ஆள் ஆரவாரமற்ற ஒர் வீட்டில் நம்மை வரவேற்றார் இயக்குநர் மணிகண்டன். ‘காக்கா முட்டை', ‘குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' என மூன்று படங்களை மட்டுமே கொடுத்திருந்தாலும் மக்களின் மனம் கவர்ந்தவர். தற்போது 'கடைசி விவசாயி' என்ற தலைப்பில் தனது நான்காவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
“கடைசி விவசாயி’ பற்றி விதவிதமாக செய்திகள் வந்திருக்கு. ஆனால் என் படத்தைப் பற்றிச் சில ஆச்சர்யங்களைச் சொல்றேன்" என்று உற்சாகத்துடன் அவர் உரையாடியதிலிருந்து...
‘கடைசி விவசாயி' படத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?
விவசாயத்தை ஒரு தொழிலாக பார்க்காமல், ஒரு வாழ்க்கைமுறையாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இன்றைக்கு இருக்கிறது என்பதுதான் கதையின் கரு. ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்கவில்லை.
குலதெய்வத்தைக் கும்பிடாமல் இருப்பதுதான் காரணம் என்று முடிவுக்கு வந்து, ஊர் தயாராகும். ஆனால் அதற்கு அனைவரும் ஒரு மரக்கால் நெல் கொடுக்க வேண்டும். அப்போது தான் தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்பது. இருபது வருடமாக குலதெய்வத்தை கும்பிடவில்லை என்பதால், யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இல்லாமல் போய்விட்டது.
அப்போது அந்த ஊரில் வயதான பெரியவர் ஒருவர், சின்ன நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பார். 85 வயது மதிக்கத்தக்க பெரியவர். அவருக்கு காதும் அவ்வளவாகக் கேட்காது.
அவர் உண்டு, கழனியுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் வழிபாடு எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை என அனைத்தும் திரைக்கதையில் இருக்கும்.
படம் காமெடியாக இருக்குமா; சீரியஸாக இருக்குமா?
நாகரிகம் வளர்வதற்கு முன்பு இருந்த மனிதர்களும் நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் கதாபாத்திரங்களாக வரும்போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதனால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது.
படத்தில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள்; எங்கு படமாக்கியுள்ளீர்கள்?
உசிலம்பட்டியைச் சுற்றி பதினாறு கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்பப் பழசு. தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள்தான். அவர்கள் ஆறுகளை நம்பி இருக்கமாட்டார்கள்.
கம்மாய், ஓடை ஆகியவற்றையே நம்பியே இருப்பார்கள். அதற்குச் சாட்சியாக இப்போதும் பலர் இருக்கிறார்கள். அவர்களை கடைசி விவசாயிகளாகத்தான் பார்க்கிறேன். அவர்களோடு விவசாயம் முடிந்துவிட வில்லை.
அடுத்த வட்டம் தொடங்கப் போகிறது. அதில் புதியவர்கள் சேற்றில் கால் வைப்பார்கள். நாம்தான் அவர்களோடு கைக்கோத்து கற்றுக்கொள்ள வேண்டும். இது நம் காலத்து மனிதர்களின் கதை என்பதால் கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன்.
நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். பெருங்காமநல்லூரைச் சேர்ந்த நல்லாண்டி என்பவர்தான் இந்தப் படத்தின் ஹீரோ. விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் இரண்டு கதாபாத்திரங்கள் பண்ணியிருக்காங்க.
ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும். இதுதான் நான் சொன்ன ஆச்சரியம். இருவருக்குமே மெயின் ரோல் கிடையாது. ஆனால் மனதில் நிற்பார்கள். அந்த மாதிரிக் மனதைக் கவரும் நம் காலத்தின் கதாபாத்திரங்கள்.
விவசாயிகளின் பிரச்சினை இன்று முதன்மையானதாக இருக்கிறது. படத்தில் அது தீவிரமாக எதிரொலிக்குமா?
இதுவொரு விவசாயியைப் பற்றிய படம். இது விவசாயப் பிரச்சினையைப் பற்றிய படமே கிடையாது. விவசாயி என்பவன் யார், அவனது மனநிலை என்ன என்பதை சொல்லியிருக்கேன். அதிலிருந்து நீங்கள் அவனுக்கு என்ன அநீதி இழைக்கிறீர்கள் என்பது தெரியவரும்.
அவனை நான் சுத்தமானவாகக் காட்டியிருக்கேன். ஒரு விதை விதைத்துவிட்டு, ஐந்து நாள் அதன் முன்னால் அமர்ந்து அது முளைப்பதைப் பார்க்கும் ஆள். அதை படத்திலும் காட்சிப்படுத்தியிருக்கேன்.
நம்மால் ஒரு இடத் தில் ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக உட்கார முடியாது. ஆனால், விவசாயியுடைய வாழ்க்கை முறை இயல்பாகவே தியானமுறையில் இருக்கும் வாழ்க்கை முறை. இயற்கையோடு வாழ்பவன்தான் விவசாயி. அதைத் தாண்டி அவனால் ஒன்றும் செய்ய முடியாது.
உங்களுக்கும் விவசாயத்துக்குமான உறவு?
என்னோட தாத்தா பெரிய விவசாயி. அவருடைய பெயரைத்தான் இந்தப் படத்தின் நாயகனுக்கு பெயராக வைத்துள்ளேன். நல்ல விவசாயி அவர். சொந்தமாகத் தொழில் செய்து, நிலம் வாங்கி விவசாயம் செய்தவர்.
எனது இரண்டு தாத்தாக்களுமே இறுதிக்காலம் வரை விவசாயம் பார்த்தவர்கள்தான். எனக்கு விவசாயத்தில் தொடக்கம் முதலே ஆர்வமுண்டு. இப்போது சொந்தமாக நிலம் வாங்கி, அதில் விவசாயம் செய்துதான் சாப்பிட்டு வருகிறேன்.
படத்தின் தொழில்நுட்ப குழுவினர் பற்றி...
கதை, திரைக்கதை எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்து தயாரித்திருக்கிறேன். கேரளத்தைச் சேர்ந்த பி.அஜித்குமார் என்பவர் எடிட் செய்திருக்கிறார். இளையராஜா சார் இசை, கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிந்திருக்கிறார்.
ஒரு செட் மட்டுமே ஒண்ணேகால் கோடி ரூபாய்க்கு போட்டுள்ளோம். அஜயன் அதாத், இராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் நேரடி ஒலிக்கலவை செய்திருக்கிறார்கள். ஒரு காட்சிகூட டப்பிங் பண்ணவில்லை.
‘ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?
இந்தக் கதை எழுத நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுற்றியிருக்கிறோம். முந்நூறுக்கும் மேற்பட்ட மண்ணின் மைந்தர்களை நடிக்க வைக்கத் தேர்வுசெய்தோம். அவர்களுக்கு போதுமான அளவு நடிப்பு பயிற்சி கொடுத்து படப்பிடிப்பைத் தொடங்கினேன். 95 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். இதற்கே ஒரு வருடம் ஆகிவிட்டது.
அதேபோல் நெல் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கேமராவில் பதிவு பண்ணியிருக்கோம். அதைச் சுற்றித்தான் படத்தின் கதையே நகரும். இந்தக் கதைக்குள் நாட்டின் பிரச்சினை என்னவென்றே தெரியாத ஒருவரும் இருப்பார், அந்தப் பிரச்சினையை பண்ணுபவர்களும் இருப்பார்கள்.
நான் எப்போதுமே பிரச்சினைக்கான தீர்வுகளாக படங்களைப் பார்ப்பதில்லை. படம் பார்த்து மக்களின் மனநிலை மாறினால்தான் உண்டு. உண்மையைச் சொல்வோம் என்று சொல்லி இருக்கேன். ‘கடைசி விவசாயி' என்றவுடன் சோகப் படம் என்று நினைத்துவிடாதீர்கள். ஓர் அழகான உலகத்தை காட்டியிருக்கேன். அது பார்ப்பவர்களின் ஆழ்மனதுக்குள் சென்று பேசும்.