இந்து டாக்கீஸ்

சமூக வலை: மீண்டும் ஒரு பாடல்

ஆர்.சி.ஜெயந்தன்

காட்சிகளின் உலகமாய் மாறிவரும் நவீன வாழ்க்கையில் சமூகக் காணொலித் தளங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இடம் மிகப் பெரியது. அவற்றில் இனம், மொழி என வேறுபாடுகளைக் கடந்து ஈர்ப்பதில் இசை வீடியோக்கள் தனியிடம் வகிக்கின்றன.

அந்த வகையில் யூடியூப் இணையத்தில் இளைய தலைமுறையை வெகுவாகக் கவர்ந்து வரும் பிரிவு ‘எலெக்ட்ரானிக் இசை’. இப்பிரிவில் அதிகப் பார்வையாளர்களைச் சென்றடையும் இசை வீடியோக்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிமுகக் கலைஞர்கள் அல்லது ‘பாப்புலர் ஆர்ட்டிஸ்ட்’ என்று கொண்டாடப்படும் புகழ்பெற்றுவிட்ட பன்னாட்டுப் பாடகர்கள் மற்றும் சுயாதீன இசைக் கலைஞர்களின் படைப்புகள்தாம்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய சுயாதீன இசைக்கலைஞர்கள், வெகுஜனத் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல் இசை ஆகியவற்றுக்கும் உலகப் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்புக் கிடைத்துவிடுகிறது. ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் யூடியூபில் 518 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான ‘ரௌடி பேபி கவர்’ (Rowdy baby Cover) வெர்சன்கள், டாக்கிங் டாம் வெர்ஷன் என ‘ரௌடி பேபி’ பாடலைப் பல்வேறு விதங்களில் மீள் ஆக்கம் செய்யும் வீடியோக்களும் அதிகப் பார்வையாளர்களைப் பெற்றுக் குவிந்து கிடக்கின்றன.

இவை உலகம் முழுவதும் வாழும் இசையார்வம் கொண்ட தமிழர்களால் செய்யப்படுகின்றன. ஆனால், தமிழ் அறியாத வெளிநாட்டவர்கள் இந்தப் பாடலை பார்த்து ரசிக்கும் ‘ரௌடி பேபி சாங் ரீயாக்‌ஷன்’ (Rowdy Baby Song reaction) வீடியோக்கள், யுவன் ஷங்கர் ராஜா எனும் இசையமைப்பாளரைப் பற்றி வெளிநாட்டவர்களை கூகுள் செய்ய வைத்திருக்கின்றன.

அளவான துள்ளலும் கொஞ்சமாய் மெலடியும் கைகோத்துக்கொண்டிருக்கும் திருவிழா உணர்வைத் தரும் பாடலின் மெட்டு, அதில் துடிக்கும் தாளத்துடன் கூடிய கவர்ந்திழுக்கும் இசைக் கோவை ஆகியவை உலகளாவிய பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றன.

பாடல் இடம்பெறும் சூழலுக்கு ஏற்ற வரிகள் மற்றும் குரல்களைச் சரியாக ஒருங்கிணைப்பதில் வல்லவர் என்பதை யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் ‘ரௌடி பேபி’ பாடல் மூலம் காட்டியிருக்கிறார்.

இந்தப் பாடல் மூலம் சர்வதேச வெளிச்சம் பெற்றுக்கொண்டிருக்கும் தனுஷையும் – சாய் பல்லவியின் நடனம் மற்றும் முக அசைவுகளையும் வீடியோக்களில் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் வெளிநாட்டினர்.

ரௌடிபேபி பாடலைக் காண:

SCROLL FOR NEXT