இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: எதைச் சுடுகிறது தீ வண்டி? - தீ வண்டி (மலையாளம்)

ஆர்.ஜெய்குமார்

இன்றைக்கு மலையாள சினிமா, இதுவரை அது நிலைத்திருந்த நிலத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுவிட்டது. ஒடுவில் உண்ணிகிருஷ்ணன், சங்கராடி, ஜெகதி, கரமணை ஜனார்த்தனன். திலகன் போன்ற பல கதாபாத்திரங்களின் கூட்டுக் களியாக இருந்த சினிமா, இன்று ஒரே ஒரு கதாபாத்திரத்துடன் குறுகிவிட்டது.

இதற்கு மாறாக ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ போன்ற சில படங்கள் அபூர்வமாக வெளியாவதுண்டு. அப்படியான கதாபாத்திரங்களின் கூட்டுக் களி என ‘தீ வண்டி’யைச் சொல்லலாம்.

தீ வண்டி என்பது இந்த சினிமாவின் முதன்மைக் கதாபாத்திரத்தின் பட்டப் பெயர். தமிழில் புகைவண்டி எனப் பெயர்க்கலாம். எப்போதும் புகை விட்டுக்கொண்டிருக்கும் நாயகன்தான் படத்தின் மையம். அவனது புகைப்பிடிக்கும் பழக்கம்தான் கதையைச் சுழற்றும் சக்கரம். இத்துடன் புள்ளிநாடு என்னும் கடற்கடை கிராமத்தின் ஒரு கதையைச் சொல்ல அறிமுக இயக்குநர் ஃபெலினி டி.பி. முன்றுள்ளார். அந்த மண்ணின், மனிதர்களின் தனித்துவமான குணநலன்களைச் சுவாரசியத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள படம் முயன்றுள்ளது.

டோவினோ தோமஸ் நாயகனாக நடித்துள்ளார். பிருத்விராஜூக்குப் பிறகு மிகப் பெரிய ஓபனிங் உள்ள நாயகனாகியிருக்கிற டோவினோ படத்துக்குப் பெரும் பலம். விளையாட்டுச் சாகசமாகத் தொடங்கி, சிகரெட் பிடிப்பதில் தீவிரம் ஆவது வரை டோவினோ பாதகமில்லா நடிப்பை வெளிப்படுத்தி யிருக்கிறார். கேரளத்தின் ‘இம்ரான் ஹஸ்மி’ என்ற செல்லப் பெயருக்கு நியாயம் செய்யும் காட்சிகளும் படத்தில் உண்டு.

புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு நாயகன் மெல்ல மெல்ல அடிமையாவதைப் படம் சொல்லியிருக்கிறது. அதை ஆவணப்படத் தன்மை இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். பிரசித்திபெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ பிறந்தபோது செவிலி, குழந்தை இறந்து பிறந்துள்ளதாக நினைத்திருக்கிறார்.

thirai 2jpgஃபெலினி டி.பி.

அந்த அறையிலிருந்த சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த பிக்காசோவின் தாய்மாமன், புகையைக் குழந்தையின் முகத்தில் ஊதியுள்ளார். இறந்ததாக நினைத்த குழந்தை விழித்துக்கொண்டுள்ளது. நாயகனின் சிகரெட் பைத்தியத்துக்குக் காரணம் கற்பிக்க, பிக்காசோவின் இந்த வாழ்க்கைச் சம்பவத்தை இந்த சினிமா சுவீகரித்துக் கொண்டுள்ளது.

தன் காதலியின் இதழ்களைவிட சிகரெட் புகையையே முக்கியம் எனத் தீர்மானிக்கும் நிலைக்கும் போய்விடுகிறான் நாயகன். சிகெரட் பிடிப்பதில் உள்ள உன்மத்தத்தை சினிமா அசலாகச் சித்திரித்துள்ளது. சிகரெட் பிடிக்க முடியாத ஒரு சூழலில் நாயகன், கொசுவத்திச் சுருளைச் சுவாசிக்கிறான்.

ரஞ்சித் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘ஸ்பிரிட்’ படத்தில் குடியின் பல பரிணாமங்களைச் சொல்லியதுபோல இந்தப் படமும் புகை பிடிப்பதை விவரித்துள்ளது. ஆனால் ‘ஸ்பிரிட்’டின் முதல் பாதி குடியைக் கொண்டாடியது. இந்தப் படம் அதைப் பாதகமாகச் சொல்லியிருக்கிறது. கின்னஸ் சாதனைக்காக 8 பாக்கெட் சிகரெட்டை ஒரே வாயில் டோவினோ குடிக்கும்போது பதற்றம்தான் வருகிறது.

ஆனால் தீவிரமான ஒரு விஷயத்தைக் கதையின் மையமாகக் கொண்டுள்ள இந்தப் படம், அதைச் சொல்வதற்கான விவரிப்பை நகைச்சுவையாகக் கையாண்டிருக்கிறது. இயக்குநர் சித்திக்கின் திரைக்கதை பாணியை ஒத்தது இந்த அம்சம்.

இது சினிமா நகர்வதற்கான உயவுப் பொருளாகப் பயன்பட்டுள்ளது. இம்மாதிரியான படங்கள் கையாள்வதற்கு கொஞ்சம் சிரமமானவைகூட. சற்று கூடினாலும் அரசாங்கப் பிரச்சாரப் படமாக மாறுவதற்கான பாதகமும் உண்டு. இந்தச் சவாலில் சினிமாவின் வெற்றி கேள்விக்கு உரியதாகிறது.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

SCROLL FOR NEXT