இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: கவிஞனின் கடைசி காலம்

எஸ்.சுமன்

ஆஸ்கர் வைல்டு என்ற உலகம் கொண்டாடும் ஆங்கிலக் கவிஞனின் உருக்கமான கடைசி காலத்தைப் பதிவுசெய்கிறது ‘த ஹேப்பி பிரின்ஸ்’ திரைப்படம்.

நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் என பல கலை முகங்கள் ஆஸ்கர் வைல்டுக்கு உண்டு. தனது கற்பனைத் திறனுக்காகவும் மொழிப் புலமைக்காகவும் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட்டு, ஒரு பிரபலமாக வாழ்ந்தவர். ஆனால், எவரும் அறியாத நிழல் முகம் ஒன்றையும் நெடுநாள் அவர் மறைத்து வைத்திருந்தார். மனைவி, இரு மகன்கள் என சொந்தக் குடும்பத்துக்கு அப்பாலும் அவரது நேசம் ஆல்பிரட் டக்ளஸ் என்ற ஆண் நண்பர் மீது படர்ந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தன்பாலின ஈர்ப்பு என்பது கொடுங்குற்றம். கவிஞர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். தூக்கிக் கொண்டாடிய மக்களால் கடும் தூற்றுதலுக்கும் ஆளானார். விடுதலையானதும் அவமானம் தாங்காது பிரான்சுக்குத் தப்பிச் சென்றார். பின்னர் தன் நண்பனுடன் கைகோத்தார். ஆனால் நகைச்சுவை ததும்பும் எழுத்துக்குச் சொந்தக்காரரைத் துயரம் தொடர்ந்து துரத்தியது. வசதியிழந்து நொடித்துப் போனவரை 46 வயதில் மூளைக் காய்ச்சல் விழுங்க ஆரம்பித்தது. ஆனால், அந்த நிலைமையிலும் அவர் இங்கிலாந்து திரும்புவதை நிராகரித்தார். புறவுலகம் புரிந்துகொள்ள மறுத்தாலும் நண்பனுடனான நேசத்தைத் தொடர்ந்தார்.

ஆஸ்கர் வைல்டின் இந்தக் கடினமான கடைசிக் கட்ட வாழ்க்கையின் வாயிலாக, பாலின சிறுபான்மையினரின் உணர்வுகளை அவர்கள் புறக்கணிக்கப்பட்ட காலத்திலிருந்து எதிரொலிக்கிறது ‘த ஹேப்பி பிரின்ஸ்’.

எழுதி இயக்கியதுடன் ஆஸ்கர் வைல்டாக படத்தில் தோன்றுகிறார் ரூபர்ட் எவரெட். இவருடன் எமிலி வாட்ஸன், காலின் மோர்கன் எனப் பலர் உடன் நடித்துள்ளனர். அக்டோபர் 5 அன்று ‘த ஹேப்பி பிரின்ஸ்’ வெளியாகிறது.

SCROLL FOR NEXT