டிஸ்னி நிறுவனம் தனது ‘தி லயன் கிங்’ அனிமேஷன் திரைப்படத்தை அதே பெயரில் மறு ஆக்கம் செய்து வெளியிடுகிறது.
வால்ட் டிஸ்னியின் மறுமலர்ச்சிக் காலமான 90-களின் மத்தியில், 1994-ல் 2டி அனிமேஷன் திரைப்படமாக வெளியானது ‘தி லயன் கிங்’. சகோதரனின் அரியணை ஆசைக்கு, காட்டு ராஜாவான முஃபாசா உயிரிழக்கிறார். குற்ற உணர்வுடன் காட்டிலிருந்து வெளியேறுகிறான் முஃபாசாவின் மகனான சிம்பா எனும் குட்டி சிங்கம். சிம்பா வளர்ந்ததும் வில்லனுடன் மோதி புதிய காட்டு ராஜா ஆவதுதான் ‘தி லயன் கிங்’.
அனிமேஷன் ஆக்கத்துடன் இசையும் பாடலும் இணைந்துகொள்ள வெளியான ஆண்டின் வசூலில் சாதனை படைத்தது ‘தி லயன் கிங்’. டிஸ்னி தனது அனிமேஷன் திரைப்படங்களை மறுஆக்கம் செய்துவரும் வரிசையில் தற்போது படம் வெளியான வெள்ளி விழா ஆண்டில் ‘தி லயன் கிங்’ மீண்டும் உலாவர இருக்கிறது.
ரசிகர்களால் லைவ் ஆக்ஷன் திரைப்படமாக மறு ஆக்கம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் ஒருபடி மேலாக என்று சொல்லத்தக்க வகையில் ’ஃபோட்டோ ரியலிஸ்டிக் கம்ப்யூட்டர் அனிமேஷன்’ தொழில்நுட்பத்தின் கீழ் உருவாகியிருக்கிறது.
சட்டகம் தோறும் பழைய திரைப்படத்தின் காட்சிகளைப் புதிதாக உருவாக்கினாலும், திரைக்கதையின் விறுவிறுப்புக்குத் தேவையான மாற்றங்களைச் செய்திருக்கிறார்களாம். ஆஸ்கர் விருது வாங்கித் தந்த அதே ஹான்ஸ் ஸிம்மர் இசை, எல்டன் ஜான் பாடல்கள் என மறு ஆக்கத்திலும் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது.
’தி ஜங்கிள் புக்’ இயக்குநர் ஜான் ஃபெவ்ரோ, தி லயன் கிங்’ மறுஆக்கத் திரைப்படத்தை இயக்கி உள்ளார். டொனால்ட் க்ளோவர், சேத் ரோகன் உள்ளிட்ட பலர் குரல் நடிப்பை வழங்கி உள்ளனர். புதிய ‘தி லயன் கிங்’ ஜூலை 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
‘தி லயன் கிங்’ மறு ஆக்கத் திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் காண: