுப்பு நடத்துகிறது. “குற்றவாளி” என்று கருதுபவர்கள் கையைத் தூக்குகிறார்கள், 12-ல் 11 பேர். நாயகன் ஃபோண்டா மட்டும் கை தூக்கவில்லை. “அவன் நிரபராதி என்று நம்புகிறீர்களா?” என்று கேட்டபோது, “எனக்கும் தெரியாது.
ஆனால் எதையும் சரியாக விவாதிக்காமல் ஒரு பையனுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுப்பது சரியல்ல. அதனால் பேசுவோம், அதன் பிறகு முடிவெடுப்போம்!” என்கிறார்.
அவன் குற்றம் செய்திருப்பான் என்று ஒவ்வொருவரும் விளக்குகையில் அவர்களின் பிழையான கண்ணோட்டங்கள் தெரிகின்றன. சந்தேகத்திற்கு இடம் இல்லாத அளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தாலொழிய குற்றவாளி எனப் பரித்துரைக்கக் கூடாது என்கிறது சட்டம்.
ஆனால், பழி உணர்ச்சி, எளியோர் பற்றிய கீழான எண்ணம், அக்கறையின்மை, சார்புத்தன்மை, வறட்டுப் பிடிவாதம் எனப் பல காரணங்களால் இந்த “ஏக மனதான” முடிவு தள்ளிப் போகிறது. அனைவரையும் மனம் மாற்றி உண்மையை நோக்க வைக்கும் நாயகனின் முயற்சிதான் கதை.
உச்சகாட்சியின் ஒரு இழை தமிழில் “கௌரவம்” படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது.
இது ஏன் சிறந்த படம்?
அற்புதமான திரைக்கதை, மனதில் காட்சிப்படுத்தக்கூடிய வசன மொழியின் எளிமை, பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு, கச்சிதமான நடிப்பு, நம்பத் தகுந்த அரங்க அமைப்பு, அளவான இசை என எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டும். ஆனால் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் வின்சன்ட் அவர்கள் ‘சொன்னது நீ தானா?’ பாடல் ஒளிப்பதிவில் புரிந்த ஜாலம் இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் பார்க்கலாம். ஒரே அறைக்குள் ஆர்ப்பாட்டம் இல்லாத புதிதான, ஆனால் யதார்த்தமான காட்சி அமைப்பு கூடுதல் சிறப்பு.
இதைப் பரிந்துரைக்கக் காரணம்? கதையின் கரு. அதை நேர்மையாகப் படமாக்கியிருக்கும் துணிவு. ஒரு குழு திறந்த மனதுடன் செயல்பட்டால் அது பெரும் மாற்றத்தைத் தோற்றுவிக்கும். இங்கு ஒரு உயிர் காக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், ஆட்சி மன்றங்கள், மக்கள் அமைப்புகள், தொழில் அமைப்புகள் என அனைத்தும் ஜனநாயகத்தின் விழுமியம் புரிந்து செயல்பட்டால் வன்முறைக்கு ஏது இடம்?
நாயகன் என்பவன் சர்வ சக்தி படைத்தவன் அல்ல. ஒரு பிரச்சினையைத் திறந்த மனதுடன் பார்க்கத் தெரிந்தவன். மற்றவர்களைப் பார்க்க வைப்பவன். அதன் மூலம் சில செயல்பாடுகளை மாற்ற வழி வகுப்பவன். நிஜமான நாயகர்களைத் திரையில் காட்டக்கூடிய துணிவு இந்தப் படத்தைப் பார்க்கையில் வருகிறது.
ஆங்கிலம் தெரியாத பல குழுக்களுடன் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. மொழி அறியாமை அவர்கள் காட்சி அனுபவத்தைப் பழுதுபடுத்தவில்லை. இந்தப் படத்தைப் பல நிறுவனப் பாடங்களுக்கும் மனித வளப் பயிற்சிகளுக்கும் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறேன். என் பல்வித முனைப்புகளை, ஆர்வங்களை ஒன்று சேர்த்த இணைப்புப் புள்ளி இந்தத் திரைப்படம் எனலாம்.
இந்தியில் இதைத் தொலைக்காட்சிப் படமாகப் பங்கஜ் கபூர் எடுத்திருந்தார். தமிழில் ஒரு நடிகரை மனதில் வைத்து இதற்குத் திரைக்கதை எழுதினேன். அவர் மறைவு என் கனவைக் கலைத்து விட்டது.
அந்த நடிகர் ரகுவரன்!
gemba.karthikeyan@gmail.com