இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: புதிய தடத்தில் ஸ்ருதி

செய்திப்பிரிவு

புதிய தடத்தில் ஸ்ருதி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துவரும் படம் ‘லாபம்’ அதில் கதாநாயகியாக நடித்துவரும் ஸ்ருதி ஹாசன் திரை நடிப்பிலிருந்து புதிய தடத்தில் நுழைந்திருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான யூ.எஸ்.ஏ. நெட்ஒர்க் தயாரித்துவரும் 'டிரெட்ஸ்டோன்' (Treadstone) என்ற தொலைக்காட்சித் தொடரில் நீரா படேல் என்ற ரகசியக் கொலையாளி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் சர்வதேச நகர்வுகளைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

சிறகின் இசை!

கவிஞர், பாடலாசிரியர் குட்டி ரேவதி எழுதி இயக்கியிருக்கும் ‘சிறகு’. படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மானும் மணிரத்னமும் வெளியிட்டிருக்கிறார்கள். இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் அரோல் கரோலி, “இசையமைப்பதற்கு முன் படத்தின் திரைக்கதையைப் படிச்சதும் ஒரு பயணம் போன மாதிரி இருந்தது.

இந்தப் படத்துக்கு இசையமைத்த நாட்களை மறக்கமாட்டேன். நான்தான் அப்படியா என்றால், ஒளிப்பதிவாளர் ஹரி கிருஷ்ணன் நாம் இழந்த உணர்வுகளை கேமரா வழியே கொண்டுவந்து கொட்டிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானையும், மணிரத்னத்தையும் சந்தித்தது மறக்க முடியாத தருணம்” என்றார்.

கைகொடுத்த ஜெயம் ரவி

காட்டைக் கதைக்களமாகக் கொண்ட ‘பேராண்மை’, ‘வனமகன்’ ஆகிய படங்களின் கதாநாயகன் ஜெயம் ரவி காட்டை மையமாகக் கொண்ட ‘தும்பா’ படத்துக்குக் கைகொடுத்திருக்கிறார்.

‘யூ’ சான்றிதழுடன் இன்று வெளியாகும் அந்தப் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துக்கொடுத்திருக்கிறார். ‘கனா’ படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன், அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கியிருக்கிறார்.

SCROLL FOR NEXT